வால்மார்ட் (Wal Mart) என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகளில் ஒன்றாகும். இந்நிறுவனத்தை 1962ஆம் ஆண்டு திரு. சாம் வால்டன் (Mr. Sam Walton)
தனது மனைவி திருமதி. ஹெலன் (Mrs. Helen) உடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸ் (Arkansas) என்ற நகரில் தொடங்கினார்.
அப்போதுதான் அமெரிக்காவில் ‘தள்ளுபடி விற்பனை’ (Discount Sale) என்கிற கான்செப்ட் அறிமுகமான நேரம். இந்த உத்தியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது வால்மார்ட்.
பொருட்களின் லாபத்தைக் குறைத்து விற்பனையை அதிகப்படுத்துவதே இந்நிறுவனத்தின் முதன்மையான நோக்கம்.
பொருட்களின் மீதான லாபத்தைக் குறைவாக நிர்ணயிக்க வேண்டியிருந்ததால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கத் தொடங்கியது இந்நிறுவனம். இதன் காரணமாக மிகப் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது 24 நாடுகளில் 10,500 கடைகளை நடத்தி வருகிறது.
ஒரு சிறிய விதை பெரிய மரம் ஆனது எப்படி? இதோ வால்மார்ட் கடைபிடித்த சிக்கனமான நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
பிற கடைகளைவிட வால்மார்ட் தனது கடைகளின் வேலை நேரத்தை அதிகரித்தது. அங்காடியின் 10 சதவீத அளவையே இருப்பு வைக்கப் பயன்படுத்தியது. இதனால் மற்ற கடைகளை விட விற்பனை நிகழ்விற்கான இடம் பார்ப்பதற்குப் பெரிதாக இருந்தது; இருப்பில் தேவையின்றி முடங்கிக் கிடக்கும் பணமும் மிச்சமானது.
தங்கள் கடைகளில் எல்லாப் பொருட்களும் எந்நேரமும் விற்பனைக்கு கிடைக்குமாறு பார்த்துக் கொண்டது . அதே நேரம் எவ்வளவு பொருட்கள் விற்பனையாகுமோ, அந்த அளவுக்கு மட்டுமே இருப்பையும் கைவசம் வைத்திருந்தது.
சொன்னவுடன் பொருட்களைக் கொண்டு வந்து தரும் வகையில் சப்ளையர்களைப் பழக்கியது. சப்ளையர்களிடமிருந்து பொருள் கொள்முதல் செய்யும் முறையை கணினிமயமாக்கியதால் பொருட்களின் இருப்பு தீருமுன் அத்தகவல் உடனடியாக சப்ளையருக்கு அனுப்பப்பட்டது. பொருள் தீர்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே அவர்கள் பொருள்களை சப்ளை செய்யும் சிஸ்டத்தை உருவாக்கியது.
வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உணவுப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள், ஆயத்த ஆடைகள், உணவு வகைகள்… என கடுகு முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தையும் தமது கடைகளில் விற்பனை செய்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கடையை நாட வேண்டிய தேவை இல்லாமல் போனது. மேலும் அத்தியாவசியமான பொருட்களுக்கு எந்நேரமும் தள்ளுபடி வழங்கியது.
ஒவ்வொரு கிளையின் மேலாளருக்கும் முடிவு எடுக்கும் சுதந்திரத்தை வழங்கியது. ஒவ்வொரு கிளையுமே ஒரு லாபம் ஈட்டும் மையமாக உருவாக்கப்பட்டது. ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, நிறுவனத்தின் லாபத்தைப் பகிர்ந்து கொண்டது.
பொருட்களின் விலையைக்கூட அருகில் உள்ள போட்டியாளர்களை மனதில் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ளும் உரிமை கிளை மேலாளருக்கு வழங்கப்பட்டது.
பொது மேலாளர், கிளை மேலாளர் பொறுப்புகளில் மிகவும் நம்பகத்தன்மை உள்ளவர்களை நியமித்தது. நூறு ரூபாய் மதிப்புள்ள பொருள் போட்டியாளரால் ரூ.101 க்கு விற்கப்பட்டால், அந்தப் பொருள் வால்மார்ட்டில் ரூ. 99.90 க்கு கிடைத்தது.
போட்டியாளர் இல்லாத பகுதிகளில் அதே பொருளின் விலை ரூ. 105 ஆக விற்கப்பட்டது.
இப்படி பல உத்திகளை கையாண்டதால் வால்மார்ட்டின் கதை இன்றைக்கு வெற்றி பெற்ற நிறுவனங்களின் வரலாற்றில் இடம் பெற்று விட்டது.
———— இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil