ஒரு பெரிய தொழிற்சாலை அங்கு ஆயிரம் பேருக்கு மேல் வேலை
பார்த்து வந்தனர். ஒரு நாள், அதன் முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தார். அப்போது ஒருவன் மட்டும் வேலை செய்யாமல் ஓரமாக படுத்து காலாட்டிக் கொண்டிருந்தான். முதலாளிக்கு வந்ததே கோபம்… ‘இப்படி ஒருவனை வேலைக்கு வைத்திருந்தால் பிற தொழிலாளிகளும் கெட்டுப்போய் விடுவர் என்று நினைத்தார்.
அவனை அழைத்து, “தம்பி! நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார். அவன் ஒன்றும் புரியாமல் முழித்துவிட்டு “எட்டாயிரம் ரூபாய் சார்”என்றான்.
உடனே, பிற தொழிலாளிகளுக்கு முன்பு தன் பாக்கெட்டிலிருந்து பதினாயிரம் ரூபாயை எடுத்து, “இதில் உன்னோட இரண்டு மாத சம்பளம் இருக்கிறது. சும்மா படுத்துக்கொண்டு இருப்பவனுக்கு சம்பளம் கொடுக்க இந்த ஃபேக்டரியை நடத்தவில்லை. நீ போகலாம்” என்றார்.
அவன் ஒரு நிமிடம் ‘திரு திரு‘ என முழித்துவிட்டு, அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே நடந்தான். மற்ற தொழிலாளர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள்.
முதலாளி மேலாளரைக் கூப்பிட்டு “இந்த மாதிரி ஆட்களை யார் வேலைக்குச் சேர்த்தது?” என்று கேட்டார். மேலாளர் பவ்யமாகச் சென்னார்: “அவன் டீ கொண்டு வந்த எதிர்கடைப் பையன்‘ என்று.
உடனுக்குடன் முடிவெடுக்கப் பழகிவிட்ட அந்த முதலாளி, தவறாக எடுத்த முடிவு இது. உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா? தான் எடுத்த முடிவுக்காக வருந்தவில்லை. அவர் இந்த முடிவின் மூலம் சொல்ல நினைத்தது, “ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் ஒருவரை வேலையில் வைத்திருக்கக்கூடாது” என்பதுதான்.
எனவே, உடனடியாக, வேலை பார்ப்பவர்களுக்கெல்லாம் யூனிஃபார்மும், அடையாளஅட்டையும் தர உத்தரவிட்டு, திரும்பவும் தாம் இதுபோன்று தவறிழைக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஆம்! வெற்றியாளர்கள் சரியாக முடிவு எடுப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் உடனுக்குடன் முடிவெடுப்பவர்கள்.
எனவே, நீங்களும் விரைவாக முடிவெடுக்கப் பழகுங்கள்.
_ இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil