ஒரு விவசாயியின் நிலத்தில் இருந்த பயன்படாத பழைய கிணற்றில் ஒரு கழுதை விழுந்து விட்டது. கிணறு மிக ஆழமாக இருந்ததால் கழுதையால் மேலே ஏறி வர இயலவில்லை.
அந்தக் கழுதை இறந்துவிடுமோ என்று வருத்தப்பட்ட விவசாயி, அதைக் காப்பாற்ற ஒரு பெரிய பலகையை உள்ளே இறக்கி அதைத் தூக்க முயற்சித்தார். ஆனால் கழுதையோ அதில் ஏற மறுத்துவிட்டது. வேறு வழியில்லாததால் கழுதையைக் காப்பாற்றும் முயற்சியைக் கைவிட்டு, அடுத்து எந்த உயிருக்கும் பாதிப்பு வந்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் தனது நிலத்தில் இருந்த கிணற்றை மூடத் தொடங்கினார்.
ஒவ்வொரு முறை மண்ணை அள்ளிக் கொட்டத் தொடங்கும்போது கழுதை மீது மண் தெறிக்கும். கழுதையோ உதறிவிட்டு அந்த மண்ணின் மீது ஏறி நிற்கும். இப்படி ஒவ்வொரு முறை மண்ணைக் கொட்டும் போதும் கழுதை மேலே ஏறி முன்னேறத் தொடங்கியது. எந்த மண் கழுதையைக் கொன்றுவிடும் என்று விவசாயி அஞ்சினாரோ, அதுவே கழுதையைக் காப்பாற்றத் தொடங்கியது. சிறுக சிறுக மண்ணைக் கொட்டி, கிணற்றை நிரப்ப… இறுதியில் கழுதை வெளியே ஓடுயதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனார் அந்த விவசாயி.
உங்கள் வாழ்க்கையிலும் சில நேரங்களில் இதுபோன்ற சிரமங்கள் தோன்றியிருக்கலாம். எது உங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று அஞ்சினீர்களோ, அதுவே உங்கள் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கக் கூடும். நமக்கு பாறாங்கற்களாகத் தெரிந்த சிக்கல்களே படிக்கற்களாக மாறி வெற்றிச் சிகரத்திற்கு நம்மை அழைத்துச் சென்றிருக்கும்.
‘சக்சஸ் இஸ் எ மேட்டர் ஆஃப் டிசிஷன்’ (Success is a matter of decision) என்று ஆங்கிலத்தில் பிரபலமான ஒரு பொன்மொழி உண்டு. வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும், எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும். என்றாலும் கூட தொழில் முனைவோருக்கு இது முக்கியமான பொன்மொழி ஆகும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் எடுக்கின்ற முடிவுகளே உங்களது வெற்றிகளைத் தீர்மானிக்கின்றன. நீங்கள் பள்ளியில் படிக்கும்போது இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் உங்களுக்கு இடம் கிடைத்திருக்கலாம். அதில் ஏதேனும் ஒரு பள்ளியை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கக் கூடும். அந்த முடிவுக்கு மாற்றாக நீங்கள் மற்றொரு பள்ளியைத் தேர்ந்தெடுத்தி ருந்தால், ஒருவேளை உங்களது வாழ்க்கை ஒட்டு மொத்தமாக வேறொரு பாதையில் பயணித்திருக்கும்.
நீங்கள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு உங்களுக்கு சில நிறுவனங்களில் வேலை கிடைத்து இருக்கக்கூடும். அதில் ஒரு நிறுவனத்திற்கு மாற்றாக மற்றொரு நிறுவனத்தில் நீங்கள் வேலைக்குச் சேர்ந்திருந்தால், அதில் பல புதிய உத்திகளைக் கற்றுக்கொண்டு அங்கு கிடைத்த வெவ்வேறு மனிதர்களின் தொடர்பால் நீங்கள் வாழ்க்கையில் வேறு நிலைக்குச் சென்றிருக்க முடியும். (“நீங்க நடிக்க வராட்டி…?: டாக்டர்ராகி இருப்பேன்” –பேட்டிகளை நினைவு கூறாதீர்கள், ப்ளீஸ்)
உங்கள் தொழிலிலும் கூட தலைமைப் பதவிக்கான நேர்முகத் தேர்வுக்கு நீங்கள் அழைத்த மூவரில் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மாற்றாக, மற்ற இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இருந்தால் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி வேறுவிதமாக இருந்திருக்கக் கூடும்.
