ஒருமுறை மிகச் சிறிய கழுகுக் குஞ்சு ஒன்று கோழியின் கூட்டில் வந்து விழுந்தது. கோழிக் குஞ்சுகளோடு சேர்ந்து கழுகும் வளரத் தொடங்கியது.
வானுயரப் பறக்கும் திறமை கொண்டிருந்தாலும் கழுகுக் குஞ்சோ, அதனை அறியாது வளர்ந்தது. மாமிசம், பறவைகளையும் தின்னும் இயல்பு கழுகுக்கு உண்டு. ஆனால் இந்தக் கழுகுக் குஞ்சோ கோழிக் குஞ்சுகளோடு சேர்ந்து குப்பையைக் கிளறி விதைகளையும் பூச்சிகளையும் தின்று வந்தது. கோழியைப் பார்த்து கொஞ்சம் உயரே பறந்து திரும்பவும் தரைக்கு வந்தது. இப்படியாக நாட்கள் ஓடின.
ஒரு நாள் வானத்தில் வேறொரு கழுகு உயரே பறந்து செல்வதைப் பார்த்து ஆச்சரியத்துடன் கோழியிடம், “அது யார்?” என்று வினவியது. கோழியோ, “அது பறவைகளின் அரசன்! அதற்கு ‘கழுகு’ என்று பெயர்” என்று கூறிவிட்டு, “ஆனால், நம்மால் எல்லாம் அதுபோல் பறக்க முடியாது. எனவே, அதைப் பற்றி எல்லாம் நீ அலட்டிக் கொள்ளாதே” என்றது. எனவே கழுகும் அதுபற்றி வாழ்நாள் முழுதும் சிந்திக்கவே இல்லை.
இந்தக் கழுகைப் போலத்தான் நாமும். நம் அலுவலகத்தில் காலங்காலமாய் ஏற்பட்டு வரும் செலவினங்களைப் பற்றி மறுமுறை பரிசீலிப்பதே கிடையாது.
பலசரக்கு கடை நடத்திவரும் ஒரு தொழில் முனைவர், காலங்காலமாக தம் கடையின் வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளாமலேயே இருந்து வந்தார். இதனால் கடையில் எவ்வளவு இருப்பு உள்ளது… எவ்வளவு பொருட்களை கடனில் வாங்குகிறோம்… ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும் எவ்வளவு லாபம் கிடைக்கிறது? என்ற விவரங்கள் எல்லாம் துல்லியமாக அவருக்கு தெரிவதும் இல்லை. மாதந்தோறும் என்ன பொருள் எவ்வளவு விற்பனையாகிறது என்பது பற்றிய விவரத்தையும் அவர் குறித்து வைத்துக் கொள்வதில்லை.
அவரிடம் எந்தத் தகவலும் இல்லாததால் செலவுகளைக் குறைப்பது குறித்தோ அல்லது கடையை விரிவாக்குவது குறித்தோ எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியவில்லை. காலையில் எழுந்ததும் கடை… பிறகு பொருள் கொள்முதல்… மதியம் குட்டித் தூக்கம்… மாலை தொடங்கி இரவு வரை கடை… இப்படியாக அவரது நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. வருமானம் வந்தது. ஆனால் உழைப்புக்கு ஏற்ற அளவு லாபம் குவியவில்லை.
இதனை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது மகன் பெரியவனானான். படிப்பை முடித்துவிட்டு கடை பொறுப்பை ஏற்றவுடன் முதலில் கடையில் ஒரு கணிப்பொறியை வாங்கி வைத்தான். கடைக்கு ஒவ்வொரு நாளும் வரும் எல்லாப் பொருட்களின் விவரத்தையும் அதில் பதிவு செய்தான். விற்பனையாகும் பொருட்களுக்கு பில் கொடுத்தான்.
இதனால் நாள்தோறும் என்னென்ன பொருள் எவ்வளவு விற்பனையாகிறது? வாங்கி வைத்த பொருள் எவ்வளவு நாட்களுக்கு இருப்பில் இருக்கிறது… விற்காத பொருட்கள் எவை, எவை? என அனைத்து விவரங்களையும் அவனால் எடுக்க முடிந்தது. பல ஆண்டுகளாக அந்தப் பெரியவருக்குப் புலப்படாத பல தகவல்கள் துல்லியமாகக் கிடைத்தன.
இதற்கெல்லாம் மேலாக அவர் எந்நேரமும் கடையிலேயே காலம் கழிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இருவர் சரக்கு கட்ட, ஒருவர் பில் போட, ஒரு மேனேஜர் கல்லாவைப் பார்த்துக்கொள்ள என தனித்தனி வேலையாட்கள் அமர்த்தப்பட்டனர். நாள்தோறும் பில் வாரியாக கணக்குப் போட்டு, கடை மேனேஜர் பெரியவரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டுப் போனார். கடையும் விரிவடைந்தது.
தன்னால் கடுமையாக உழைத்த அளவிற்கு, புத்திசாலித்தனமாக உழைக்க முடியாமல் போனதே என்று அவர் வெட்கப்பட்டார்.
கடுமையாக உழைத்தல் என்பது வேறு, மூளையைப் பயன்படுத்தி புத்திசாலித்தனமாக அதே தொழிலைக் கையாளுதல் என்பது வேறு என்று அந்தப் பெரியவருக்கு புரியத் தொடங்கியது. இந்தப் புரிதலுக்கும், வளர்ச்சிக்கும் திருப்புமுனையாக அமைந்தது. கணிப்பொறியை அவர் செலவாக நினைத்தார். பையன் முதலீடாக நினைத்தான். மேலும், கணக்குப் பார்க்க வேண்டும்… அதற்கு ஒரு கணிப்பொறி துணைபுரியும் என்ற விஷயம் அவருக்குப் புரியவில்லை. இதனால் அனாவசியச் செலவுகள் எங்கெல்லாம் நேருகிறது என்று கண்டுபிடித்துக் கலைந்ததில் லாபம் பல மடங்கு பெருகியது. இன்று அவர் பல கிளைகள் கொண்ட பெரிய பல்பொருள் அங்காடியின் அதிபர்.
———– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker