சிக்கனம் பற்றிப் பேசும்போது, பராமரிப்பும் மிக முக்கியமான ஒரு விஷயம்.
எலக்ட்ரானிக் பொருட்களையும் ஆட்டோமொபைல் பொருட்களையும் தொடர்ந்து முறையாகப் பராமரித்தால் அவை நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடும்.
சிறிய சிறிய பராமரிப்புச் செலவுகள், பெரிய முதலீட்டுச் செலவுகளைத் தள்ளிப்போட உதவும். எந்த ஓர் இரு சக்கர வாகனத்தையும் மூன்று மாதங்கள் அல்லது 2,000 கிலோ மீட்டர் தூரப் பயன்பாட்டிற்கு ஒரு முறை சர்வீஸ் செய்யுங்கள்.
கம்ப்யூட்டர், பிரிண்டர், ஏர் கண்டிஷனர், ஃபிரிட்ஜ் போன்றவற்றை 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை பயன்பாட்டுக்கு தக்கவாறு பராமரிக்க வேண்டும். எந்தெந்தப் பொருட்களை எந்தெந்த மாதம் ‘கவனிக்க’ வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு அலுவலகத்தில் ஃபைல் போட்டுக் கொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மறக்காமல் இருக்கும்.
பொதுவாக வாகனங்கள், இயந்திரங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே காப்பீட்டுப் பாலிசிகளை தொழில் முனைவோர் எடுப்பது வழக்கம். ஆனால் கம்ப்யூட்டர், நாற்காலி, மேசைகள், நகலெடுக்கும் இயந்திரங்கள், சிறிய கருவிகள் என அலுவலகத்திலிருக்கும் ஒட்டு மொத்தப் பொருட்களையும்கூட காப்பீடு செய்யலாம்.
விபத்து, பூகம்பம், கலவரம் போன்றவற்றால் இழப்பு ஏற்படும் அபாயத்தில் இருந்து மீண்டுவர இவை பெரிதும் உதவியாக இருக்கும். இதனைச் செலவாகப் பார்க்காமல் முதலீடாகக் கருத வேண்டும்.
பொதுவாக மோட்டார் வாகனங்களை ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் கழிந்தவுடன் விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கி விடுவதுதான் நல்லது. காரணம், பழைய வாகனத்தின் பராமரிப்புச் செலவு அதிகமாவது ஒருபக்கம், மைலேஜ் தராமல் போவது மறுபக்கம் அவ்வப்போது பழுதாகி மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.
உங்கள் நிறுவனத்தில் நிறைய வாகனங்கள் இருந்தால் அவற்றை ஒப்பிட்டு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல் ஆடிட் (Petrol Audit) மேற்கொள்வது நல்லது. ஒரு லிட்டருக்கு எந்தெந்த வாகனம் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதை பார்த்து குறைவான மைலேஜ் தரும் வாகனங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி பெட்ரோலுக்கு ஆகும் செலவைக் குறைக்கலாம். வாகனங்களை நம்பியிருக்கும் டிராவல்ஸ், கார்கோ, கூரியர் நிறுவனங்களுக்கு இதுபோன்ற ஆடிட் மிகவும் அவசியம்.
வெளியூர் பயணங்களைப் பொறுத்தவரையில் முன்கூட்டியே திட்டமிட்டால் அவற்றின் செலவு குறையும். பயணம் சுகமாக அமையும். பொதுவாக 300 கி.மீ. தூரம் தாண்டி பயணம் மேற்கொள்வதாக இருந்தால் ரயிலில் பயணம் செய்வதே சிக்கனமானது. குறைந்தது, ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டால் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டே பயணித்து வரலாம்.
விமானப் பயணமாக இருந்தால் முன்பதிவுத் திட்டத்தை பயன்படுத்தி விமானக் கட்டணத்தில் பெருமளவு குறைக்கலாம். சென்னையிலிருந்து டெல்லி செல்ல தோராயமாக 5 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவு செய்தால் 3 ஆயிரம் ரூபாயிலேயே கூட செலவை முடித்து விடலாம்.
மேலும் குறைந்த கட்டணங்களில் இயக்கப்படும் விமான சேவைகளையும் பயன்படுத்தி செலவைக் குறைக்கலாம்.
சிறிய செலவுகளில் சிக்கனம் தேவைதானா? என்பது பலரும் குழம்பும் விஷயம். இதில் ஒரே ஒரு தெளிவு இருந்தால் போதும். நீங்கள் கஞ்சனாக இருக்கக் கூடாது. ஆனால், அதே சமயம், ஊதாரித்தனமான செலவுகளைக் குறைக்கும் புத்திசாலியாகவும் இருக்க வேண்டும். அதுதானே கெட்டிக்காரத்தனம்.
பேப்பர், கவர், விசிட்டிங் கார்டு போன்ற சிறிய செலவுகளைக் கட்டுப்படுத்துவதால், என்ன பெரிதாக லாபம் வந்துவிடப் போகிறது? என்று நீங்கள் கேட்கலாம். அன்றாடப் பயன்பாடுகளில் சிக்கனத்தை மேற்கொண்டால் மொத்தச் செலவில் 2% முதல் 3% வரை குறைக்கலாம்.
இப்படி குறைப்பதால், உங்கள் நிறுவனத்தில் லாபம் 2% முதல் 3% வரை அதிகரிக்கும்.
அன்னியன் பட பாணியில் சொல்ல வேண்டுமானால், ஒரு நாளைக்கு 50 காசை ஒருவர் மிச்சப்படுத்தினால் அது பெரிய விஷயமில்லை அதையே, 50 நாட்கள், 50 பேர் தலா 50 காசுகளை மிச்சப்படுத்தினால் செலவு குறையுமா… குறையாதா.?
மொத்தத்தில் செலவைக் குறைப்பது என்பது ஒரு மனப்பழக்கமாக மாறினால் லாபம் நிச்சயம்!
—– இராம்குமார் சிங்காரம், Best media trainer in tamil nadu