நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்மையில் ஒரு நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் பல ஆண்டுகளாக ஒரு ‘பேக்கிங் யூனிட்’ நடத்த ஆவல் கொண்டிருந்தது தெரியும்.
எனவே, “உங்கள் பேக்கிங் தொழில் ஐடியா வெல்லாம் எந்த அளவில் இருக்கிறது?” என்று கேட்டதற்கு, “இல்ல சார்… நமக்கு சுட்டுப்போட்டாலும் அக்கவுண்ட்ஸ் வராது… அதான் நம்மால எப்படி கணக்கு, வழக்கெல்லாம் பராமரிக்க முடியும்னுட்டு அந்த ஆசையவே கை கழுவிட்டேன்” என்றார்.
இதைக் கேட்டதும் ‘திக்’கென்றிருந்தது. இவர் மட்டுமல்ல… இவரைப் போல் பலருக்கும், வெவ்வேறு விதமான தாழ்வு மனப்பான்மைகள் உள்ளன .
எந்தச் சிக்கலையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததே இதற்குக் காரணம். எப்போதும், எதைக் குறித்தேனும் தாழ்வு மனப்பான்மையை நாம் ஏற்படுத்திக் கொள்வதால் முன்னேற்றம் தள்ளிப் போகிறது.
‘எனக்கு ஆங்கிலம் பேச வராது,’ ‘எனக்கு மார்க்கெட்டிங் தெரியாது,’ ‘எனக்கு பணத்தை கையாலத் தெரியாது,’ ‘எனக்குத் திட்டமிடுதலே வராது,’ ‘நான் பெரிய செலவாளி’ என்று நம்மைப்பற்றி நாமே எதிர்மறை யான கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம்.
உங்களின் மனம் கவர்ந்த தொழிலதிபர்கள் சிலரை மனக்கண் முன் கொண்டு வாருங்கள்… உங்களிடம் எந்தத் திறமைகளெல்லாம் இல்லை என்று நினைக்கிறீர்களோ, அவையெல்லாம் அவர்களிடமும் இல்லாமல் இருந்திருக்கும். அவற்றைக் கடந்து தான் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மேலும் தொழில் தொடங்கி வெற்றி பெற்ற அனைவருக்கும் எல்லாமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அதற்கான அவசியமும் இல்லை. மேலும், அது சாத்தியமும் கிடையாது. எல்லாத் தடைகளையும் தாண்டி வர நமக்கு ‘அடிப்படை அறிவு’ (Common sense) ஒன்றே போதும்.
அப்படியானால் பிற திறமைகள் அவசியமில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நாம் அப்படிச் சொல்ல வரவில்லை. பிற திறமைகள் நம்மிடம் இல்லை என்று ஏங்கி உட்கார்ந்துதிருப்பதைவிட, நம்மிடம் உள்ள திறமைகளை வைத்து முன்னோக்கிச் செல்லலாம் அல்லவா? எந்தத் திறமை நமக்கு குறைவு என்று எண்ணுகிறோமோ, அந்தத் திறமை கொண்ட சரியான நபரை பணியில் அமர்த்திக் கொள்ளலாம்.
வெற்றியின் முதல்படியே நம் பலமும் பலவீனமும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான்.
ஒரு சான்று பார்ப்போம்… ‘எனக்கு கார் ஓட்டத் தெரியாது’ என்று நீங்கள் கருதி, கார் வாங்க ஆசை இருந்தும் வாங்காமல் இருக்கலாம். இதனால் உங்கள் தொழில் தொடர்பான வேலைகளுக்கு இரு சக்கர வாகனத்திலோ அல்லது மூன்று சக்கர வாகனத்திலோ சென்று வந்து கொண்டிருக்கலாம்.
இதற்குத் தீர்வு என்ன?
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து நீங்கள் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்.
கார் நன்கு ஓட்டத் தெரிந்த ஒருவரை வேலைக்கு அமர்த்தலாம்.
கார் ஏதேனும் பழுதுபட்டால் அதனை சீர் செய்வது பற்றி புத்தகங்களில் படித்தோ, பிறரிடம் கேட்டோ தெரிந்து கொள்ளலாம்.
காரில் ஏதேனும் உதிரி பாகங்களை மாற்ற நேர்ந்தால், அது குறித்து கார் வைத்திருக்கும் உங்களது நண்பர்களிடமோ அல்லது நம்பிக்கையான ஓரிரண்டு மெக்கானிக்குகளிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காரை உங்கள் பயன்பாட்டிற்கு வாங்குகிறபோது இதுபோன்ற அடிப்படை அறிவு இருந்தால் போதும்.
ஆனால் காரை வைத்து டிராவல்ஸ் தொழில் நடத்துகின்றபோது உங்களுக்கு இன்னும் தெளிந்த அறிவு வேண்டும்.
