ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! மப்பும் மந்தாரமுமாக இருந்த வானத்தில் சூரியனைக் காணோம். கண்களைக் கீழே இறக்கியபோது, தூங்கி எழுந்து சோம்பல் முறித்த பிச்சைக்காரன் தென்பட்டான். அரசரைப் பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு ஒளி பிறந்தது. ‘அரசே! என்று கையெடுத்து கும்பிட்டு மண்டியிட்டால். ஆனால், அரசனின் மனநிலை வேறுமாதிரி இருந்தது. போயும் போயும் இவன் முகத்தில் நாம் விழித்தோமே! என்று வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் அரண்மனைச் சுவர் அவரது தலையை பதம் பார்த்துவிட்டது. அடிபட்ட இடத்தில் ரத்தம் வழியத் தொடங்க அரசருக்கு வந்ததே கோபம்.
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. “இந்தக் கேடுகெட்ட முகத்தில் விழித்ததற்கு எனக்குக் கிடைத்த பரிசைப் பாருங்கள்! எனது காயத்துக்கு காரணமாக இருந்த இந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுங்கள்! என்று அதிரடி தன்டனை கொடுத்தார் மன்னர். உதவி கிடைக்கும். வாழ்க்கை வளமாகும். அரசர் நமக்கு ஏதோ பெரிதாக அள்ளித் தரப்போகிறார்…’ என்ற கனவோடு வந்த பிச்சைக்காரனுக்கு அதிர்ச்சிதான். ஆனால், அவன் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் பழகிப் போயிருந்ததால், அவன் கலங்கவில்லை; அவன் வாழ்க்கையில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. குடும்பமா, குட்டியா… ஒரு வேளைக் கஞ்சி தானே பிரச்சனை! எனவே, மன்னனை எதிர்க்கது துணிந்தான். கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… ‘பைத்தியக்காரனே! சாகுமுன் கடைசியாக ஒருமுறை சிரித்துக் கொள்ள நினைத்தாயா…?” என்று ஆத்திரத்துடன் கேட்டார். பிச்சைக்காரன் நிதானமாக சொன்னான். ‘அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே… அதை நினைத்தேன், சிரித்தேன். கேடுகெட்ட முகம் எதுவென்று அனைவரும் உணர்ந்திருப்பார்கள்” என்றான்.
மன்னன் தலை அவமானத்தில் கவிழ்ந்து விட்டது. தனது தவறை உணர்ந்து, தண்டனையை ரத்து செய்த மன்னன், பிச்சைக்காரனுக்கு உணவும் உடையும் அளித்து விடுதலை செய்தான்.
பிரச்னையான நேரத்தில் அழுது புலம்புவதை விட்டு, தீர்வைச் தேடுவதே புத்திசாலித்தனம். ஆபத்துக் கால தன்னம்பிக்கை, உயிரையும் காக்கும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker