மின்சாரக் கட்டணங்கள் இப்போது ஷாக் அடிக்கும் செலவு விஷயமாக மாறி வருகின்றன.
ஒரு நிறுவனத்தின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என்று வைத்துக் கொள்ளுங்கள். காலை 10 மணிக்கு வரும் ஊழியர் தன் வேலைகளை மாலை 6 மணிக்குள் முடிக்க முடியாமல் போகிறது. அவர், தன் தனிப்பட்ட நேரத்தில் அன்று இரவு 11 மணிவரை இருந்து வேலைகளை முடித்து விட்டு செல்கிறார்.
ஒரு ஊழியர்தானே என்பதற்காக, ஒரு டியூப் லைட், ஒரு பேன் மட்டுமே ஓடாது. மொத்த அறையின் மின்சாரமும் பயன்படுத்தப்படும். ஒரு வகையில் பார்த்தால், அந்தத் ‘தியாகி’ ஊழியர், தன் நேரத்தை அலுவலகத்துக்காக செலவிட்டு வேலையை முடித்து விட்டுச் செல்கிறார். நல்ல விஷயம்தான்.
இதையே, இன்னொரு கோணத்தில் யோசியுங்கள். (என்ன இன்னொரு கோணம்… இதுதான் முதலாளியின் சிந்தனையாக இருக்க வேண்டும்.)
குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க முடியாத, திறமையற்ற ஊழியரால், தேவையற்ற வீண் செலவு… அவர் அலுவலகத்தில் இருக்கும்வரை அவரது டீம் ஆட்கள் இருந்தாக வேண்டிய கட்டாயம்… அவர்களால் ஏறும் மின்சாரச் செலவு… இதிலெல்லாம் சிக்கன முறைகளை நடைமுறைப்படுத்த முடியும் தானே!
எலக்ட்ரிகல் சூப்பர்வைசரை வைத்து ஆண்டுதோறும் மின்சார உபயோகம் தொடர்பான ஆடிட்டிங் மேற்கொள்ளலாம். தேவையற்ற வகையிலான மின்சாரப் பயன்பாட்டைக் கண்டறிந்து அதைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
மிகப் பழைய சாதனங்கள் அதிக மின்சாரத்தை எடுக்கும். ஆதலால் அவற்றை தவிர்த்து, புதிய சாதனங்களைப் பொருத்தலாம். சிலவிடங்களில் டியூப் லைட்டுக்கு மாற்றாக மின்சார சிக்கனம் வாய்ந்த எல்.இ.டி (LED)பல்புகளைப் பயன்படுத்தலாம்.
அலங்கார விளக்குகளைத் தவிர்த்துவிட்டு சாதாரண விளக்குகளையே அலுவலகங்களில் பயன்படுத்தலாம்.
அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் காற்றாலையை வாங்கி, அதன் மூலம் மின் கட்டணத்தைக் குறைக்கலாம். காற்றாலைகளில் இருந்து உற்பத்தி ஆகும் கூடுதல் மின்சாரத்தை அரசே வாங்கிக் கொள்ளும். அந்த முதலீட்டிற்கும் வரிவிலக்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
—– இராம்குமார் சிங்காரம், Best Media Trainer in Tamil Nadu