எந்தெந்த பிராண்டில், எந்தெந்த மாடல் கார்கள் அதிக மைலேஜ் கொடுக்கும்?
எந்தக் காரில் எது போன்ற கோளாறுகள் அதிகம் ஏற்படும்?
எது நீண்ட நேரப் பயணத்திற்கு ஏற்றது?
எந்தெந்த மாடல்களுக்கு மறுவிற்பனை விலை அதிகம்?
வாடகைக் கார் தொழில் புரிய உரிமம் வேண்டுமா?
வாடகைக் கார் தொழில் நடத்தினால் என்னென்ன வரிகள் செலுத்த வேண்டும்?
மாநிலம் வாரியாக பெர்மிட் வாங்க யாரை அணுக வேண்டும்… எவ்வளவு செலவாகும்?
பவர் பிரேக். எம்.பி.எஃப்.ஐ. எந்திரம், யெல்லோ போர்ட்… போன்றவற்றின் பொருள் என்ன?
கேஸ், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களில் சிக்கனமானது மற்றும் பாதுகாப்பானது எது?
இப்படி… எவ்வளவு ஆழமாகவும், அதிகமாகவும், விவரங்களைத் தெரிந்து கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் லாபகரமாக தொழில் நடத்த முடியும். இல்லையென்றால், இவை பற்றியெல்லாம் நன்கு தெரிந்த ஒருவரை ஆலோசகராகவோ அல்லது பங்குதாரராகவோ உடன் வைத்துக் கொள்ளலாம்.
ஆக, ஒன்றைப் பயன்படுத்துவதற்கும், தொழிலாக மேற்கொள்வதற்கும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களில் வித்தியாசம் உண்டு. ஒன்றை அடைய முயன்றால் சில நாட்களிலேயே தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் கொஞ்சம் காசை இழந்து, அனுபவத்தின் அடிப்படையில் ‘பட்டுத்’ தெரிந்து கொள்ளலாம். அதை விடுத்து ‘எனக்கு தெரியாது; நான் செய்யமாட்டேன்’ என்று தாழ்வு மனப்பான்மையோடு இருப்பது பயன் தராது.
விற்பனை என்பது நம் உடம்பில் ஊறிய ஒரு விஷயம். நாம் நம்மையும் அறியாமலேயே தினம் தினம் எதையாவது பேசி விற்பனை செய்து கொண்டோ அல்லது விற்பனைக்கு உதவிக் கொண்டோதான் இருக்கின்றோம்.
நீங்கள் புதிதாக வாங்கிய ஒரு கடிகாரம் பற்றி உங்கள் நண்பர் விசாரிக்க, ‘ஆஹா… ரொம்பப் பிரமாதமாக இருக்கிறது’ என்று சொல்லி அவரையும் வாங்கத் தூண்டியிருப்பீர்கள். ஆக உங்கள் பேச்சில் ஒரு கடிகாரம் விற்பனையானது.
அதேபோல் நீங்கள் பார்த்த சினிமா, படித்த கதை, போய் வந்த சுற்றுலா, வாங்கிய சட்டை… இப்படி எவையெல்லாம் உங்களை ஈர்த்ததோ, அதைப் பற்றியெல்லாம் பிறரிடம் பகிர்ந்து கொண்டு, அவற்றின் விற்பனைக்கு மறைமுகமாக உதவி இருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள்… உங்களுக்கா விற்கத் தெரியாது? உண்மையில் உங்களுக்கு தெரியாதது, உங்களுக்கும் விற்கத் தெரியும் என்ற உண்மைதான்.
எந்தப் பொருளையும் வியந்து பாராட்டினால், பிறர் வாங்கி விடுகின்றனர் அல்லவா? அதே உத்தியை உங்கள் பொருளுக்கும் பயன்படுத்தலாமே… உங்கள் பொருளைப் பற்றி உயர்வாக எடுத்துச் சொன்னால், அது விற்பனைக்கான பேச்சுதானே.
இது போன்றுதான் இன்னபிறவும்… உங்களுக்கு ஆங்கிலமும், கம்ப்யூட்டரும் தெரியவில்லை என்றால் என்ன? அதைப் பற்றி தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். மேடையில் ஆங்கிலம் பேச வேண்டுமானாலோ, கம்ப்யூட்டரில் ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் கொடுக்க வேண்டும் என்றாலும் அவர்களின் உதவியோடு களத்தில் இறங்குங்கள்.
நமக்கு ஒரு செயல் தெரியாது என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
திருப்பூரிலும், சிவகாசியிலும் இருக்கும் தொழில் முனைவர்கள் ஜப்பான், கொரியா, சீனா, இந்தோனேசியா என மொழி தெரியாத பல நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளவில்லையா? எனவே, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு, தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு தாழ்வை உருவாக்குங்கள். நீங்கள் உயர்வது நிச்சயம்.
—– இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil