fbpx
பணக்காரர்கள் வேலை செய்வதில்லை ! | Rich people don’t work!

rich people don't work
  • May 12, 2023

‘நான் ரொம்ப பிஸி’ என்று சொல்ற ரகமா நீங்கள்?

அப்படியென்றால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது!

ஒரு உண்மை தெரியுமா..? பணக்காரர்கள் பொதுவாக வேலை . செய்வதில்லை.

நீங்கள் நம்பாவிட்டாலும், இதுதான் யதார்த்தம்.

பணக்காரர்கள் அன்றாடம் வாகனம் ஓட்டுவதில்லை; கடிதம் எழுதுவதில்லை; பிழை திருத்தம் பார்ப்பதில்லை, கூட்டல், கழித்தல் கணக்கு போடுவதில்லை,

இந்த வேலைகளையெல்லாம் தகுதியான ஆட்களிடம் பிரித்துக் கொடுத்துவிட்டு, அவர்கள் தங்களது நேரத்தைப் பெரும்பாலும் சிந்திப்பதற்கே செலவிடுகிறார்கள். எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும், விற்பனை உத்திகளை வகுப்ப தற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்குமே அவர்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

அன்றாட வேலைகளில் ஈடுபடுவது என்பது, டிரைவர் சீட்டில் அமர்ந்து கார் ஓட்டுவது போன்றது. உங்களது முழு கவனமும் சாலையின் மீதே இருக்கும். ஆனால், சிந்தனை சார்ந்த

வேலைகளில் ஈடுபடுவது என்பது, பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பது போன்றது. போக்குவரத்தால் பாதிக்கப்படாமல் நிதானமாக நீங்கள் திட்டமிட முடியும்.

நீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமென்றால் எந்த வேலையையும் செய்யக்கூடாது என்று நாம் சொன்னதும், உங்கள் மனதில் எழும் அடுத்த கேள்வி, ‘பிறரிடம் வேலையைப் பகிர்ந்தளிக்கிறபோது, அவர்கள் நம்மைப் போன்று துல்லியமாகவும், சரியாகவும் செய்வதில்லையே?” என்பதுதானே?

வேலையைப் பகிர்ந்தளிக்கிறபோது ஆரம்பத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் தவறுகள் புரியத்தான் செய்வார்கள். அவர்களைத் தொடர்ந்து முறையாகப் பயிற்றுவித்தால், உங்கள் தேவைக்கேற்ப அவர்களை உருவாக்க முடியும். இதைத்தான் வெற்றியாளர்கள் செய்கிறார்கள்.

நீங்கள் மேற்கொள்கிற சில வேலைகளை உங்கள் வீட்டுப் பிள்ளைகளிடம் கொடுத்துப் பாருங்கள். அவர்கள் இன்னும் அழகாகச் செய்யக்கூடும்.

சென்ற கோடை விடுமுறையில் எங்கள் உறவினர் செந்தில்நாதன் என்பவரது குடும்பத்துடன் ஊட்டிக்குச் சென்றிருந்தோம் கிளம்பியதில் இருந்து திரும்பவும் வீட்டிற்கு வரும் வரை ஏற்படக்கூடிய செலவுகள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொள்ளும் வேலையை 9 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகனிடம் ஒப்படைத்தோம். நாங்கள்

எதிர்பார்த்ததை விட மிகத் துல்லியமாக அவன் செலவுகளை எழுதியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எனவே, யாரையும் குறைந்து எடைபோட வேண்டிய அவசியமில்லை. வாய்ப்புகளை வழங்கி, முறையான பயிற்சியும் கொடுத்தால் எவரையும் நம் தேவைக்கேற்ப மாற்ற முடியும்.

வேலைகளைப் பிறரிடம் பிரித்துக் கொடுப்பதால், நீங்கள் எப்போதும் பிஸியாகவே இருக்கத் தேவையில்லை. இனிமேல் யாராவது உங்களிடம் ‘நான் பிஸி!’ என்று சொன்னால், அவர் டிரைவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் போலும் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் டிரைவர் சீட்டில் அமர வேண்டுமா? அல்லது பின் சீட்டில் அமர வேண்டுமா? என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. ஒவ்வொரு வேலையும் உங்கள் டேபிளுக்கு வருகிறபோது அதை ‘நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்று பிடிவாதம் பிடித்தால் டிரைவர் சீட்டில் அமர்கிறீர்கள் என்று பொருள். அதைத் தகுதியானவரிடம் பிரித்துக் கொடுத்து அதனை மேற்பார்வையிடத் தொடங்கினால், பின் சீட்டில் அமருகிறீர்கள் என்று அர்த்தும். மேற்பார்வையிடுவது என்பது மிகவும் அவசியம். ‘பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்’ என்பதுபோல் மேற்பார்வையிடாத வேலைகள் முறையாக முடிவடையாது.

நாம் என்னதான் நம்பிக்கைக்குரிய மனிதர்களிடம் வேலைகளை பகிர்ந்தளித்தாலும் கூட, அவர்கள் சிறப்பாக செயல்படுகிற வகையில் System வகுக்க வேண்டும்.

காஷ்மீரில் தபால்பெட்டியில் போடப்படுகிற ஒரு தபால், கன்னியாகுமரியில் உள்ள நேரு குறுக்குத் தெருவில் வசிக்கும் முருகேன் என்பவருக்கு சரியான முறையில் சென்றடைகிறது என்றால், அதற்கு காரணம் அஞ்சல்துறையில் செயல்படும் முறைமைகள் (Systems) தான்.

நீங்கள் ஒரு வாரத்திற்கு வெளிநாடு செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, உங்களின் உதவி இல்லாமல் உங்கள் நிறுவனமும், உங்கள் இல்லமும் தொடர்ந்து இயங்குமானால், நீங்கள் பிறரிடம் சரியாக எல்ல வேலைகளையும் பிரித்தளித்து, அவர்கள் செயல்படும் முறைகளையும் ஒழுங்காக வரையறுத்து இருக்கிறீர்கள் என்று பொருள்.

மாறாக, சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உங்களை தொலைபேசியில் அழைத்து, தொந்தரவு செய்கிறார்கள் என்றால், நீங்கள் பிறரிடம் சரியாக வேலையை பிரித்தளிக்கவில்லை அல்லது அவர்கள் செயல்படும் விதத்தை சரியாக வரையறுக்கவில்லை என்று அர்த்தம்.

உங்களுக்கு உங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தத் தெரியவில்லை என்றால், அதற்கென்று இருக்கக்கூடிய ஐ.எஸ்.ஓ. (International Organization for Standardisation) எனப்படும் பணி நிர்ணய முறைகளை வகுப்பதில் கைதேர்ந்த ஆலோசகர்களை அணுகலாம்.

 

– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker

Comments are closed.