இந்த மாற்று முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு மிகப் பெரிய வளர்ச்சியை தந்திருக்கலாம். அல்லது மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி இருக்கலாம். இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, ‘ஒவ்வொரு முடிவுமே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கவல்லது’ என்பதுதான். எனவே முடிவு எடுக்கும்போது கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். நதியின் போக்கில் இலை மிதந்து போகும். சிறு இடையூறும் அதன் போக்கை மாற்றும். அதையும் மீறி க ரை ஒதுங்காமல் பயணித்தால்தான் கரைசேரும்.
ஒரு உதாரணத்துக்கு இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
‘காவிரி’, ‘வைகை’ என இரண்டு மினரல் வாட்டர் நிறுவனங்கள். இவை இரண்டுமே ஓரளவு மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நிறுவனங்களாகும். பொதுவாக, அவ்வப்போது தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இவ்விரண்டு நிறுவனங்களும் தொடர்ந்து வெவ்வேறு வகையான முடிவுகளை மேற்கொண்டன. அவை என்ன மாதிரி விளைவுகளை நிறுவனத்திற்கு ஏற்படுத்தின என்பதை நாம் பார்ப்போம்.
சூழ்நிலை; 1. தண்ணீர் எடுக்க கிராமவாசிகள் தடை;
இந்த இரண்டு மினரல் வாட்டர் நிறுவனங்களுமே சென்னை புறநகர் பகுதியில் உள்ள அடுத்தடுத்த கிராமங்களில் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளால் தங்களது கிராமங்களில் இருக்கும் நிலத்தடி நீர் குறைந்து விடுமோ என்கிற அச்சம் காரணமாக, இரண்டு கிராம மக்களும் போராட்டம், மறியல் என எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
காவேரி நிறுவனம் கிராமத்தாருடன் பல கட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்தி தீர்வு ஏற்படாத காரணத்தால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து. பிறகு தொழிலைத் தொடர இடையூறாக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்திலும் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது.
ஆனால் வைகை நிறுவனமோ, கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அந்த கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் தலா ஒருவருக்கு வேலை தருவது என்கிற தீர்வை முன்வைத்து. மேலும் கிராமப் பஞ்சாயத்து வரியை சற்று கூடுதலாக தருவதாக பக்குவமாகப் பேசி சரி கட்டியது. மக்களுக்காக தொடக்கப்பள்ளி ஒன்றையும் கட்டித் தர முன்வந்தது.
இரண்டு கிராம மக்களும் தங்கள் எதிர்ப்பை தற்காலிகமாக கைவிட்டனர்.
சூழ்நிலை; 2. போலி தண்ணீர் பாட்டிலில் பாட்டில்கள் சந்தையில் விற்பனை;
காய்த்த மரம் கல்லடி படும் என்பது பழமொழி. வளர்ந்த பிராண்ட் போலியால் அடிபடும் என்பது வணிக மொழி. இதற்கு இந்த இரண்டு நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.
பொதுவாக பிரசித்தி பெற்ற பிராண்ட் பெயரில் போலி தண்ணீர் பாட்டில்கள், கடைகளில் விற்கப்படுவது முதலில் அந்தப் பகுதி முகவர்களுக்கு தான் தெரியவரும். அவர்கள் உடனடியாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்தி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் காவிரி நிறுவனத்திற்கும், வைகை நிறுவனத்திற்கும் இந்தத் தகவல் அவர்களது டீலர்கள் மூலமாக கிடைக்கவில்லை. அந்தந்த நிறுவனங்களின் விற்பனை பிரதிநிதிகளே கண்டறிந்து கூறினர்.
டீலர்கள் இது பற்றி கவனமாக இல்லாததைக் கண்டித்து சில பகுதி முகவர்களை நீக்கியது, காவேரி நிறுவனம். பிறகு காவல்துறை உதவியுடன் போலி உற்பத்தியாளரைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது.
வைகை நிறுவனமோ, டீலர்களை அழைத்து கூட்டம் நடத்தி போலிகளைக் கண்டறிவோருக்கு ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்தது. போலிகளில் இருந்து தமது பிராண்டை காப்பாற்றுவதற்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேக்குகளில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவது என சில உள் நடவடிக்கைகளில் இறங்கியது. பத்திரிகைகளிலும் போலி பிராண்ட் பற்றிய தகவல்களை வெளியிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இருதியாக காவல்துறைக்கும் புகார் கொடுத்தது. இரு நிறுவனங்களும் போலி பிரச்சினையில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற்றன.
