ஊரெல்லாம் மழை, கொசுக்களுக்கு கொண்டாட்டம். கூட்டமாக கும்மியடித்தன. புதிய தலைமுறைக்கு பறக்கும் பிராக்டீஸ் நடைபெற்றது. முதல் முறையாக பல்வேறு வீடுகளுக்குள் பறந்து சென்ற குட்டிக் கொசு, திரும்பி வந்தது. ‘பறக்கும்போது எப்படி உணர்ந்தாய்?” என்று தாய்க் கொசு விசாரித்தது.
“மிக அற்புதமாக இருந்தது அம்மா. நான் பறக்கும் அழகைப் பார்த்து அனைத்து வீடுகளிலும் கை தட்டினார்கள்” என்று குட்டிக் கொசு கூறியது. இதை குழந்தை மனசு என்றும் சொல்லலாம். அப்பாவித்தனம் என்றும் சொல்லலாம். ஆக்கபூர்வமான சிந்தனையாகவும் கொள்ளலாம். கதைக்கு வருவோம். ஒரு நாள் ஒரு விவசாயியின் கழுதை கிணற்றில் விழுந்துவிட்டது. பல மணி நேரமாக அந்தக் கழுதை பரிதாபமாக அழுதுகொண்டேயிருந்தது. கழுதைக்கு வயதாகிவிட்டது என்பதால், அதனை கிணற்றிலிருந்து எடுத்துக் காப்பாற்றும் செலவுக்குக் கூட அதனால் கிடைக்கும் பயன் இருக்காது என்று முடிவெடுத்தான் விவசாயி.
அதனால், அப்படியே விட்டுவிட்டான். ஆனால், கழுதையில் உயிர்பய அலறல் ஊராரை எரிச்சலூட்டியது. விவசாயியிடம் சென்று திட்டித் தீர்க்க ஆரம்பித்தனர். இறுதியில் கழுதையை அந்த கிணற்றிலேயே புதைத்துவிடுவது என்று அந்த விவசாயி முடிவு செய்ய, கிணற்றை மூடுவதற்கு அண்டை அயலாரும் உதவ முன்வந்தனர். ஆளுக்கு ஒரு மண்வெட்டி எடுத்துக் கொண்டு மண்ணை வெட்டி கிணற்றில் கொட்டினார்கள்.
தன் மேலே வந்து விழுந்த மண்ணைப் பார்த்து, பயந்து போன கழுதை அலறலை அதிகப்படுத்தியது. இதனால், மண்ணின் வேகம் அதிகமானது. ‘என்ன நடக்கிறது?’ என்பதைப் புரிந்த கொண்டது அந்தக் கழுதை. உடனே, அழுவதை நிறுத்திவிட்டு அமைதியாகி விட்டது. தன்மீது விழும் மண்ணை உதறித் தள்ளிக் கொண்டு, சிலுப்புவதைப் பார்த்த விவசாயி மிகுந்த வியப்படைந்தார். தன் மீது கொட்டப்பட்ட மண்ணை எல்லாம் அந்தக் கழுதை உதறி கீழே தள்ளிவிட்டு, அந்த மண்ணையே படியாக வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக கிணற்றுக்கு மேலே வந்து கொண்டிருந்தது. விரைவில் அந்தக் கழுதை கிணற்றின் விளிம்புக்கு வந்து சேர்ந்ததுடன், கிணற்றிலிருந்து மேலே ஏறி தரைக்கும் வந்துவிட்டது. விவசாயி அதன் புத்திசாலித்தனத்தை எண்ணி அதை ஆர்வத்துடன் தாவி அணைக்கப் போனான். கழுதை அவனைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி ஓடி, காட்டுக்குள் சென்றது. ஊரார் இக்காட்சியைக் கண்டு மலைத்து நின்றனர். இதுதான் வாழ்க்கை! நீங்கள் இளைத்துப் போனால், உலகம் உங்கள் மீது மண்ணையும், புழுதியையும் வாரிக் கொட்டிக் கொண்டுதான் இருக்கும். அதில் புதைந்து விடாமல், மேலே ஏறி முன்னேறப் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்மறையான கொட்டிக் நிகழ்வுகளையும்
நேர்மறை எண்ணத்தோடு, பாஸிட்டிவாகப் பார்க்கப் பழகிக் கொண்டால், உச்சம் தொடலாம்.
– இராம்குமார் சிங்காரம்