fbpx
சர்க்கரை மனிதர்கள்! | Sugar men!

tamil business coach
  • May 20, 2023

களிமண், பஞ்சு, சர்க்கரை, என மனிதர்களில் மூன்று வகையினர் உண்டு.

பிரச்சனை என்கிற தண்ணீர் பட்டவுடன் இறுகிப் போகிறவர்கள் களிமண் மனிதர்கள், அவர்கள் பிரச்சனைகளை மீறி சிந்திப்பதில்லை; பிரச்சனைகளும் அவர்களை விட்டு விலகுவதில்லை.

தண்ணீரில் மூழ்கும்போது சற்று சுருங்கினாலும், யாருடைய உதவியையாவது பெற்று மீண்டும் பழைய நிலைக்கு வருபவர்கள் பஞ்சு மனிதர்கள்.

சர்க்கரை மனிதர்கள் சற்று வித்தியாசமானவர்கள். தண்ணீரில் கலந்தாலும் தண்ணீரையே இனிப்பாக்கக் கூடியவர்கள். இவர்களே பிரச்னைகளின்போது வாய்ப்புகளை கண்டறிகிறார்கள்.

இவற்றில் நீங்கள் எந்த வகை என்பது முக்கியமல்ல. எந்த வகையான மனிதர்களை உடன் வைத்திருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

ஒரு வெற்றியாளர் எப்போதும் சர்க்கரை மனிதர்களையே உடன் வைத்திருக்கிறார்

வெற்றியாளர்களிடம் இருக்கக்கூடிய மிகப் பெரிய வலிமையே அவர்கள் தனித்து இயங்குபவர்கள் அல்ல: பலரையும் உடன் சேர்த்துக் கொண்டு முன்னேறுபவர்கள். அதேபோல் எந்தெந்த வேலைகளை, உடனிருக்கும் எவரெவரிடம் பிரித்து கொடுக்க வேண்டும் என்கிற தெளிவும் அவர்களுக்கு உண்டு.

அந்த தெளிவு உங்களுக்கு வரவேண்டுமென்றால் இதோ, இந்தப் பயிற்சியை முயற்சித்துப் பாருங்கள்.

ஒரு பேப்பர், பேனாவை எடுத்துக்கொண்டு, தொடர்ந்தாற்போல் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டுமானால், உங்களுடைய வேலைகளையெல்லாம் யார் யாருக்கு பகிர்ந்தளிப்பீர்கள்? என்ற கேள்விக்கு விடையளியுங்கள்.

‘நான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்தவாறே அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்ற கதையெல்லாம் வேண்டாம்.

உங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கு அவரவருக்கான இலக்குகள், பொறுப்புகள், முடிவெடுக்கும் எல்லைகள் ஆகியவற்றை சரியாக வரையறுத்துக் கொடுத்துவிட்டால் இது சாத்தியமே.

‘என் தொழில் பணப்பழக்கம் அதிகம், இதெல்லாம் முடியாது என்று நீங்கள் எண்ணினால், இதே தொழிலை கார்ப்பரேட் நிறுவனம் போன்று செய்யக்கூடிய உங்களது போட்டியாளர்களை பற்றி சற்று சிந்தித்து பாருங்கள்

கோடிக்கணக்கில் பணம் புழங்கக்கூடிய நகைக்கடைகள் கூட இன்றைக்கு உரிமையாளர்களின் நேரடி மேற்பார்வையில்லாமல் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுவதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

ஒரு தொழில் முனைவர் ஜெயிக்கிற குதிரையாக இருந்தால் மட்டும் போதாது பத்துக் குதிரைகளையாவது உருவாக்குகிற பயிற்சியாளராகவும் இருக்க வேண்டும் பணக்காரர்கள் இதைத்தான் செய்கிறார்கள். தாம் மட்டும் பணியாற்றாமல் தமக்கு கீழ் பணியாற்ற பத்துப் பேரையாவது அவர்கள் உருவாக்குகிறார்கள்.

டாட்டாவும், பிர்லாவும், அம்பானியும், அதானியும் கல்லாவில் உட்கார்ந்து வரவு செலவு கணக்கு பார்ப்பதில்லை; ஆர்டர் எடுக்க கடைகடையாக ஏறி இறங்குவதில்லை; கடன் கேட்டு வங்கிகளுக்கு நேரில் செல்வதில்லை; ஆனால், இவை எல்லாவற்றையும் மேற்கொள்ள தகுதியான மனிதர்கள் நியமித்து விடுகிறார்கள்

அண்மையில் ஒரு தனியார் நிதி நிறுவன அதிபரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனமாகும். பலருக்கும் கடன் கொடுத்து மீண்டும் கடன்களையெல்லாம் திறம்பட வசூலித்து சிறப்பாக இயங்கி வருகிறது அந்த நிறுவனம்.

“நிதி நிறுவனம் என்றாலே வாராக்கடன்கள் அதிகமாக இருக்குமே… எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்று நாம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் ஆச்சர்யம் தந்தது.

உண்மைதான், பணம் தராமல் ஏமாற்றிவிட்டு செல்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் உயர் பதவியில் பணியாற்றி, ஓய்வு பெற்ற சிலரை பணிக்கு அமர்த்தியிருக்கிறோம். அவர்கள் காவல் துறையினரிடம் முறைப்படி புகார் அளித்து பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க எங்களுக்கு உதவுகிறார்கள்.

அதுபோல், வாராக்கடன்கள் குறித்த வழக்குகளைக் கையாளவும் தகுதி வாய்ந்த ஓய்வு பெற்ற வழக்கறிஞர்களை உடன் வைத்திருக்கிறோம். இப்படி அந்தந்த துறை சார்ந்த மனிதர்களை உடன் வைத்திருப்பதால், சட்டத்தை முறையாகப் பின்பற்றி எளிதாக கடன்களை வசூலிக்க முடிகிறது. புரிந்து கொள்ளுங்கள். நமக்குத்தான் அவை பிரச்னை, ஆனால், அவர்களுக்கு அவை அன்றாட செயல்” என்றார்

தங்களுக்குக் கீழ் பணியாற்ற அறிவாளிகளை அவர்கள் வேளைக்கு வைத்து கொள்கிறார்கள்.

ஆக பணக்காரர்களைப் போன்று வேலைகளைப் பகிர்ந்தளித்தலையும், உடன் அறிவாளிகளை வைத்து கொள்ளுதலையும், உரியவர்களிடம் பிரச்சனைகளைத் தீர்க்க பொறுப்புகளை ஒப்படைத்தலையும் கற்றுக் கொண்டால் நீங்களும் அதேபோன்று உயரலாம்.

 

– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker

Comments are closed.