fbpx
கேரக்டர் முக்கியம்! | Top qualities for an entrepreneur

top qualities for an entrepreneur
  • January 17, 2022

பிராண்டிங்என்பது பொருளுக்கு மட்டுமல்ல தொழில் முனைவருக்கும் அவசியம். அம்பானி என்றாலே அவரை நம்பி முதலீடு செய்யலாம் என்கிற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்து விட்டது. 

அதுபோல் டாடா என்றாலே தரமானது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழும். இதுபோல் உங்களுடைய பிராண்டையும் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம். 

குறிப்பாக, கொடுக்கல் வாங்கலில் எக்காரணத்தைக் கொண்டும் நம்பகத் தன்மையை ஒரு தொழில் முனைவர் இழந்து விடக்கூடாது. காசோலையைப் பணமின்றி திருப்பி அனுப்பாமல் இருப்பது முக்கியம். மேலும் உரிய நேரத்தில், வாக்களித்தபடி தொகையைக் கொடுத்துவிட வேண்டும். 

ஒரு பொருளை இந்தத் தேதியில் பட்டுவாடா செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டால் சொன்னபடி அந்தத் தேதியில் பட்டுவாடா செய்யவேண்டும். இயலவில்லை என்றால் அதை முன்கூட்டியே  வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். சொல்லும், செயலும் ஒன்றாக இருப்பது தொழிலுக்கு மிக முக்கியம். 

அனைத்து ஊழியர்களையும் சமமாக மதித்துப் பழக வேண்டும். பெரிய அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரையும் சமமாக மதித்து நெருங்கிப் பழக வேண்டும். கொடுக்கும் சம்பளத்திற்கு வேலையைச் செய்வது அவர்களது கடமை என்றாலும் கூட, அவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்ற போது தட்டிக் கொடுத்து பாராட்டு தெரிவிப்பது முக்கியம். 

அடுத்து, நீங்கள் யாரிடமாவது குறித்த நேரத்திற்கு வருவதாக வாக்களித்து இருந்தால் அவர்களைக் காக்க விடாமல் உரிய நேரத்திற்கோ அல்லது சற்று முன்னதாகவோகூட சென்று விடுவது தொழில் முனைவோருக்கான நற்குணங்களில் ஒன்று. 

ஊழியர்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ ஏதேனும் சிக்கல் என்றால் பரிவுடன் அவர்களுக்கு உதவும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது உதவுவதற்கு யாரையாவது அனுப்ப வேண்டும். 

தொழில் முனைவருக்கு பேச்சுத் திறன் மிக மிக அவசியம். எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் பேசியவாறே தம் காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறன் வேண்டும்ஒருமுறை ஒரு இந்திய தொழிலதிபர் ஜப்பான் நாட்டுக்குச் சென்று அங்கு  ‘டர்பண்டாஎன்கிற பொருளைத் தயாரிப்பதற்கான ஆர்டரை பேரம் பேசி சாதுர்யமாக வாங்கி விட்டார். ஆர்டர் வாங்கியவுடன் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரை தனியாக அழைத்து, “டர்பண்டா  என்றால் எப்படி இருக்கும்? எனக்கு ஒரு சாம்பிள் கொடுங்களேன்என்று அப்பாவியாகக் கேட்டாராம். பேச்சால் சாதித்ததை திறமையால் தக்க வைத்துக் கொள்ளும் சாதுர்யத்தனம் முக்கியம். 

எக்காரணத்தைக் கொண்டும் காலாவதியான  பொருட்களை விற்காதீர்கள். 

போட்டியாளரையும் நண்பரைப் போல் பாவியுங்கள். அவரோடு பகையை வளர்த்துக் கொள்ளுதல் நம்முள் ஒரு மன அழுத்தத்தை உருவாக்கும். மாறாக, முடிந்த வரை நம் துறை சார்ந்த தொழில் முனைவரோடு தோழமை கொண்டிருந்தால் அன்றாட நிகழ்வுகளையும் வரவிருக்கிற சவால்களையும் தெரிந்து கொள்வது வசதியாக இருக்கும். 

