பொதுவாக எந்த ஒரு வியாபாரமுமே ஆரம்பிப்பது, கொள் முதலில் இருந்துதான். பொருளைக் கொள்முதல் செய்கிறபோது அந்தப் பொருளுக்குக் குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 5
விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுத்து (சிறிய தொழில் செய்பவராக இருந்தால், விசாரித்து), அவர்களிடமிருந்து விலைப் பட்டியலைப் பெறவேண்டும் .
இதனால், ஒரே பொருளைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதாவது, ஒரு தொழில்முனைவர் விற்பனைக்கு புதிய வாடிக்கையாளர்களைத் தேடி ஓடிக்கொண்டே இருப்பதுபோல புதுப்புது சப்ளையர்களையும் தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.
கொள்முதல் செய்யக்கூடிய மூலப்பொருட்களின் விலை குறைந்தாலே, நம் தயாரிப்பின் அடக்க விலை குறைந்துவிடும். நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும். பொதுவாக நம்மில் பலர், ஒரு நல்ல சப்ளையர் கிடைத்து விட்டால், அதில் மன நிறைவடைந்து வாழ்நாள் முழுவதும் அவரிடமே பணிகளைக் கொடுத்து அல்லது பொருட்களை வாங்கி விடுவோம்.
தரம் முக்கியம்தான்… ஆனால், புதிய தொழில் முனைவோரில் யாராவது தரமான பொருளை ஆரம்ப அறிமுகத்தில் குறைவான விலையில் தந்தால் அதையும் கவனித்து வாங்குவதுதான் புத்திசாலித்தனம்.
இதற்கு, பெரும்பாலும் சந்தை நிலவரத்தைக் கண்காணித்துக் கொண்டே இருப்பது அவசியம். லாபநோக்க வியபாரத்தில் விசுவாசம் இரண்டாம்பட்சம்தான்.
ஒரு நல்ல அச்சக நண்பர் கிடைத்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அவரிடமே அச்சுப் பணிகளைக் கொடுத்து விட்டு, ‘வேலை முடிந்தது’ என இருந்து விடக்கூடாது. இதனால் நமக்கு காகித விலை, மை விலை போன்றவை குறித்து அடிப்படை அறிவு கூட நாளடைவில் இல்லாமல் போகும். ஒருவரை நம்பிச் செயல்படுவதில் தவறில்லை.
ஆனால், அந்தப் பணியின் தன்மை தெளிவாகத் தெரிந்தால், முன்பு பணியைக் கொடுத்தவரிடம் பேரம் பேசி இன்னும் குறைந்த செலவில் தரமான சேவையைப் பெற வாய்ப்புகள் கிடைக்கும் இல்லையா..? எனவே கண்களை அகலத் திறந்து வைத்துக்கொண்டு, நாலாபுறமும் கவனம் செலுத்தி வியாபாரம் செய்வது விற்பனைக்கு முந்தைய லாபத்தை அதிகரிக்கும். இதை தொழிற்சாலைகளில் மட்டுமல்லாமல், அலுவலகங்களில் கூட பயன்படுத்த முடியும். எப்படி?
சென்ற மாத செலவுக் கணக்கை எடுத்துக்கொண்டு எந்தெந்த சப்ளையருக்கெல்லாம் நாம் பணம் வழங்கியிருக்கிறோம் என்ற பட்டியலைத் தயாரிக்க வேண்டும். முக்கிய மூலப்பொருள் தொடங்கி சாதாரண குண்டூசி வரை எல்லா விவரங்களையும் குறித்துக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் மூன்று சப்ளையர்களைத் தேர்ந்தெடுங்கள்.
ஆயிரங்களில் வியாபாரம் நடக்கிறது. பத்து, இருபது ரூபாய்களில் நேரத்தை செலவழிப்பது புத்திசாலித்தனம் என்று தோன்றுகிறதா..? நீங்கள் தான் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படையுங்கள்.
இதற்கெல்லாம் புதிய சப்ளையர்களை எங்கே தேடுவது என்ற அலுப்பு வருகிறதா..? அதற்கும் இருக்கிறது சிம்பிள் வழிகள்.
நம் நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் வேறு தகவல் பேசும்போது பத்தோடு பதினொன்றாக இந்த விவரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அவசியம் நேரும் போது கூகுளில் தேடிப் பார்க்கலாம்.
இப்படி தொடர்ந்து புதுப் புது சப்ளையர்களை அதிகரித்துக் கொண்டே இருந்தால் செலவுகளைக் குறைக்க முடியும்.
——-
இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker