fbpx
திட்டமிட்டுச் செலவிடுங்கள் | Plan and spend

motivational speaker in tamil
  • May 26, 2022

விவசாய நிலத்தின் நடுவில் ஒரு பாறை இருந்தது. நிலத்தை உழுவதற்கு அந்தப் பாறை மிகவும் இடையூறாக இருந்தது.

பூமிக்கு அடியில் பாறை எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று தெரியாத காரணத்தால் அதை நீக்குகின்ற சிந்தனையே விவசாயிக்கு எழாமல் போனது. மிகப்பெரிய பாறையாக இருக்கும். அதை நீக்குவது எளிதல்ல என்று கருதினார். 

ஒரு முறை ஏர் ஓட்டிச் செல்லும்போது அவரது கால் பாறையில் மோதி ரத்தம் கொட்டத் தொடங்கியது. வெறுத்துப்போன அந்த உழவர் வேறு வழியின்றி எவ்வளவு செலவானாலும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை அந்தப் பாறையை நீக்கியே தீருவது என்று முடிவு எடுத்து ஆட்களை அழைத்து வந்தார். 

நீண்ட காலமாக இருந்து வந்த அந்தப் பாறையை அனைவரும் சேர்ந்து உடைக்கத் தொடங்கினர். என்ன வியப்பு அரை மணி நேரத்திலேயே பாறை முழுவதும் பெயர்ந்து வந்து விட்டது. இந்த சின்னப் பாறைக்கா இத்தனை காலம் பயந்தோம் என்றெண்ணி வெட்கப்பட்டார் உழவர். 

சிக்கல் வரும்போது அதை உடனே எதிர் கொள்வது நல்லது. பிரச்சனையைக் கண்டு பயந்து நாம் ஒதுங்கத் தொடங்கினால் நமக்கு மன உளைச்சலும், பொருள் இழப்பும் தான் ஏற்படுமே தவிர சிக்கல் தீராது. 

 கொஞ்சம் புரியும்படி சொன்னால், சிக்கல் என்பது நாய் போன்றது. நாம் ஓடத் தொடங்கினால், அது துரத்தும் நாம் நின்று எதிர்கொண்டால் அது திரும்பி ஓடத் தொடங்கும். 

நம்மைப் பயமுறுத்துகின்றன செலவுகளும் இதை போன்றவையே. நாம் கவனிக்காமல் விட்டாலோ அல்லது ஒதுங்கிப் போனாலோ செலவு நம்மை பயமுறுத்தும் அளவுக்கு பெரிதாகி விடக்கூடும். ஆனால், நாம் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, ஒப்பிட்டுப் பார்த்து, தேவைதானா என்று சிந்திக்கத் தொடங்கினால் செலவு கணிசமாகக் குறையும். 

பயணத்தைத் திட்டமிட்டால் பணத்தை சேமிக்கலாம். 

பயணம் தொடர்பான செலவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் விமானப் பயணம் மேற்கொள்வோர் இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டால் செலவுகள் 30 முதல் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. 

ரயில் பயணம் எனில் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக பயணத்தைத் திட்டமிடலாம். அதனால் பயணத்தில் கட்டணக் குறைவு எதுவும் இருக்காது என்றாலும் மன உளைச்சல் மிச்சமாகும். மேலும் கடைசி நேரத்தில் பயணச்சீட்டு கிடைக்காமல் போனால் அதற்கென தட்கலுக்குக் கூடுதலாக செலவழிக்கும் பணத்தை கணக்கில் கொண்டால் நிச்சயம் பணம் மிச்சமே. தங்குகின்ற ஓட்டல்களும் இப்போது முன்பதிவுச் சலுகைகள் வந்துவிட்டன. 3 மாதங்களுக்கு முன்பே நாம் முன்பதிவு செய்து விடலாம். 

முன்பதிவு செய்கின்ற போது பல நேரங்களில் அவசர வேலை காரணமாக அடிக்கடி பயணத்தை ரத்து செய்ய நேரிடுகிறது. இதனால் முன்பதிவு செய்த கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை வீணாகப் போகிறதே என்று உங்களுக்குள் ஒரு எண்ணம் தோன்றலாம். 

உண்மைதான். 10 முறை முன்பதிவு செய்கிறபோது ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ ரத்து செய்வதால் ஏற்படும் செலவு ஈடு செய்யக்கூடியதே. ஆனால் தொடர்ந்து ஐந்து முறைக்கு மேல் ரத்து செய்தால் உங்களுக்கு திட்டமிடுதலை முறையாகக் கை கொள்ள தெரியவில்லை என்றே பொருள். 