சூழ்நிலை; 3. ஒரே டீலர் பல பிராண்ட் தண்ணீர் பாட்டில்களில் விற்பனை செய்தல்:
எப்பொழுதுமே கடுமை காட்டி வியாபாரம் செய்யும் காவேரி நிறுவனம் சில டீலர்கள் பல பிராண்ட் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து வந்ததால் தம்முடைய டீலர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியது. இதனால் டீலர்கள், தங்களது மனைவி, மக்கள் பெயரில் வெவ்வேறு கம்பெனிகளைத் தொடங்கி பிற பிராண்ட் தண்ணீர் பாட்டில்களை விற்றனர்.
வைகை நிறுவனமோ தனது பிராண்ட் தண்ணீர் பாட்டில்களை அதிக எண்ணிக்கையில் விற்போருக்கு போட்டியாளர்களை விட சில மடங்கு கூடுதல் ஊக்கத் தொகை தருவதாக அறிவித்தது. டீலர்களை சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங்கிற்கும் அழைத்துச் செல்ல முன் வந்தது. இந்த முடிவால் வைகைக்கு டீலர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.
டீலர் பிரச்சினை ஓவர்.
சூழ்நிலை; 4. சம்பளப் பற்றாக்குறை காரணமாக தொழிலாளர்கள் வேலையை விடுதல்;
இரண்டு நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவிலும், சந்தைப் பிரிவிலும் தொழிலாளர்கள் பலர் சம்பளப் பற்றாக்குறை காரணமாக வேலையை விட்டு நிற்கத் தொடங்கினர். உடனே காவிரி நிறுவனம், பிற அண்டை மாநிலத்தில் இருந்து ஆட்களை இங்கே அழைத்து வந்து தங்க இடம் கொடுத்து, மூன்று வேளை உணவு வழங்கி தொழிலை நடத்தியது. இதனால் காவிரி நிறுவனத்திற்கு செலவுகள் அதிகமானது.
ஆனால் நயமாகப் பேசி சமாளிக்கும் வைகை நிறுவனமோ தொழிலாளர்களுடன் கலந்து பேசி உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரித்துக் கொடுத்தால் அதற்கு ஏற்றார்போல் அதிக ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவித்தது. இதனால் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்தது.
சூழ்நிலை; 5. விரிவாக்கத் திட்டத்திற்கு கூடுதல் முதலீடு தேவைப்படுதல்;
இரண்டு நிறுவனங்களுக்குமே விற்பனை நன்றாக நடைபெற்றது. இதனால் இவை தொழிலை விரிவாக்க திட்டமிட்டன. இதற்கு சில கோடிகள் முதலீடாக தேவைப்பட்டன. காவேரி நிறுவனம் வங்கியை அனுகி இத்தொகையைக் கடனாகப் பெற்றது .
ஆனால், வைகை நிறுவனமோ சில பங்குதாரர்களை உடன் சேர்த்துக் கொண்டது. பணத்தை கடனாக பெறாமல் முதலீடாக பெற்றதால் வட்டி கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. லாபம் வந்தபோது அந்த லாபத் தொகையை அவர்களுக்கு பகிர்ந்தளித்தது.
சூழ்நிலை; 6.புதியபேக்குகளை அறிமுகப்படுத்துதல்;
காவிரி நிறுவனம் தமது செலவுகளை அதிகரித்ததால் அது விற்பனையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. எனவே அதிகமாக விற்பனையாகும் 250 மிலி. வாட்டர் பாட்டில் விற்பனையிலும் காலடி எடுத்து வைத்தது. அதில் லாபம் குறைவாக இருந்தாலும், விற்பனை பன்மடங்கு உயர்ந்ததால் அந்நிறுவனத்தின் பணப் பற்றாக்குறை தீர்ந்தது.
வைகை நிறுவனமோ 2லி, 5லி, 20லி என கூடுதல் அளவு கொண்ட வாட்டர் பாட்டில்களையும், கேண்களையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இவை குறைந்த எண்ணிக்கையில் விற்றாலும், கூடுதல் லாபத்தை ஈட்டித் தந்தது. இதனால் வைகைக்கும் லாபம் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த ஆறு சூழ்நிலைகளையும், இரண்டு நிறுவனங்களும் சமாளித்த விதத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது…? இரு நிறுவனங்களும் சில சரியான முடிவுகளையும் சில தவறான முடிவுகளையும் எடுத்தது புரிந்திருக்கும். வைகை செலவுகளை அதிகரித்துக் கொண்டே வந்தது. காவேரி, அடிப்படையை ஆட்டங்காண வைக்கும் முடிவுகளில் ரிஸ்க் எடுத்தது. இருப்பினும் இரண்டுமே வெற்றி கண்டன.
ஒவ்வொரு முடிவும் நிறுவனத்திற்கு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த சான்றுகள் உதவியிருக்கும்.
— இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker