பொது நூலகங்களில் ஒன்றான ‘அலெக்சாண்ட்ரியா’ (Alexanderia) எரிந்து சாம்பலான பிறகு ஒரு சில புத்தகங்கள் மட்டுமே தீயின் நாக்குகளில் இருந்து தப்பித்தன.
அவற்றை எல்லாம் எடுத்து அந்நூலகத்தினர் வந்த விலைக்கு விற்கத் தொடங்கினர். படிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு ஏழை இளைஞன் தன்னிடம் இருந்த சில உலோகங்களைக் (அந்தக் கால நாணயம்) கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கினான்.
மொத்த புத்தகத்திலும் அவனுக்கு ஆர்வம் ஏற்படவில்லை என்றாலும், புத்தகத்துக்கு இடையே இருந்த ஒரு சிறிய பழுப்பு நிறக் காகிதம் அவனுக்கு வியப்பை உண்டாக்கியது. அதில் ‘உரைகல்’ (Touch Stone) என்னும் ஒரு அதிசயக்கல் பற்றிய குறிப்பு கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
‘உரைகல் என்பது ஒரு சிறிய கூழாங்கல்லாகும். இந்த கூழாங்கல் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்றக்கூடிய தன்மை கொண்டது. கடற்கரை ஓரங்களில் பரவிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான கூழாங்கற்கள் இடையே இந்த உரைகல் இருக்கக்கூடும். தோற்றத்தில் எந்த வேறுபாடு இல்லாவிட்டாலும்கூட கையில் எடுத்துப் பார்த்தால் சாதாரண கூழாங்கற்கள் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், உரைகல்லோ சூடாக இருக்கும்’. இந்த உரைகல்லைக் கொண்டு இரும்பைத் தேய்த்தால் அது தங்கமாக மாறும்.
இதைப் படித்து உற்சாகம் அடைந்த அந்த இளைஞன், தன்னிடமிருந்த ஒரு சில உடமைகளையும் விற்றுவிட்டு கடற்கரை ஓரத்தில் கூடாரம் அமைத்து உரைகல்லைத் தேடத் தொடங்கினான். கடற்கரை ஓரம் போய் நின்று கொண்டு குனிந்து கூழாங்கற்களை எடுப்பதும், குளிர்ச்சியாக இருப்பதைப் பார்த்துவிட்டு அதைத் தூக்கி கடலுக்குள் எறிவதுமாக இருந்தான். பல நாட்கள், பல ஆயிரம் முறை திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்து ஏமாந்து போனான்.
இருப்பினும் அவன் மனம் தளரவில்லை. கூழாங்கல்லை எடுப்பான். குளிர்ச்சியை உணர்ந்து ஏமாற்றம் அடைவான். கடலில் எறிவான். இந்தச் செயல் நடந்து கொண்டே இருந்தது.
எந்தத் தேடலுக்கும் விடை கிடைத்துத் தானே ஆக வேண்டும்? ஒரு நண்பகலில் அவனுக்கு அந்த உரைகல் கிடைத்தது. அவன் வழக்கம்போல் அந்தக் கல்லைக் கையில் எடுத்தான்; குளிர்ச்சிக்குப் பதிலாக வெப்பத்தை உணர்ந்தான். அது வெப்பம்தான் என்று அவனது மூளை உணர்த்தும் முன்பே பழக்க தோஷத்தில் அவனது கை, அவனையும் அறியாமலே அந்தக் கல்லை கடலுக்குள் எறிந்து விட்டது.
பல ஆயிரம் தடவைக்கும்மேல் கற்களைப் பொறுக்கி கடலுக்குள் வீசி எரிகின்ற பழக்கத்தை அவன் வளர்த்துக் கொண்டதால் சரியான உரைகல் கிடைத்தும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல், கடலுக்குள் எறிந்து விட்டான்.
நம்மைத் தேடி வரும் வாய்ப்புகளையும் நாம் இப்படித்தான் இனம் கண்டு கொள்ளாமலும், பொருட்படுத்தாமலும் விட்டு விடுகிறோம். வாய்ப்புகள் மட்டுமல்ல… செலவினங்களும் கூட இப்படித்தான்.
நாம் எதைக் கண்டு கொள்வது இல்லையோ அவை நம்மைப் பொருட்படுத்துவதில்லை. செலவினங்களை நாம் குறைக்க முயற்சிக்காவிட்டால் அப்படி சில வாய்ப்புகள் வரும்போது அதை பற்றிய சிந்தனையே இல்லாமல் போய்விடும்.
எப்படி விற்பனையை உயர்த்துவதற்கென்று வாராந்திர மற்றும் மாதாந்திரக் கூட்டத்தை அலுவலகத்தில் நடத்தி ஊழியர்களை ஊக்குவிக்கிறோமோ, அதுபோல செலவுகளைக் குறைக்கும் வேலையையும் நாம் மேற்கொள்ள வேண்டும். மாதந்தோறும் ஊழியர்களிடையே கூட்டம் நடத்தி செலவினங்களை ஆராய்தல், மாற்றுச் செலவினங்களைப் பற்றி யோசித்தல், புதிய யோசனைகளை சொல்வதற்கு ஊக்கத்தொகை வழங்குதல், பிற நிறுவனங்களுக்கு சென்று பார்த்து சிக்கன முயற்சிகளை கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
பயன்பாட்டுச் சிக்கனம் பற்றித் தெரியுமா உங்களுக்கு..?
நாம் அன்றாடம் அலுவலகத்தில் பயன்படுத்தக் கூடிய பொருட்களின் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது தான் அது.
பெரும்பாலான அலுவலகங்களில் காகிதத்தில் ஒரு பக்கம் பிரிண்ட் எடுத்து விட்டு, அது தேவையில்லை என்றால் அப்படியே கிழித்துப் போட்டு விடுவர். இதற்கு மாற்றாக ஒன் சைட் பேப்பர் என்று ஒரு கோப்பை தனியே உருவாக்கி, அதில் ஒரு பக்கம் பயன்படுத்தப்படாத பேப்பர்களை அடுக்கி வைத்து நமது உள் அலுவலகத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், காகிதம் வீணாவதும் குறையும். நாம் பயன்படுத்துகின்ற பேப்பர் மட்டுமல்லாது, நமக்கு வருகின்ற அஞ்சல்கள், நோட்டீஸ்கள், விலைப்பட்டியல்கள், விவரக்குறிப்புகள் போன்றவற்றையும் தேவையற்றது என்று நிராகரிக்கிற போது அவற்றை ஒரு பக்கக் காகிதமாகப் பயன்படுத்தி காகிதச் செலவை மிச்சப்படுத்தலாம்.
இப்படி எவை எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம்..?
இப்படி எழுதிக் கொண்டே போகலாம். வழிகாட்டி விட்டோம் இனி உங்கள் கோணத்தில் நீங்கள் செலவைக் குறைக்க யோசிக்கத் தொடங்குங்கள்…!
—– இராம்குமார் சிங்காரம், Best Media Trainer in Tamil Nadu