தெனாலி படம் பார்த்திருப்பீர்கள். எதைப் பார்த்தாலும் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார் கமல். நம்மில் பலரும் அப்படித்தான். குறிப்பாக,
பிரச்சனைகளைப் பார்த்து அதிகம் பயப்படுகிற குணம் நமக்கு உண்டு, எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பிரச்சனைகள் வருகின்றன? இந்த ஆண்டவன் கருணை இல்லாதவன்? எவ்வளவு பேருக்கு நான் உதவி இருக்கிறேன்?. எனக்கு ஒரு பிரச்சனை என்கிறபோது, உதவ யாரும் துணை நிற்கவில்லை? என இப்படியெல்லாம் நம்மில் பலர் வெவ்வேறு தருணங்களில் புலம்பியிருக்கிறோம்.
வெற்றியாளர்கள் பிரச்சனைகளைக் கண்டு பயப்படுவதில்லை. பயந்து ஒளிவதற்கு பதிலாக அவற்றை தைரியத்துடன் எதிர்கொள்கிரார்கள். இன்னும் சொல்லப்போனால், வாழ்வில் உயர, உயர பிரச்சனைகளை எதிர்கொள்வது மட்டுமே அவர்களது அன்றாட நிகழ்வாக இருக்கும். கே. பாலச்சந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், தன்னை துரத்தி வரும் நாயைப் பார்த்து பயந்து ஓடும் கதாநாயகி, சற்றே திரும்பி நாயை முறைத்துப் பார்க்க, அது வந்த வழியே ஓடி விடும். ஆம்! பிரச்சனைகளும் நாய்கள் போன்றவைதான். தைரியத்தோடு எதிர்கொண்டால் காணாமல் போகும்.
ஜப்பானியர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்ட கதையைப் பார்ப்போம்.
ஜப்பானியர்களுக்கு உயிருடன் உயிரோட்டத்துடனும் உள்ள ஃபிரஷ்ஷான மீன்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அங்கு உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் நீண்ட தூரம் சென்று பல மணி நேரம் கழித்துத் திரும்புவதால், கரைக்கு வருகிறபோது வலையில் இருந்த மீன்களெல்லாம் வாடி வதங்கி இருக்கும். இதனால், மீன்கள் விற்பனை குறைந்து கொண்டே வந்தது. மீளவர்கள் ஒன்று கூடி இந்தப் பிரச்சனையைத் தீர்க்க என்ன செய்வதென்று ஆலோசித்தனர். அப்போது ஒரு மீனவர் சொன்னார்:
“மீன் தொட்டிகளையே படகில் எடுத்துச் சென்று மீன்களைக் கொண்டு வரலாமே” என்று. இந்த ஐடியா பிடித்துப் போகவே, மீனவர்கள் உயிருடன் மீன்களை கரைக்குக் கொண்டு வந்து
விற்பனை செய்யத் தொடங்கினர். வியாபாரம் அதிகரித்தது. ஆனால், மீன்கள் உயிருடன் இருந்தாலும், நீண்ட தூரம் பயணித்ததால் அவை சோர்வுடன் காணப்பட்டன உயிருடன் இருந்த மீன்கள் உயிர்ப்புடன் இல்லையே என்று ஜப்பானியர்கள் வருந்தினர். மீண்டும் சபை கூடியது. இன்னொரு மீனவர், “மீன் தொட்டிக்குள் ஒரு சுறா மீனை விடலாமே. நாம் பிடிக்கும் நூறு மீன்களில் சுறா மீன் பத்து மீன்களைச் சாப்பிட்டாலும் பரவாயில்லை. அதன் பிடியில் இருந்து தப்ப
பிற மீன்களெல்லாம் ஓடிக் கொண்டே உயிர்ப்புடன் இருக்கும் அல்லவா என்றார்.
இந்த ஐடியா மீனவர்களை கோடீஸ்வரராக்கியது. பிரச்சனைகள் உங்களை வீடு நாடித்தான் வரும் என்று அவசியமில்லை உங்களை வளர்க்கவும் அவையே தூண்டுகோலாக இருக்கின்றன.
அழுத்த, அழுத்த தான் கரியும் தங்கமாகும். அதுபோல், பிரச்சனைகளின்
தீவிரம்தான் உங்களின் அடிமனதிற்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணரும். 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் கல்யாண வீடுகளில் ஐஸ் கிரீம்களை கண்ணாடி கிளாசில் வைத்து தருவார்கள். அந்த கண்ணாடி கிளாஸ்கள் போக்குவரத்தின் போது
உடைந்து நஷ்டத்தை ஏற்படுத்தியதால் கிளாசுக்கு மாற்றாக சாப்பிடுகிற பொருளையே கொள்கலனாகக் கண்டுபிடித்தால் என்ன என்ற ஐடியா ஒருவருக்குத் தோன்றியது. அதன் முடிவே, இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ‘கோன் ஐஸ்‘ முதன் முதலில் பாக்கெட் திரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட போது, அது பாக்கெட்டைவிடப் பெரிதாக இருந்தது. இதனால், அவை விற்காமல் சந்தைக்குச் சென்ற வேகத்தில் திரும்பி வந்தன. டிரான்சிஸ்டரின் அளவைக் குறைக்க முடியாது என்பதால், சட்டைப் பாக்கெட்டின் அளவைப் பெரிதாக்கினால் என்ன? என்ற ஐடியா ஒரு ஊழியருக்குத்
தோன்றியது. பெரிய பாக்கெட் வைத்து சட்டை களை தைத்தால், அந்த ரெடிமேட் நிறுவனங்களுக்கு 50 ரூபாய் மானியமாகத் தரப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்தது. சட்டைப் பாக்கெட்கள் பெரிதாயின பாக்கெட் டிரான்சிஸ்டர்களும் விற்றுத் தீர்ந்தன.
நினைவில் கொள்ளுங்கள். பிரச்சனைகள் தோன்றுகிற
போதே தீர்வும் தோன்றிவிடுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தீர்வைத் தேடி கண்டுபிடிப்பது தான். பிரச்சனையைத் தீர்க்க இன்னொரு வழியும் இருக்கிறது, அது பிரச்சனையைவிட நாம் ‘பெரிதாக‘ வளர்வதுதான். உதாரணத்திற்கு, சென்ற ஆண்டு நீங்கள் எதிர்கொண்ட ஒரு பிரச்சனையை இப்போது யோசித்துப் பாருங்கள். இதற்கு போயா இவ்வளவு பயந்தோம்?’ என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அந்தப் பிரச்சனையை விட நீங்கள் பெரிதாக வளர்வதுதான் இந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.
நாம் பிரச்சனையைவிடப் பெரிதாக உயர்ந்து அங்கிருந்து பார்ப்பதால், சென்ற ஆண்டின் சம்பவங்கள் உங்களுக்கு சிறிதாகத் தெரிகின்றன. தற்போது உள்ள பிரச்சனையையும் அடுத்த ஆண்டின் பார்வையில் இருந்து பார்க்க முடியுமா என்று யோசியுங்கள். உங்களால் இது முடியாவிட்டால் கைதேர்ந்த ஆலோசகரை உடன் வைத்துக் கொள்ளுங்கள். அவர், பறவைப் பார்வையால் வெளியிலிருந்து இவற்றைப் பார்ப்பதால், பிரச்சனைகளிலிருந்து மீள உங்களுக்கு வழிகாட்ட முடியும்.