கையில் பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களோடு 12 ஆம் வகுப்பு படித்த 10 மாணவர்களின் பெயர்களை வரிசையாக எழுதுங்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் அதற்கு அருகிலேயே எழுதிக் கொள்ளுங்கள்.
இப்போது யோசித்துப் பாருங்கள்… எல்லோரும் ஒரே பள்ளியில், ஒரே விதமான ஆசிரியர்களால், ஒரே சூழலில், ஒரே காலகட்டத்தில் வளர்ந்தீர்கள். அப்படியானால், இன்றைக்கு எல்லோரும் ஒரே நிலையில் அல்லவா இருக்க வேண்டும்?
ஆனால், உண்மை நிலை என்ன? ஒருவர் கோடீஸ்வரராகவும், ஒருவர் லட்சாதிபதியாகவும், ஒருவர் அரசு ஊழியராகவும், ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராகவும், ஒருவர் தந்தையாருடைய தொழிலில் ஈடுபட்டிருப்பவராகவும், ஒருவர் ஏழையாகவும்… என வெவ்வேறு நிலைகளில் இருப்பதை நீங்கள் உணர முடியும்.
இதற்குக் காரணம் என்ன?
அவரவருடைய எண்ணமும், எண்ணத்தின் மீதான நம்பிக்கையும்தான்!
YOU THINK, SO YOU ARE என்று ஆங்கிலத்தில் ஓரு பழமொழி இருக்கிறது. தமிழில் கூட, ‘நீங்கள் எதுவாக ஆக நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆவீர்கள்‘ என்றும் சொல்வது உண்டு.
ஆக, சூழலைக் காட்டிலும், கல்வியைக் காட்டிலும், காலகட்டத்தைக் காட்டிலும், மிக முக்கியமானவை நம்முடைய எண்ணங்கள்தான். நீங்கள் எதை நினைத்தாலும் அதை அடைய முடியும். ஆனால், நமக்கு உள்ள பிரச்சனையே என்னவென்றால், நமக்கு எதையுமே பெரியதாக நினைக்கத் தெரியாததுதான்.
‘என் நண்பனைப் போலத்தான் நானும் வெற்றியாளனாக வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அவன் ஆகிவிட்டான்; என்னால் ஆக முடியவில்லையே! ஏன்?’ என்று நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் பெரிதாக நினைத்தால் மட்டும் போதாது. அதை உண்மை என்று உங்கள் மனம் நம்பவும் வேண்டும். அப்படி உங்கள் மனதை நம்பச் செய்யாத காரணத்தால்தான், உங்களால் அவரைப் போல ஆக முடியவில்லை.
எடுத்துக்காட்டாக, அதே +2 வகுப்புத் தோழர்களில், உங்களைவிட வசதி குறைவான நிலையில் இருக்கக்கூடிய ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஏன் உங்கள் அளவிற்கு வாழ்வில் உயர முடியவில்லை என்று யோசியுங்கள்.
உங்கள் அளவிற்கு அவர் சிந்திக்காததும், அப்படி தன்னால் உயர முடியும் என்று அவர் நம்பாததும்தான் காரணம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
அடுத்த கேள்வி… அடுத்த 20 ஆண்டுகளில், உங்களுக்கு மொத்தமாக எவ்வளவு பணம் தேவைப்படும்? என்று யோசித்து அதே பேப்பரில் விடை எழுதுங்கள்.
பொதுவாக, நீங்கள் எழுதி இருக்கக்கூடிய விடை 20 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாய்க்குள்ளாகத்தான் இருக்கும். அதற்கும் அதிகமாக எழுதியிருந்தால், உங்களுக்கு நமது வாழ்த்துக்கள். உங்கள் மனம் சற்று பெரியதாகச் சிந்திக்கும் தகுதியைக் கொண்டிருக்கிறது.
ஆனால், பொதுவாக எல்லோரும் சிறிதாகத்தான் சிந்திக்கிறார்கள். ஏனெனில், காலம் காலமாகவே நம்முடைய மனம் சிறிதாகவே சிந்திக்கப் பழகிவிட்டது. ‘அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதே‘, ‘அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு‘, ‘பேராசை பெருநஷ்டம்‘ என்றெல்லாம் நம் மனதில் பதிந்துள்ள எதிர்மறை எண்ணங்களே இதற்குக் காரணம்.
மேலும் நம் மனதில், தோல்வியுற்றோரின் பிம்பங்கள் ஆழமாகப் பதிந்திருப்பதால், அதிகம் ஆசைப்பட்டால் நாமும் தோற்று விடுவோம் என்ற பயம் ஏற்பட்டு விடுகிறது.
சிந்திக்கவே முடியாவிட்டால் பிறகு நாம் எப்படி சம்பாதிப்பது? எனவே, முதலில் நீங்கள் பெரியதாகச் சிந்திக்க வேண்டும்; பிறகு, அதனை அடைய முடியும் என்றும் நம்ப வேண்டும்.
கனவுகளும், எண்ணங்களும், நம்பிக்கைகளும் வெற்றியாளராவதற்கு அவசியம் என்றாலும் கூட, நாள்தோறும் நேரம் ஒதுக்கி அதற்கான பயிற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றியாளராக முடியும்.
அந்த வகையில், இப்போது நீங்கள் செய்ய வேண்டியது, வாழ்க்கையில் இதுவரை நீங்கள் அடைந்த வெற்றிகளைப் பேப்பரில் பட்டியலிட வேண்டும். அது, சின்ன வயதில் ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் ஆறுதல் பரிசாக வென்ற சோப்பு டப்பாவில் இருந்து, நேற்று நீங்கள் அடைந்த வெற்றி வரை எல்லாவற்றையும் பட்டியலிடுங்கள். அடுத்து இவற்றை நாள்தோறும் ஒருமுறையாவது புரட்டிப் பாருங்கள். இப்படிச் செய்வதால், உங்கள் மனதிற்கு – நீங்கள் இனிமேல் அடைய விரும்பும் இலக்குகளையும், இதுபோன்று நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை அழுத்தமாக ஏற்படும்.
எனவே, எவ்வளவுக்கெவ்வளவு அதிக எண்ணிக்கையில் வெற்றிகளை நீங்கள் நினைவு கூர்ந்து பட்டியலிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் மனம் தம்மாலும் சாதிக்க முடியும் என்று நம்பத் தொடங்கும். முயற்சித்துப் பாருங்கள்.
இராம்குமார் சிங்காரம், motivational speaker in tamil