fbpx
புதிதாய் சிந்திப்போம் | Think new

Best motivational speaker in tamil
  • April 21, 2022

வித்தியாசமான உத்திகளால் விளம்பரச் செலவைக் குறைக்கலாம்! 

விளம்பரம் என்பது என்ன? நான் இந்தப் பொருளை விற்கிறேன்; இது என் நிறுவனத்தின் பெயர்; இது முகவரி; இது தொலைபேசி எண். தேவைப்படின் தொடர்பு கொள்ளுங்கள். என்ற தகவலை பரவச் செய்வது விளம்பரம். இதனை நீங்கள் கீழ்க்கண்ட பல வழிகளில் செலவின்றிக் கூட மேற்கொள்ளலாம். 

எல்லா இணையம் சார்ந்த டைரக்டரிகளிலும் ஒரு இலவச விளம்பரம் பதிவு இணைக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் செயல்பாடுகளை நிரப்பி அனுப்பினால் இலவசமாகவே அவர்கள் வெளியிடுவார்கள். 

உங்கள் நிறுவனத்தின் இணையதளத்தை தகவல் தளங்களாக விளங்கும் பல்வேறு இணைய தளங்களுக்குச் சென்று அங்கிருந்து தகவல் தேடும்போது மக்களை உங்கள் இணைய தளத்திற்கு வர லிங்க் கொடுக்க சொல்லலாம். 

சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில்பார்ட்டர்’ (Barter) எனப்படும் புதுவகை வணிகம் நடைமுறையில் உள்ளது. பார்ட்டர் என்றால் பண்டமாற்று முறை என்ற பொருள். அதாவது நீங்கள் . சி. விற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு முன்னணி நாளிதழில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விளம்பரம் வெளியிட வேண்டிய தேவை இருப்பதாகக் கொள்வோம். 

 அந்த விளம்பரத்தைப் பார்த்து அதன் மூலம் விற்பனையாகும் .சிகளில் இருந்து லாபத்தை எடுத்து நீங்கள் விளம்பரத்திற்கு பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை விளம்பரத்தைப் பார்த்து மக்கள் .சி வாங்க வராமல் போனால் விளம்பரக் கட்டணம் உங்களைப் பொறுத்தவரை பெரிய இழப்பாகத் தோன்றும். 

மாறாக, விளம்பரக் கட்டணத்துக்கு ஈடான தொகைக்கு பத்திரிக்கை நிறுவனமே தங்களுக்குத் தேவையான .சிக்களை வாங்கிக் கொள்ள முன்வந்தால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் தானே இதுதான் பார்ட்டர் தொழிலின் அடிப்படை. இந்த பார்ட்டர் துறையில் பல நிறுவனங்கள் உள்ளன. இவை தமக்கென உறுப்பினர் பட்டியலை வைத்துக்கொண்டு உறுப்பினர்களுக்கிடையே இந்த பண்ட மாற்று முறையை மேற்கொள்கின்றன. 

ஒரு பத்திரிக்கைகுக் தேவைப்படுகிற கடிகாரங்களை கடிகார தயாரிப்பு நிறுவனத்திடமிருந்தும் கடிகார நிறுவனத்திற்கு தேவைப்படும் விளம்பரப் பலகையை விளம்பர நிறுவனத்திடம் இருந்தும், விளம்பர நிறுவனத்திற்கு தேவைப்படும் கிரைண்டர்களை கிரைண்டர் நிறுவனத்திடமிருந்தும், கிரைண்டர் நிறுவனத்துக்கு தேவைப்படும் பத்திரிக்கை விளம்பரங்களை பத்திரிக்கை நிறுவனத்திடமிருந்தும் என இப்படியாக ஒவ்வொன்றையும் இணைத்து இந்நிறுவனம் இத்தொழிலை மேற்கொள்கிறது. இதற்கு சேவை கட்டணமாக பண்டமாற்று தொகையில் 10 விழுக்காட்டை உறுப்பினர் நிறுவனங்களிடம் வசூலித்துக் கொள்கிறது இந்தச் சேவையைப் பயன்படுத்தினால் உங்கள் செலவு ஓரளவு குறையும். 

உங்கள் செலவுகளுக்கு ஸ்பான்சரரைத் தேடலாம். 

ஒரு தொழிலதிபர் தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் செலவழித்து மிகப்பெரிய கல்யாண மண்டபம் ஒன்றைக் கட்டினார். ஆனால், இறுதியில் மண்டபத் திறப்பு விழாவின்போது விளம்பரம் வெளியிட அவர் கையில் போதுமான பணமில்லை. அவர் புத்திசாலித்தனமாக மண்டபம் கட்ட செங்கல் விற்றவர், மணல் விற்றவர், கட்டட வல்லுநர், காண்ட்ராக்டர், மின் கருவிகள் விநியோகம் செய்தவர் என தன்னால் பயனடைந்த சப்ளையர்கள் அனைவரையும் அழைத்தார்.  