தொழில் ரகசியங்களை நாம் பகிர்ந்து  கொள்ளாவிட்டாலும் கூட அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டங்கள், வரி விதிப்புக்கள், பணம் தராத வாடிக்கையாளர்கள் விவரம், சிக்கலுக்குரிய பணியாளர்கள்போன்றவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம். போட்டியாளராக இருந்தால் என்ன? அவர்களும் நம்மைப் போன்று அன்றாடம் பணத்திற்காக ஓடும் மனிதர்கள்தானே? 

தொழிலில் வெற்றி பெறுவதற்கு வாடிக்கையாளர்களே முக்கிய காரணம். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை மதிப்புடன் நடத்த வேண்டியது நமது பொறுப்பு. கடைக்கோ, அலுவலகத்திற்கோ வருகின்ற வாடிக்கையாளரை முதலில் அமர வைத்து, தண்ணீர் கொடுத்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். அவர்களுடன் புன்முறுவல் பூக்கப் பேசி, மனதிற்குப் பிடித்ததைக் கொடுத்து வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும். 

அவர்கள் நமது இடத்தை விட்டுச் செல்கின்ற போது, அவர்களுக்கு ஏதேனும் சிறிய நினைவுப் பரிசை கூட வழங்கலாம். 

சென்னை, தியாகராய நகர், உஸ்மான் சாலையில் உள்ள போத்தீஸில் மாலை நேரத்தில் தினமும் ஏதாவது இனிப்பு பலகாரம் இலவசமாக தருவது வழக்கம். கடைக்குள் இருக்கும் மக்கள் துணி வாங்குவார்களா? மாட்டார்களா? என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த நேரத்தில் யார் யார் எல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த பலகாரத்தை வழங்கி வருகிறது போத்தீஸ். 

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நகைக் கடைகளில் வெள்ளியோ, தங்கமோ வாங்குகிற போது மணி பர்ஸ், பேக் போன்றவை அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களும் பொங்கல், புத்தாண்டு விழா நேரங்களில் இனிப்புப் பண்டங்கள், பட்டாசுகள், நாட்குறிப்புகள், காலண்டர்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்குகின்றன. 

பணியாற்றும் இடத்தில் அது கடையோ, அலுவலகமோ எதுவாயினும், அங்கு வாடிக்கையாளர், ஊழியர் அதிகாரி என எவரோடும் சண்டை போடுவது நமது நிறுவனத்தின் நற்பெயருக்கு நாமே களங்கம் விளைவிப்பதாகும். சிக்கல்களை தீர்த்துக் கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் சிக்கல்களை அப்போதைக்கு தள்ளிப்போட்டு, பிறகு ஆற அமர பேசலாம். 

அதுபோல, ஒரு தொழில் முனைவர் எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் துவண்டு போகாமல் இருத்தல் அவசியம். சிக்கல்கள் எவ்வளவு தீவிரமானதாயினும் அதைவிட தீப்பிழம்பாக துருதுருவென்று தொழில்முனைவோர் உற்சாகத்தோடு இருக்க வேண்டும். தோல்வி எல்லோருக்கும் வரும்; ஆனால் அதிலிருந்து மீள்பவருக்கு மட்டுமே வெற்றி கிட்டும். எல்லா வெற்றியாளர்களும் தோல்வியைத் தழுவித்தான் வெற்றி கண்டிருப்பார்கள். 

இதற்கெல்லாம் மேலாக, ஒரு தொழில் முனைவருக்கு தனிமனித ஒழுக்கம் என்பது இன்றியமையாதது. அவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் அவரது மதிப்பு குறைந்து விடும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். 

இதுவரை ஆயிரத்தில் ஒருவனாக வலம் வந்த நீங்கள் இனி ஆயிரம் பேருக்குத் தலைவனாக, அவர்களின் முதலாளியாக வர வாழ்த்துக்கள். இந்தப் புத்தகத்தால் நீங்கள் ஜெயித்தால், எனக்கு ஒரு லெட்டர் போடுங்கள் முதலாளி! 

                        —  

இராம்குமார் சிங்காரம், Best Tamil Motivational Speaker

 

Comments are closed.