வெற்றியாளர்கள் சரியான முடிவு எடுப்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், உடனடியாக முடிவு எடுப்பவர்கள் என்று உறுதியாகக் கூறலாம். இதற்கு ஒரு உதாரணம்.
ஒரு பெரிய தொழிற்சாலை. அங்கு ஆயிரம் பேருக்கு மேல் வேலை பார்த்து வந்தனர்.
ஒரு நாள், அதன் முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தார். அப்போது ஒருவன் மட்டும் வேலை செய்யமல் ஓரமாக படுத்து காலாட்டிக் கொண்டிருந்தான்.
முதலாளிக்கு கோபமோ கோபம்… இப்படி ஒருவனை வைத்திருந்தால் பிற தொழிலாளிகளும் கெட்டுப்போய் விடுவார்கள் என்று நினைத்தார்.
அவனை அழைத்து, “தம்பி! நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார்.
அவன் ஒன்றும் புரியாமல் முழித்துவிட்டு “மூவாயிரம் ரூபாய் சார்” என்றான்.
உடனே, பிற தொழிலாளிகளுக்கு முன்பு தன் பாக்கெட்டிலிருந்து ஆறாயிரம் ரூபாயை எடுத்து, “இதில் உன்னோட இரண்டு மாத சம்பளம் இருக்கிறது. சும்மா படுத்துக்கொண்டு இருப்பவனுக்கு சம்பளம் கொடுக்க இந்த ஃபேக்டரியை நடத்தவில்லை. நீ போகலாம்” என்றார்.
அவன் ஒரு நிமிடம் ‘திரு‘, ‘திரு‘ என முழித்துவிட்டு, அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே நடந்தான். மற்ற தொழிலாளர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள்.
முதலாளி மேலாளரைக் கூப்பிட்டு “இந்த மாதிரி ஆட்களை யார் வேலைக்குச் சேர்த்தது?” என்று கேட்டார்.
மேலாளர் பவ்யமாகச் சொன்னார்: “அவன் டீ கொண்டு வந்த பையன்” என்று.
இது ஒரு தொழிற்சாலையில் நடந்த சம்பவம்.
உடனுக்குடன் முடிவெடுக்கப் பழகிவிட்ட அந்த முதலாளி, தவறாக எடுத்த முடிவு இது.உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா? தான் எடுத்த முடிவுக்காக வருந்தவில்லை. அவர் இந்த முடிவின் மூலம் சொல்ல நினைத்தது, “ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் ஒருவரை வேலையில் வைத்திருக்கக்கூடாது” என்பதுதான்.
எனவே உடனடியாக, வேலை பார்பவர்களுக்கெல்லாம் யூனிஃபார்மும், அடையாள அட்டையும் தர உத்தரவிட்டு, திரும்பவும் தாம் இதுபோன்று தவறிழைக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஆம்! வெற்றியாளர்கள் சரியாக முடிவு எடுப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் உடனுக்குடன் முடிவெடுப்பார்கள்.
இந்தக் கோட்பாடு எல்லா வகையான முடிவுகளுக்கும் பொருந்துமா? இல்லை… சில நேரங்களில் மட்டும் இது பொருந்தாது. எப்போது?
முடிவுகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, கொள்கை ரீதியான முடிவுகள் (Policy Decisions). இரண்டாவது, அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது தொடர்பான முடிவுகள் (Executing Decisions). உதாரணத்திற்கு, எந்திரம் வாங்குதல் என்பது கொள்கை முடிவு. எந்த மாடல் எந்திரம், என்ன விலையில், எப்போது வாங்க வேண்டும் என்பது செயல்படுத்துதல் தொடர்பான முடிவு.
கொள்கை ரீதியான முடிவுகளை வெற்றியாளர்கள் உடனுக்குடன் எடுக்க மாட்டார்கள். குறித்த காலத்தை நிர்ணயித்துக் கொண்டு அந்தக் காலகட்டத்திற்குள், முடிவுகளுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் அவர்கள் முடிவை மேற்கொள்வார்கள்.
ஆனால், செயல்படுத்துதல் தொடர்பான முடிவுகளில், உடனுக்குடன் அவர்கள் முடிவு எடுத்து விடுவார்கள். அதுமட்டுமல்ல… தனக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் அந்த முடிவுகளை எதன் அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் தெரிவித்தால் உடனடியாக அந்தப் புகாரை யாரைக் கொண்டு, எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும்? ஒரு பணியாளர் தொடர்ந்து ஒரு வாரம் பணிக்கு வரவில்லை என்றால் அவரது வேலைகளை எப்படி பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்? என்பதையெல்லாம் தனக்குக் கீழே பணியாற்றும் மேலாளர்களுக்கு அழகாகச் சொல்லிக் கொடுத்துவிடுவார், ஒரு நல்ல வெற்றியாளர்.
எப்போதும் பிரச்சனைகளோடு வருகிற பணியாளர்களிடம் தீர்வுகளைச் சொல்லாமல், அவர்களையே முடிவுகளை எடுக்கப் பழக்குவதுதான் வெற்றியாளர்களின் வழக்கம்.
தற்போது நீங்கள் செய்ய வேண்டியது, நீங்கள் முடிவெடுக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கும் விஷயங்கள் குறித்த பட்டியலைத் தயாரியுங்கள். அவை கொள்கை முடிவா? அல்லது செயல்படுத்துதல் தொடர்பான முடிவா? என்று தீர்மானித்து அதற்கேற்ப முடிவுகளைத் திட்டமிடுங்கள். அத்தோடு நின்றுவிடாமல், உங்களுக்குக் கீழ் பணியாற்றுவோர் என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பதற்கு உங்களை நாடி வருகிறார்கள் என்று பார்த்து, அவர்களையே அந்த முடிவுகளை எடுக்கச் சொல்லிப் பழக்குங்கள்.