வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒரு அறையில் நான்கு குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையில் உள்ள மின் விசிறியில் சில தொப்பிகள் தொங்க விடப்பட்டிருந்தன. அவற்றை இழுப்பதற்கு வசதியாக உயரமான ஸ்டூல் ஏணியும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நான்கு குரங்குகளில் ஏதேனும் ஒரு குரங்கு, ஏணியின் மீது ஏறத் தொடங்கினால் கீழே உள்ள மற்ற மூன்று குரங்குகளின் மீதும் வெளியில் இருந்து சுடு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால் அந்த மூன்று குரங்குகளும் சேர்ந்து சூடு தாங்காமல், ஏணி மீது இருந்த குரங்கை அடிக்கத் தொடங்கின.
மீண்டும், மீண்டும் எப்போதெல்லாம் ஒரு குரங்கு ஏணியில் ஏறுகிறதோ அப்போதெல்லாம் மற்ற மூன்று குரங்குகளின் மீதும் சுடு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதனால் அவை ஏணி மீது இருந்த குரங்கை அடிப்பதும் தொடர்ந்து நடந்தது.
இதற்கிடையில், உள்ளே இருந்த ஒரு குரங்கு வெளியில் எடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய குரங்கு ஒன்று உள்ளே அனுப்பப்பட்டது. இந்தப் புதிய குரங்கு ஆர்வத்துடன் ஏணி மீது ஏற எத்தனித்தபோது, பிற மூன்று குரங்குகளும் தன் மீது சுடு தண்ணீர் பீய்ச்சப்படுவதற்கு முன்பாகவே அதனை பாய்ந்து அடித்தன. ஏணி மீது ஏறினால் அடி விழும் என்று மட்டும் புரிந்து கொண்டது, புதிய குரங்கு.
இரண்டாவது குரங்கும் மாற்றப்பட்டது. சுடுதண்ணீர் பீய்ச்சப்படாமலேயே ஏணியில் ஏறிய இரண்டாவது குரங்குக்கும் அடி விழுந்தது.
பிறகு மூன்றாவது, நான்காவது குரங்குகளும் மாற்றப்பட்டன. இப்போது உள்ளே தண்ணீர் பீய்ச்சுவது குறித்த விஷயமே தெரியாத நான்கு புதுக் குரங்குகள் இருந்தன. எதாவது ஒரு குரங்கு ஏணியில் ஏறினால் மற்ற மூன்று குரங்குகளும் அதனை பாய்ந்து அடிக்கத் தொடங்கின.
ஆக, இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்த உண்மை என்னவென்றால், ‘காரணங்களைக் கண்டறியாமலேயே நம் முன்னோர் செய்ததை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது குரங்குகளின் மனோபாவம்’ என்பதாகும். இது அப்படியே நமக்கும் தொற்றிக்கொண்டது.
இந்தக் கோணத்தில்தான் நேரத்தைவிட பணமே முக்கியம் என்ற பழைய சிந்தனையை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
உங்களுக்கு நாள்தோறும் இரண்டு மணி நேரம் அதிகமாகக் கிடைத்தால், உங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் அல்லவா? அப்படியானால், பேருந்தில் பயணம் செய்யாமல் பைக் வாங்கிக்கொள்ளுங்கள்; அல்லது பைக்கில் செல்லாமல் கார் வாங்கி டிரைவரை வைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் மிச்சமாகும் நேரத்தில் அதிகப் பணம் ஈட்டலாம்.
இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக வெற்றியாளர்கள் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை. ‘ நல்ல வேலை’ செய்வது என்று தீர்மானித்துவிட்டால், அதற்கு கெட்ட நேரம் என்று எதுவும் கிடையாது. ‘கெட்ட வேலை’ செய்வது என்று தீர்மானித்து விட்டால், அதற்கு நல்ல நேரம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை. இதுதான் அவர்கள் பாலிசி.
அதாவது, நல்ல நேரம் பார்க்க வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. அதேசமயம், நல்ல நேரத்திற்காகக் காத்திருந்து, காத்திருந்து வாய்ப்பைத் தவற விட்டுவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் போன்ற வி.ஐ.பி.களெல்லாம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறபோது அவர்களது ஒவ்வொரு நிமிடமும் எப்படி செலவழிக்கப்படும் என்று திட்டமிடும் வகையில் ‘மினிட் டு மினிட்’ (Minute to Minute) புரோகிராம் உருவாக்கப்படும். இதன் அர்த்தம் என்னவென்றால், அவர்களது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது என்பதாகும்.
நாம் அந்த அளவிற்கு நிமிடவாரியாக நம்முடைய நாட்களைத் திட்டமிடாவிட்டாலும்கூட, மணிவாரியாகவாவது திட்டமிட வேண்டும்.
தூங்குவதற்கு எட்டு மணி நேரம்; அலுவலக வேலைக்கு எட்டு மணி நேரம்; அலுவலகம் சென்று வர இரண்டு மணி நேரம்; குளித்தல், சாப்பிடுதல் போன்ற தினசரி கடமைகளுக்கு இரண்டு மணி நேரம் என ஒதுக்கிக் கொண்டால்கூட, உங்களுக்கு எப்படியும் நான்கு மணி நேரம் நாள்தோறும் மிச்சம் இருக்கும்.
மனிதருக்கு மனிதர் இந்தக் கணக்கு வேறுபடும் என்றாலும், நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ‘திட்டமிடப்படாத காரணத்தால் நாள்தோறும் சில மணி நேரங்கள் – ஃபேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ்அப், இன்டர்நெட், டி.வி., டெலிபோன் அரட்டை, தேவையற்ற விவாதம் என வீணாகக் கழிகின்றன’ என்பதுதான்.
இவற்றுக்கெல்லாம் நீங்கள் நேரமே செலவழிக்கக்கூடாது என்று நாம் சொல்லவில்லை. நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் செலவழித்துவிட்டு, மீதமுள்ள நேரத்தை உங்கள் இலக்கு நோக்கி பயணிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, சனி, ஞாயிறு போன்ற வேலையில்லா விடுமுறை நாட்களில் உங்களது நேரத்தை எப்படி வீணாகாக் கழிக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் கழிக்கலாம் என்று திட்டமிடுங்கள்.