இன்னும் சொல்லப் போனால், இன்றைக்கு தொலைபேசி, செல்போன், இணையதள பேச்சு, வீடியோ கான்பரன்சிங் எனப்  பல்வேறு தகவல் தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. இதனால் பயணத்தின் அவசியம் மிகவும் குறைந்து விட்டது. எனவே, தேவை ஏற்பட்டால்லொழிய பயணத்தைக் குறைத்துக் கொள்வது உங்கள் உடலுக்கும், மனதிற்கும்,  பணத்துக்கும் இன்னும் நல்லது! 

உங்கள் தொழிலில் பணம் சுழற்சி முறையை அதிகப்படுத்துங்கள். 

ஒரு பொருளை வாங்கி 20% லாபத்திற்கு விற்று அந்தப் பணத்தைக் கொண்டு அதே பொருளைக் கொள்முதல் செய்து, திரும்ப விற்று, திரும்ப வாங்கி, விற்று என ஆண்டிற்கு எவ்வளவு முறை பொருளை வாங்கி வாங்கி விற்கிறோமோ அவ்வளவு முறை பணம் சுழன்று நமக்கு லாபம் ஈட்டித் தரும். இதுதான் நம் அனைவருக்கும் தெரிந்த வணிக முறை. 

இதற்கும் மேலாக நிர்வாகவியலில் வேறொரு உத்தி சொல்லப்படுகிறது. பண சுழற்சியை அதிகப்படுத்துவதற்குப் பதில் விரிவுபடுத்துவதே அந்த டெக்னிக். இதற்கு அடிப்படையாக இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டும். 

வாடிக்கையாளர்களிடமிருந்து வரவிருக்கும் வருமானத்தை விரிவுபடுத்துதல், அடுத்தது, சப்ளையருக்கு நாம் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்த கூடுதலான நாட்கள் பெறுதல். இதனால் பணம் விரைவாக நமக்கு வந்து, பல நாட்கள் நம்மிடம் சுழன்று கூடுதல் லாபத்தை நமக்கு ஈட்டிக் கொடுத்த பிறகு, சப்ளையர் கைக்குச் சென்று சேரும். அதாவது அதிக பணத்தை வைத்து பல பொருட்களை ஸ்டாக் செய்து அவற்றின் மூலம் அதிக லாபம் ஈட்டுவது தான் பண சுழற்சி விரிவாக்கம். 

வாராக் கடன்களில் கவனம் செலுத்துங்கள். 

ஒவ்வொரு தொழிலிலும் வாராக் கடன்களின் விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை இருக்கலாம். இந்த விகிதத்தின் எண்ணிக்கை அதிகரித்தால் பணத்தை வசூலிக்கும் திறமை உங்களிடம் இல்லையென்றே பொருள். வாராக் கடன்களில் 50%த்திற்கு மேற்பட்டவற்றைத் தொடர்ந்து ஃபாலோ அப் (Follow-up) செய்வதன் மூலமே வசூலித்து விட முடியும். அல்லது குறைந்தபட்சம் வங்கியாளர்களைப்போல் பேரம் பேசியாவது, அதில் ஒரு பகுதியை திரும்பிப் பெற முடியும். 

நம்மில் பலர்  வாராக் கடன்களில் பெரிய தொகையை மட்டுமே தொடர்ந்து துரத்திக் கொண்டிருப்போம். சிறிய தொகையை நேரமின்மை காரணமாக கவனம் செலுத்தாமல் விட்டுவிடுவோம். இதுவும் ஒரு வகையான வருமான இழப்பே. 

இதற்கு என்ன தீர்வு…? சிறிய தொகையை வசூலிக்க மாத சம்பளத்திற்கு ஒரு முகவரை நியமித்தால் நிச்சயம் அவருக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட பன் மடங்கு தொகையை காலப்போக்கில் வசூலித்து விட முடியும். அதுமட்டுமன்றி முறையாக உரிய நேரத்தில் வரக்கூடிய தொகையைக் கூட முன் கூட்டியே நாம் வாங்க முயற்சிக்கலாம். 

மதுரையில் நண்பர் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை வாராக் கடன்களாக சிறிய கடன்கள் இருந்தன. ரூ. 5000 மாத சம்பளத்தில்  ஒரு பகுதி நேர முகவரை நியமித்தார். மூன்று மாதங்களில் அந்த முகவர் ரூ. 75,000 வசூலித்து விட்டார். சிந்தித்துப் பாருங்கள். ரூ. 15 ஆயிரம் செலவில் ரூ. 75 ஆயிரம் வசூலித்தது புத்திசாலித்தனம் தானே? 

பொதுவாக எந்த ஒரு வாடிக்கையாளர்களிடம் இருந்தும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் பணத்தை வசூலித்து விட வேண்டும். இல்லை என்றால் அதன் பிறகு அந்த பணத்தை வசூலிக்க நாம் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். கரூர், சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் இரண்டு மாதங்கள் கழித்தும் வாடிக்கையாளர்கள் பணத்தைத்  திருப்பித் தராத பட்சத்தில் 24 சதவீத ஆண்டு வட்டியோடு பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்கிற நியதியும் நடைமுறையில் உள்ளது. 

