அந்தக் காலத்தில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு காலங்காலமாக ஒரு சிக்கல் இருந்து வந்தது. அப்போதெல்லாம் ஐஸ்கிரீமை கண்ணாடிக் கோப்பைகளில் வைத்து கடைகளில் விற்பனை செய்வது தான் வழக்கம். கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களிலும்,
திருவிழாக் காலங்களிலும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களிலும் இந்த கண்ணாடிக் கோப்பைகள் தொடர்ந்து உடைந்துகொண்டே இருந்தன. அதோடு காணாமலும் போயின.
இதனால் ஏற்படுகிற இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்று புரியாமல் தவித்தனர் ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள். அப்போது, ஐஸ்கிரீம் நிறுவன ஊழியர் ஒருவர் “ஐஸ்கிரீமை நிரப்ப பயன்படும் கொள்கலனை அப்படியே சாப்பிடக் கூடியதாக தயாரித்தால் என்ன?” என்று தோராயமாக ஒரு யோசனை சொல்ல… ஐஸ்கிரீம் வணிகத்திலேயே புதிய வரலாற்றையும் அது தோற்றுவித்தது. அந்தச் சிந்தனை தான், இன்றைக்கு நாம் உண்டு மகிழக்கூடிய ‘கோன் ஐஸ்கிரீம்’.
ஓகே! இது போன்று, ஒரு பொருள் வடிவமைப்பில் ஏற்படும் புதிய சிந்தனைகள், செலவைக் குறைத்து தொழில்துறையின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்து விடக்கூடும். காகித விலை தொடர்ந்து ஏற்றம் கண்ட போதிலும், எந்த நாளிதழும் தமது விலையை உயர்த்த முன் வரவில்லை. விலையை உயர்த்தினால் விற்பனை குறைந்து போகும் என்கிற அச்சம் அனைவருக்கும் இருந்தது. இது பொதுவான உண்மையும்கூட.
விலையை உயர்த்த முடியாத சூழலில், செலவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின பல இதழ்கள். விலையையும் உயர்த்தாமல், பக்கங்களின் எண்ணிக்கையையும் குறைக்காமல் பக்கத்தின் அகலத்தை மட்டும் சிறிதளவு குறைத்து, வாசகர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டன.
அதாவது, ஒரு நாளைக்கு ஒரு தாளுக்கு 3 செ. மீ அளவு அகலத்தைக் குறைத்தன நாளிதழ்கள். இதனால், ஒரு லட்சம் பிரதிகள் அச்சடித்த ஒரு தினசரிக்கு பல லட்சம் செலவு குறைந்தது.
இந்தச் சிறிய மாற்றம் வாசகர்களின் எண்ணிக்கையில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த மாற்றம் வாசகர்கள் பலருக்கு தெரியவே இல்லை என்பதுதான் உண்மை.
அமெரிக்காவைச் சார்ந்த ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகி ன்ற சேவைகளில் தேவையற்ற அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றைக் குறைத்தது. சான்றாக, பயணிகளுக்கு வழங்கப்படும் பல வண்ண டிக்கெட்களுக்கு மாற்றாக சாதாரண டிக்கெட்டில் தொடங்கி, விமானத்தில் இலவசமாக வழங்கப்படும் உணவு, தண்ணீர் போன்ற அனைத்தையும் தவிர்த்து, ‘குறைந்த கட்டண விமானம்’ (Low cost Airline) என்கிற புதிய உத்தியினை உண்டாக்கியது. இதனைப் பின்பற்றியே தற்போது இந்தியாவில் பல எர்லைன்ஸ் நிறுவனங்கள் வெற்றிவாகை சூடி வருகின்றன .
ஆட்டோமொபைலை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பெல்லாம் நீளமான பிளைமவுத் கார், காண்டஸா கார், அம்பாசிடர் கார், ஆல்வின் நிசான் வேன், மெட்டடர் வேன் போன்ற வையே சாலைகளில் நிறைந்திருந்தன.
ஆனால், இன்றைக்கு நானோ, ஆல்டோ, இண்டிகா போன்ற விலை மற்றும் அளவு குறைவான கார்களே விற்பனையில் சக்கை போடு போடுகின்றன. ஒரு நானோ காரின் விலை தோராயமாக ரூ. 1.50 லட்சம் மட்டும். உற்பத்திச் செலவுகளை எப்படியெல்லாம் குறைக்க முடியும் என்பது குறித்த ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அயல்நாட்டில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒவ்வொரு ரயில் பெட்டி தயாரித்து முடிந்தவுடனும் அதில் நான்கு எழுத்து கொண்ட அந்த நிறுவனத்தின் பெயரை இரும்பு எழுத்துகளால் பொறிப்பது வழக்கம். ஒரு எழுத்தை பொறிப்பதற்கு தோராயமாக பத்து டாலர் (சுமார் ரூ.750) செலவானது. நாளொன்றுக்கு இந்த நிறுவனம் 10 பெட்டிகளைத் தயாரித்து.
அங்கே பணிபுரிந்த ஒரு தொழிலாளி “நான்கு எழுத்துகளுக்குப் பதிலாக நம் நிறுவன லோகோவை மட்டும் பொறித்தால் என்ன? நம் நிறுவனம் தான் தயாரித்தது என்று தெரியாமலா போகும்?” என்று சொன்ன யோசனையினால், ஒவ்வொரு பெட்டி தயாரிப்பிலும் 30 டாலர் செலவு குறைந்தது. இதனால் வருடத்துக்கு எவ்வளவு மிச்சம் என்று பாருங்கள்.
செலவைக் குறைப்பதால் விற்பனை உயரும்; விற்பனை உயர்வதால் லாபம் பெருகும். இதுவே, இன்றைய தொழில் உத்தி. எனவே, உற்பத்திப் பொருட்களின் அடக்க விலையை எந்த அளவுக்கு குறைக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள். அது உங்கள் லாபத்தை பெருக்கித் தரும்.
—– இராம்குமார் சிங்காரம், Best media trainer in tamil nadu