நீங்கள் அணிந்திருக்கும் சட்டையின் விலை ரூ.300. பேண்டின் விலை ரூ.500. ஷுவின் விலை ரூ.700. வைத்திருக்கும் செல்போனின் விலை ரூ.5000. உங்கள் விலை என்ன?
‘நான் என்ன பொருளா? எனக்கு என்ன விலை இருக்க முடியும்?’ என்று நீங்கள் கோபமாகக் கேட்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால், உங்கள் மாத சம்பளம் என்னவோ அதை 30 ஆல் வகுத்தால் அதுவே உங்கள் ஒரு நாளின் மதிப்பு.
ஒருவேளை, நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால், நீங்கள் வருமான வரிக் கணக்கில் தாக்கல் செய்த ஆண்டு வருமானம் என்னவோ, அதனை 365 ஆல் வகுத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் ஒரு நாள் விலை.
சரி… நீங்கள் உங்களது மதிப்பை இந்த நிலையிலிருந்து எப்படி உயர்த்தலாம்?
நீங்கள் கூடுதல் நேரம் உழைக்கலாம். உங்கள் துறை சார்ந்த வேறு சில திறன்களை அல்லது மென்பொருள்களைக் கற்றுக் கொண்டு, கூடுதல் திறமையை வெளிப்படுத்தி பணி உயர்வு பெறலாம். பொருளை மதிப்பு கூட்டி கூடுதல் விலைக்கு விற்கலாம். புதுமையாக ஏதாவது செய்யலாம். இப்படி உங்கள் மதிப்பை உயர்த்த பல வழிகள் இருக்கின்றன. இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
நான் ஒரே வேலையைத் தான் தொடர்ந்து செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தால் அதே நிலையில்தான் இருக்க முடியும். நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பினால் உயர்வான காரியங்களைச் செய்யவேண்டும்.
உங்கள் விலையை உயர்த்த அடுத்தவரால் முடியாது. உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும்.
பொதுவாக வெற்றி பெற முடியாதவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன தெரியுமா?
‘எங்கள் அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகம்‘
‘என் வளர்ச்சிக்கு யாருமே உதவி செய்வதில்லை‘
‘எவ்வளவுதான் நான் கடினமாக உழைத்தாலும் அது என் முதலாளியின் கவனத்திற்கு செல்வதில்லை‘
‘போட்டி காரணமாக என் தொழிலின் லாபம் குறைந்து கொண்டே வருகிறது‘
‘முதலீடு செய்ய பணம் இல்லாத காரணத்தால் தொழிலை விரிவாக்க இயலவில்லை‘
‘நல்ல ஊழியர்கள் கிடைப்பதில்லை‘
‘பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது‘
‘அரசின் கொள்கைகளால் என் தொழில் பாதிக்கப்படுகிறது‘
‘அன்னிய முதலீடுகள் எங்களை வளரவிடுவதில்லை‘
‘தொழில்நுட்ப வளர்ச்சியால் எங்கள் தொழில் வீழ்ந்து வருகிறது‘
இப்படி பத்து காரணங்கள் அல்ல… பத்தாயிரம் காரணங்களை நீங்கள் பட்டியலிட்டுக்கொண்டே… போகலாம்.
நினைவில் கொள்ளுங்கள், வெற்றியாளர்கள் இதுபோன்ற பிரச்சனைகளைக் கடந்து தான் வந்துள்ளார்கள். அவர்களால் இவற்றிற்கு தீர்வு கண்டு பிடிக்க முடியும் போது உங்களால் ஏன் முடியாது?
வெற்றியாளர்கள் புலம்புவதில்லை; பிறரை குற்றம் சொல்வதில்லை; எதிர்மறையாகச் சிந்திப்பதில்லை. மாறாக, அனைத்து பிரச்சனைகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள்; தம்மை மாற்றிக் கொள்கிறார்கள். வேலையை வெற்றிகரமாக முடிப்பதற்கான வழியை மட்டுமே தேடுகிறார்கள்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் துறையில் உங்களைவிட அதிக விலை மதிப்புள்ள மனிதர்களைப் பட்டியலிடுங்கள். அவர்களுக்கு ஏன் அந்த விலை வழங்கப்படுகிறது என்ற காரணத்தை ஆராயுங்கள். அதுபோன்றோ அல்லது அதிலிருந்து சற்று மாறுபட்டோ வழிகளை வகுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்துங்கள்.