இழப்பு தருகின்ற தொழிலை தொடர்ந்து நடத்தாதீர். 

ஒரு தொழிலில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு கொண்டே இருந்தால் அதனை உணர்வு ரீதியாக பார்க்காமல், வந்த விலைக்கு விற்று விடுவதோ அல்லது மூடிவிடுவதோ சிறந்தது. திரும்பத் திரும்ப அந்தத் தொழிலில் பணத்தை முதலீடு செய்வது நஷ்டத்தையே ஏற்படுத்தும். சில தொழில்கள் தொடக்கத்தில் நஷ்டத்தை கொடுத்தாலும் நாளடைவில் லாபத்தைத் தர தொடங்கலாம். டெக்டைல்ஸ், பேப்பர் போன்ற தொழில்களில் அதிக முதலீடு காரணமாக பணவரத்து இருந்துகொண்டே இருப்பது போல் தெரிந்தாலும் லாபம் அனைத்தும் வெளியில் வாராக் கடன்களாக முடங்கிக் கிடக்கும். 

அதுபோன்று துறைகளில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தினமும் பணவரத்து இருந்து கொண்டே இருப்பதால், நம் தொழில் லாபத்தில் இயங்குகிறதா, நட்டத்தில் இயங்குகிறதா என்று தெரியாமல் போய்விடும் தொடக்கத்திலேயே வரவுசெலவுக் கணக்கைத் தெளிவாக பராமரிக்காவிட்டால் காலம் சென்ற பிறகு நிலைமையைச்  சரிசெய்வது கடினமாகி விடும். எனவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்குத் தணிக்கையாளர்களோடு உட்கார்ந்து நம் நிறுவனம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது நல்லது. 

முடங்கிக் கிடக்கும் சொத்துக்களை வருமானம் ஈட்டச் செய்யுங்கள். 

ஒரு நிறுவனத்தில் பயன்படாமல் இருக்கும் இயந்திரங்கள், ஆட்டோமொபைல் வாகனங்கள், நிலங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை புதுப்பித்து வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யலாம். 

 கோவையில் வசிக்கும் நண்பர் ஒருவர் தனது தொழிற்சாலையை சுற்றி கட்டியிருந்த காம்பவுண்ட் சுவரை உடைத்து விட்டு 10 கடைகளைக் கட்டினார். இப்போது அவருக்கு மாதம் ரூ. 1 லட்சம் வருமானம் வருகிறது. 

மேலும், அத்தொழிற்சாலையைப்  பாதுகாப்பாக மேற்கொண்ட செலவுகளான வாட்ச்மேன் சம்பளம், காம்பவுண்ட் சுவரை சுற்றி உள்ள விளக்குகளின் மின்சாரச் செலவு போன்றவற்றையும் பகிர்ந்து கொள்ளப்பட்டு செலவுகள் குறையத் தொடங்கின. இதோடு மட்டுமல்லாமல் முன் இரவு நேரங்களில் இருட்டாக இருந்த தொழிற்சாலையின் வெளிப்புறம் இப்போது வெளிச்சத்துடனும், கலகலப்பாகவும் மாறிவிட்டது. 

இன்னொருவர் நகரின் ஒரு பகுதியில் வெற்றிடமாக இருந்த அரை ஏக்கர் நிலத்தை சுற்றிலும் சுவர் எழுப்பி டிராவல்ஸ் கம்பெனிக்கு கார்களை நிறுத்திக்கொள்ள வாடகைக்கு விட்டார். இப்போது மாதம் ரூ. 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். 

சென்னையில் ஒருவர், தமது வீட்டில் பயனற்று நின்று கொண்டிருந்த வேனை டிராவல்ஸ் கம்பெனி ஒன்றிற்கு வாடகைக்கு விடத் தொடங்கியதில் மாதந்தோறும் கணிசமான வருமானம் பெற்று வருகிறார். வெற்றிடமாக இருந்த வீட்டின் மொட்டை மாடியில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி மாலை நேர டியூஷன் சென்டர் ஒன்றுக்கு வாடகைக்கு விட்டு மாதம் ரூ.5 ஆயிரத்தை ஈட்டும் ஒரு நண்பரையும் அண்மையில் சந்திக்க நேர்ந்தது. இப்படியாகப் பயனற்றுக் கிடக்கும் அசையா மற்றும் அசையும் சொத்துக்களுக்கு புத்துயிர் ஊட்டி புதுவடிவம் கொடுத்து, வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் நிலையான செலவுகளின் விகிதத்தை குறைத்து லாபத்தை அதிகரிக்கச் செய்யலாம். 

                                                                  ———–இராம்குமார்  சிங்காரம், Motivational speaker in tamil

Comments are closed.