நீங்கள் கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமா?
எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?
அப்படியானால், அருகில் வாருங்கள்… உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தைச் சொல்கிறோம்.
உங்கள் நேரத்தை நாள்தோறும் எதில் செலவழிக்கிறீர்களோ, அதில் மட்டுமே வளர்ச்சி அடைகிறீர்கள்.
அதாவது நீங்கள் நாள்தோறும் உங்கள் குடும்பத்திற்கு அதிக நேரம் செலவழித்தால் உங்கள் குடும்ப உறவு மேம்படுகிறது.
ஒருவேளை, உங்கள் நண்பர்களோடு அதிக நேரத்தைச் செலவழித்தால் நட்பு வளம் பெறுகிறது.
மதுக்கடைகளிலும், கிளப்புகளிலும் உட்கார்ந்து வீண் விவாதம் புரிந்தால் சண்டையும், மனஸ்தாபமும் வளருகிறது.
உடற்பயிற்சிக்கு அதிக நேரம் செலவழித்தால் உடல் நலம் சிறக்கிறது.
தொழிலில் அதிக நேரம் செலவழித்தால் தொழில் வளர்ச்சி அடைந்து பணம் பெருகுகிறது.
இப்போது உங்களது 24 மணி நேரத்தில் பணம் சம்பாதிக்க எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள் என்று யோசியுங்கள். நாள்தோறும் 8 மணி நேரம் செலவழிப்பவராக இருந்தால் கூடுதலாக 4 மணி நேரம் செலவழிக்க முயற்சியுங்கள். ஆரம்பத்தில் அது பணமாக திரும்ப வராவிட்டாலும், நாள் செல்லச் செல்ல பணம் கொட்டத் தொடங்கும்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், புத்திசாலி தோற்கலாம்; தந்திரசாலி தோற்கலாம்; காரியவாதி தோற்கலாம்; கெட்டிக்காரன் தோற்கலாம்; ஆனால் உழைப்பவன் தோற்றதாக சரித்திரமே கிடையாது. வேண்டுமானால், அவன் வெற்றி சற்று தள்ளிப் போகலாம். அவ்வளவு தான்.
‘கேட்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு… ஆனால் 8 மணி நேரம் உழைக்கிறதுக்கே வேலையில்லை… கூட 4 மணி நேரம் உழைக்க என்ன சார் இருக்கு? என்று உங்களில் சிலர் யோசிப்பது புரிகிறது.
சரியான கேள்வி தான் . இதோ உங்களுக்காக மூன்று உத்திகள்…
‘முயற்சி‘, ‘சேவை‘, ‘இலாபப் பகிர்வு‘ – இந்த மூன்றும் உங்கள் உழைப்பை அதிகரித்து, லாபத்தைப் பெருக்கும்.
ஒருவர் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டு மீண்டு வருகிறாரோ அவரே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். உண்மைநிலை இப்படியிருக்க, பெரும்பாலானோருக்கு பிரச்சனை என்றாலே தயக்கம் ஏற்பட்டு விடுகிறது. அந்த தயக்கத்தைப் போக்குவதற்கும் வழி இருக்கிறது.
உங்கள் நடவடிக்கைகளை நீங்கள் உற்று கவனித்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஏதோ சில மணி நேரம் சிறப்பாக செயல்படுவது தெரியும்.
அது காலையில் அலுவலகம் வந்தவுடன் 10 மணியிலிருந்து 12 மணி வரையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சிலருக்கு மாலை 6 மணி முதல் 8 மணி வரையாகக் கூட இருக்கலாம். சிலருக்கு மதியம் 1 மணி முதல் 3 மணி வரையாகக் கூட இருக்கலாம்.
உங்களையும் அறியாமலேயே சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அந்த நேரத்தை நீங்கள் விரும்பியிருப்பீர்கள்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர், “சார், இந்த டெண்டருக்கு அப்ளை பண்றது பற்றி டிஸ்கஸ் பண்ணணும்” என்று சொல்லும் போது, “நாளை மதியம் பார்த்துக்கொள்வோம்” என்று சொல்லி இருப்பீர்கள்.
இதுபோன்று, உங்கள் மூளை சிறப்பாகச் செயல்படக்கூடிய நேரம் எதுவென்று கண்டறிந்து அந்த நேரத்தில் உங்கள் எல்லாப் பிரச்சனைகளுக்கும் முடிவு எடுக்கலாம்.
இதே போல், நாள்தோறும் சில மணி நேரங்கள் உங்களது மூளை மிகவும் மெதுவாக வேலை செய்யும். உங்கள் கவனம் திசை திரும்பிக்கொண்டே இருக்கும். அப்போது பெரிய முடிவுகள் எதுவும் எடுக்காமல், சாதாரண வேலைகளைச் செய்யலாம்.
இப்படி உங்கள் உடலும், மனமும், மூளையும் ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நேரத்தைக் கண்டறிந்து கொண்டால் நீங்கள் வெற்றியாளராக உயர முடியும்.
இப்போது நீங்கள் செய்யவேண்டியது இதுதான். தொழிலுக்கு, பொதுச் சேவைக்கு, வீட்டுக்கு, நண்பர்களுக்கு, துக்கத்திற்கு நாள்தோறும் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள்? மற்றவற்றிற்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்து விட்டு தொழிலுக்கு இவ்வ்ளவு நேரத்தை அதிகரிக்கலாம்? தொழிலுக்கு ஒதுக்கும் நேரத்தில் உங்கள் உடலும், மனமும், மூளையும் ஒன்றிணைந்து சிறப்பாக இயங்கும் நேரம் எது? இவற்றைக் கண்டறிந்து ‘கடிகார மனிதராக‘ மாறுங்கள்.