fbpx
குருவும், குதிரைக்காரனும் ! | The Teacher and a Horseman !

motivational speaker in tamil nadu
  • November 16, 2023

டூட்டி முடிந்தும் ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு வருவோரைப் பார்க்கும்போது, ‘அடப்பாவமே!’ என்றிருக்கும். இந்தக் குருவின் கதையும் அப்படியானதுதான்.

ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரைப் பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு வந்தபோது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும்தான். “பேசணும்னு வந்தாச்சு… இப்போ பேசாமப் போனா எப்படி… என்ன செய்யலாம்?” என்று அவனையே கேட்டார்.

அவன் சொன்னான், “ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. நான் புல் வைக்க லாயத்துக்குப் போகும்போது, ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்கிறது என்பதற்காக புல் வைக்காமல் வரமாட்டேன். அதற்கு உணவு கொடுத்துவிட்டுத்தான் வருவேன். நீங்கள் விரும்பினால், என் ஒருவனுக்காகப் பேசலாம் கேட்க நான் ரெடி” என்றான்

அந்தக் குதிரைக்காரனைப் பாராட்டி விட்டு, தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார் குரு. தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப்படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், “எப்படி இருந்தது.. ஒரே நாளில் பல அற்புதங்களைக் கற்றுத் தேர்ந்து விட்டாய் அல்லவா.?” என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.

அவன் சொன்னான், “ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும்போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் லாயத்தில் இருந்தால், நான் அந்த ஒரு குதிரைக்கான புல்லை மட்டும்தான் வைப்பேன்!” படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு.

மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். தங்களிடம் ஏகப்பட்ட பொருட்கள் இருக்கிறது என்பதற்காக, இருக்கிற எல்லாவற்றையும் சொல்லி வாடிக்கையாளர்களைக் குழப்பக்கூடாது என்பதே அவர்களுக்கான அடிப்படைப் பாடம். பலவற்றையும் ஒருங்கே கேட்டால், குழப்பம்தான் வருமே ஒழிய அவர்கள் எந்த முடிவுக்கும் வரமாட்டார்கள். வெட்டிப் பேச்சு, வீணாப் போச்சு என்பார்களே அந்தக் கதையாகி விடும்.

பேச்சு ஒரு பலம் என்றால், எங்கே, யாருக்காக, என்ன சூழலில் பேசுகிறோம் என்பது அதைவிட முக்கியம்.

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு மாணவன், குறிப்பிட்ட பாடம் கடினமாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்..? அவனுக்கு அதில் மனம் லயிக்கவில்லை என்பதுதான் பொருள். கஷ்டப்பட்டு படித்தால், எல்லாம் கடினம். இஷ்டப்பட்டு படிப்போருக்கு எல்லாமே சுலபம்! இதையே நமது செயல்களில் பொருத்திப் பார்த்தால், கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை… சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu

Comments are closed.