நான் உங்கள் பொருளை வாங்கியதற்கு நன்றிக்கடனாக என் கல்யாண மண்டபத் திறப்பு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து நீங்கள் விளம்பரம் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதேபோல் அனைவரும் நாளிதழில் விளம்பரம்  செய்ததால் இவருக்கு அந்தச் செலவு குறைந்தது. 

ஒரு எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் தன்னிடம் தொடர்ந்து பொருட்களை வாங்கி வரும் எலக்ட்ரீஷியன்களுக்கு நன்றி தெரிவிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அழைப்பிதழில் தொடங்கி கூட்ட அரங்கச் செலவு, சாப்பாட்டுச் செலவு, பரிசுப் பொருள் என அனைத்துச் செலவுகளையும் மேற்கொள்ள அவரிடம் பணம் போதுமானதாக இல்லை. பார்த்தார் மின்சாதன உற்பத்தியாளர்  ஒருவரை தொடர்பு கொண்டார். 

அவரிடம்,எலக்ட்ரீஷியன் கூட்டத்தை நடத்த உள்ளேன். அங்கே வந்து உங்கள் பொருட்களின் அருமை பெருமைகளை சில நிமிடங்கள் விளக்கிச் சொல்லுங்கள். பொருட்களையும் காட்சிக்கு வையுங்கள். பேனர் கட்டிக் கொள்ளுங்கள் அதற்கு மாற்றாக கூட்ட செலவுகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அந்த உற்பத்தியாளருக்கு வாடகை இல்லாமல் மிகப் பெரிய மண்டபம் கிடைத்த திருப்தி.  

எனவே, தன் மின்சாதனப் பொருளை பிரபலப்படுத்துவதற்கு இது சரியான களம் என்று எண்ணி செலவுகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டார் அந்த உற்பத்தியாளர். இதுபோல் நீங்கள் சிமெண்ட் விநியோகஸ்தராக இருந்தால் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடம் உங்கள் விற்பனையாளர் கூட்டத்திற்கு அல்லது டீலர்கள் கூட்டத்திற்கு ஸ்பான்சர் பெறலாம். 

நீங்கள் பழச்சாறு கடை நடத்தினார் கோலா நிறுவனங்களை அணுகி, உங்கள் கடையின் பெயர்ப் பலகைகளை நிறுவச் செய்யலாம். நீங்கள் மருத்துவராக இருந்தால், உங்களை நம்பி இருக்கும் மருந்துக் கடைக்காரர்களிடம் பிரிஸ்க்ரிப்ஷ னில் தொடங்கி பெரும்பாலான பொருட்களை ஸ்பான்சர் செய்யச் சொல்லலாம். 

செலவுகளுக்கு ஸ்பான்சர் தேடுவதன் அடிப்படை இதுதான் யார் உங்களால் வருமானம் பெறுகிறார்களோ அவர்களிடமிருந்து ஸ்பான்ஸர் பெறலாம். இதுவே அடிப்படை விதி. 

அடுத்ததாக நீங்கள் குழந்தைகளுக்கான பொருட்களை தயாரிப்பவர் என்று வைத்துக் கொள்வோம். உங்களுடைய விற்பனை இலக்கு குழந்தைகள் என்றால், அதே விற்பனை இலக்கோடு செயல்பட்டு வரும் பத்திரிகைகளான  யங் வேர்ல்டு (தி ஹிந்து),  தங்க மலர் (தினத்தந்தி), சிறுவர் மணி (தினமணி), சிறுவர் மலர் (தினமலர்) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றுடன் இணைத்து குழந்தைகளுக்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடிவினாப் போட்டி  ஆகியவற்றை நடத்தலாம். 

எந்தப் பத்திரிக்கை உதவியுடன் இதனை நடத்துகிறீர்களோ அந்தப் பத்திரிக்கை இலவசமாக இது குறித்து விளம்பரம் வெளியிடும். மேலும் இந்நிகழ்ச்சி குறித்த தகவலையும் செய்தியாகப் பிரசுரிக்கும். இதற்கெல்லாம் மேலாக பத்திரிக்கையுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினால், அது அதிக எண்ணிக்கையில் பங்கேற்பாளர்களைப் பெற உதவும். 

மேலும், ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையுடன் இணைத்து செயல்படுவது உங்கள் நிறுவனத்திற்கும் நற்பெயரை உருவாக்கும். 

                                                        ———இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil

Comments are closed.