காலையில் எழுந்தோம்; குளித்தோம்; உணவருந்தினோம்; அலுவலகம் சென்றோம்; வீடு திரும்பினோம், டி.வி. பார்த்தோம்; தூங்கினோம்.
என ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் தேவையென்றால். உக்கள் செயல்பாடுகளில் மாற்றம் தேவை உள்ளீட்டில் (input) மாற்றம் இருந்தால்தானே வெளியீட்டிலும் (Output) மாற்றம் வரும்.
நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. உள்ளதும் போய்விட்டால் நீரா உதவுவீர்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது.
குளத்தில், ஒருவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை ஒரு சிறிய மீன் கிடைக்கிறபோதும் ஆவலோடு எடுத்து பாத்திரத்தில் போட்டான். பெரிய மீன் கிடைக்கிறபோதெல்லாம், தன்னைத்தானே நொந்து கொண்டு திரும்பவும் குளத்துக்குள் எறிந்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அவருக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது. சற்று தயக்கத்துடன் அவனை அணுகி, ‘’தம்பி ! ஏனப்பா இப்படி செய்கிறாய்?” என்று கேட்டார்.
“என் வீட்டில் பெரிய மீன்களை வறுக்க சட்டி, இல்லை அதனால்தான் இப்படி செய்கிறேன்” என்றான்.
இவனை ஒரு அப்பாவி என்று நீங்கள் எண்ணினால், நீங்களும் பல நேரங்களில் அப்பாவியாக இருந்திருக்கிறீர்கள்.
ஆம்! எத்தனை முறை பெரிய, பெரிய வாய்ப்புகள் வந்தபோதெல்லாம். நம்மால் இது முடியாது என்று எண்ணி தவிர்த்திருப்பிர்கள்?
பெரிய ஆர்டர் வந்தபோது, என்னிடம் போதுமான பணம் இல்லை / ஆட்கள் இல்லை / இடமில்லை என்று தட்டிக் கழித்திருப்பீர்கள்!?
ஒவ்வொரு முறை உங்களது நண்பர்கள் தனியாக தொழில் தொடங்க அழைத்தபோது, தொழிலுக்கும், நமக்கும் தூரம் அதிகம்‘ என்று ஒதுங்கியிருப்பீர்கள்?
சிலர் இப்படி அப்பாவியாக இருந்தால், வேறு சிலர் வேறு மாதிரியான அப்பாவியாக இருக்கிறார்கள்.
ஒருவன் கையில் சிறிய வாளியை எடுத்துக் கொண்டு கடலுக்குச் சென்றான்.
கடல் நிறைய தண்ணீர் இருந்தும், அவனால் அதிக தண்ணீரைக் கொண்டு வர முடியவில்லை.
கையில் அவன் வாளியை சிறிதாக வைத்துக் கொண்டு ‘எனக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை’ என்ற புலம்பல் வேறு. இப்படித் தான் நாமும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
‘எனக்கு இந்தப் படிப்பு போதும்.’
‘நான் வெளியூருக்கு வேலை தேடி ச் செல்ல மாட்டேன்‘
‘நைட் ஷிப்ட் வேலை எனக்குப் பிடிக்காது,’
‘தொழில் தொடங்குவதென்றால் எனக்கு பயம், ’
‘பெரிய ஆர்டர்கள் நமக்கு ஒத்துவராது,’
‘நிறைய பணம் சம்பாதித்தால் நிம்மதி போய்விடும்’..
இப்படி ஒவ்வொரு முறை நீங்கள் எதிர்மறையாக சிந்திக்கிறபோதும், நீங்கள் சிறிய வாளியை கையில் ஏந்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். தவறு உங்களிடம் என்பதை உணர்வீர்கள்.
அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
உங்கள் சிந்தனையைப் பெரிதாக்க வேண்டும். பெரிய சிந்தனைதான் பெரிய வெற்றியைத் தரும்.
எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட சர் எட்மண்ட் ஹிலரி, நிலவில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தனி ஒரு குடும்பத்திற்காக 27 மாடிகள் கொண்ட வீட்டினைக் கட்டிய முகேஷ் அம்பானி என இவர்கள் தொடங்கி, உங்கள் தெருவில் உள்ள பெரிய கார் வைத்திருப்பவர், பெரிய வீடு கட்டியிருப்பவர், பெரிய கடை நடத்துபவர் என அனைவரும் பெரிதாய் சிந்தித்து வெற்றி பெற்றவர்களே.
பெரிதாய் சிந்திக்கச் சொன்னவுடன் உங்களுக்கு ஏற்படுகிற தயக்கம் என்னவென்றால் ‘ஒருவேளை அது நடக்காவிட்டால் நமது கனவு என்ன ஆவது?‘ என்பதுதான்.
இந்த எதிர்மறைச் சிந்தனைதான் உங்களைப் பின்னுக்கு இழுக்கிறது.
‘பெரிதாகச் சித்திப்போம்’. பெரிதே கிடைக்கும்‘ என்று எண்ணுங்கள்
ஐந்து மைல் தூரம் செல்ல வேண்டும் என்று எண்ணினால், உங்கள் மனம் நடந்து செல்வதா? சைக்கிளில் செல்வதா? என்று சிந்திக்கும்.
ஐம்பது மைல் தூரம் செல்ல வேண்டும் என்று எண்ணினால், பேருந்தில் செல்வதா? காரில் செல்வதா? என்று மாற்றி யோசிக்கும்.
ஆம்‘ நீங்கள் பயணிக்க விரும்பும் தூரத்தைப் பொறுத்தே உங்கள் வாகனமும் பயணத் திட்டமும் மாறுபடுகிறது.
——————— இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu