முடிவுகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, கொள்கை ரீதியான முடிவுகள் (Policy Decisions). இரண்டாவது, அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது தொடர்பான முடிவுகள் (Executing Decisions). உதாரணத்திற்கு, கார் வாங்குதல் என்பது கொள்கை முடிவு. எந்த மாடல் கார், என்ன விலையில், எப்போது வாங்க வேண்டும் என்பது செயப்படுத்துதல் தொடர்பான முடிவு.
கொள்கை ரீதியான முடிவுகளை வெற்றியாளர்கள் உடனுக்குடன் எடுக்க மாட்டார்கள். குறித்த காலத்தை நிர்ணயித்துக் கொண்டு அந்தக் காலகட்டத்திற்குள், முடிவுகளுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் அவர்கள் முடிவை மேற்கொள்வார்கள்.
ஆனால், செயல்படுத்துதல் தொடர்பான முடிவுகளில், உடனுக்குடன் அவர்கள் முடிவு செய்து விடுவார்கள். அது மட்டுமல்ல… தனக்கு கீழ் பணியாற்றுபவர்கள் அந்த முடிவுகளை எதன் அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் தெரிவித்தால் உடனடியாக அந்தப் புகாரை யாரைக் கொண்டு, எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும்? ஒரு பணியாளர் தொடர்ந்து ஒரு வாரம் பணிக்கு வரவில்லை என்றால் அவரது வேலைகளை எப்படி பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்? என்பதையெல்லாம் தமது நிறுவன மேலாளர்களுக்கு அழகாகச் சொல்லிக் கொடுத்துவிடுவார், ஒரு நல்ல பணிக்காரர்.
எப்போதும் பிரச்னைகளோடு வருகிற பணியாளர்களிடம் தீர்வுகளைச் சொல்லாமல், அவர்களையே முடிவுகளை எடுக்கப் பழக்குவதுதான் பணிக்காரர்களின் வழக்கம்.
-ராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil