‘டார்கெட் டேட்டா‘ (Target Data), ‘டேஷ் போர்ட் டேட்டா (Dash Board Data) – இந்த இரண்டு பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அயல்நாட்டில், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் அதிகம் பயன்படுத்துகிற சொற்கள் இவை.
ஒரு மாதம் தொடர்ந்தாற்போல் நீண்ட தூரம் கார் ஓட்டுபவர்கள், தாம் எங்கு செல்ல வேண்டும்? எவ்வளவு நேரத்தில் செல்ல வேண்டும்? வழியில் எங்கெங்கு நிறுத்த வேண்டும்? எவ்வளவு பெட்ரோல் தேவை? என்பன போன்ற தகவல்களை திட்டமிட்டுக் கொள்வார்கள். அதாவது நாள் வாரியான திட்டமிடல் மற்றும் வாரத்திற்கு ஒருமுறை திட்டமிடல் போன்றவற்றை மேற்கொள்வர்.
டார்கெட் டேட்டா என்பது, நாம் சேரவேண்டிய இடத்தைக் குறிக்கும். டேஷ் போர்ட் டேட்டா என்பது ஒவ்வொரு நாள் இரவும் தான் இன்று எவ்வளவு தூரம் பயணித்தோம்? வாகன பாகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றனவா? என்பது பற்றியும், மறுநாள் எங்கெங்கு செல்ல வேண்டும்? அதற்கு தேவைப்படக்கூடிய எரிபொருள், எஞ்சினுக்கான எண்ணெய், தண்ணீரின் தேவை, டயரில் காற்றின் அளவு போன்றவற்றை பரிசோதித்து வைத்துக் கொள்வதைக் குறிக்கும்.
இந்தத் தகவல்களை துல்லியமாக கண்காணித்துக் கொண்டே வருபவரால்தான் சிரமம் ஏதுமின்றி வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்ய முடியும்.
இது வாகனத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் அப்படியே பொருந்தும். அடுத்த 5 ஆண்டுகளில் நாம் வாழ்க்கையில் எந்த நிலைக்கு செல்ல விரும்புகிறோம் என்று டார்கெட் டேட்டாவை வரையறுத்து விட்டு நாள்தோறும் இரவு 10 நிமிடங்கள் ஒதுக்கி அன்றைக்கு என்னென்ன வேலைகள் செய்தோம்? மறுநாள் என்னென்ன வேலைகளைச் செய்ய இருக்கிறோம்? நாம் இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோமா? என்று யோசிக்க வேண்டும்.
நீங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது உங்கள் ஆசிரியர், ‘’தேர்வு எழுதி முடித்தவுடன் பரீட்சை பேப்பரை ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் நிறைய கவனக் குறைவான பிழைகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்து விடலாம்” என்று அடிக்கடி சொல்லியிருப்பாரல்லவா? அதைப் போன்றதுதான் இதுவும்.
பணக்காரர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அன்றாடம் டேஷ் போர்டு டேட்டாவைப் பார்த்துப் பார்த்து, அன்றைய நாளின் நிகழ்வுகளை வைத்து அடுத்த நாளின் பயணத்தை திட்டமிட்டுக் கொண்டே வருகிறார்கள். இதனால்தான் இவர்களால் வெற்றி பெற முடிகிறது.
சூசி வெல்ச் என்ற நிர்வாகவியலாளர், ‘10-10-10 கான்செப்ட்‘ என்ற புதிய தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
அதன்படி, இலக்கை அடைய விரும்புவோர், தாம் அடுத்த 10 நாட்கள், 10 மாதங்கள், 10 வருடங்கள் என்ன செய்ய வேண்டும் என திட்டமிடலை 3 பிரிவுகளாக வகுத்துக் கொள்ள வேண்டும். அதாவது குறுகிய கால, நடுத்தர கால, நீண்ட கால திட்டங்களாக நம் இலக்கினை வகுத்துக் கொண்டு பயணித்தால், நிச்சயம் வெற்றி பெற முடியும் என்கிறார் அவர்.
–ராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu