Networking என்ற சொல்லைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?
வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோரும் இந்த Networking கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.
Networking என்றால் என்ன? நிறைய மனிதரைகளைப் பழகிக் கொள்ளுதலும், நம் தேவையின் போது அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுதலும்தான்.
நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு நிறையப் பேரைத் தெரிந்து புண்ணியமில்லை. உங்களை நிறையப் பேர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்தியா மாதிரியான வளர்ந்து வரும் நாடுகளில் பரிந்துரைகளும், தொடர்புகளுமே தொழிலின் வெற்றிக்கு முக்கியமாகும்.
நான்கு பேர் ஒரு ஆர்டருக்கு முயற்சிக்கிற போது யார் ‘தெரிந்தவராக’ இருக்கிறாரே அவருக்கே நம் ஊரில் முன்னுரிமை தரப்படும்.
பிசினஸ் ஆர்டரை விடுங்கள்… ப்ரி கேஜி அட்மிஷனுக்குக் கூட தெரிந்தவரை நாடித் தான் செல்ல வேண்டி இருக்கிறது.
ஒரு வெற்றியாளர் இன்னார்தான் என்று இல்லாமல் அரசியல்வாதி, போலீஸ் அதிகாரி, பத்திரிக்கையாளர், வக்கீல், ஆடிட்டர் என சகலரையும் தெரிந்து வைத்திருப்பார்.
நினைவில் கொள்ளுங்கள்… பழகுவதற்கு கூச்சப்படுகிறவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
லயன்ஸ் கிளப், ரோட்டரி, ஜேசீஎஸ் , ரவுண்ட் டேபிள், டோஸ்ட் மாஸ்டர், BNI, TiE, YES என சமூக சேவை சார்ந்த அமைப்புகள் அல்லது தொழில் சார்ந்த பல்வேறு அமைப்புகள் நம் ஊரில் இயங்கி வருகின்றன. உங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடிய மனிதர்களை இது போன்ற சங்கங்களில் எளிதாகக் கண்டறியலாம்.
இந்த சங்கங்களில் உங்களை விட பெரிய மனிதர்களைச் சந்திக்கிற போது அழுத்தமாக கை குலுக்குவது, தன்னம்பிக்கை நிறைந்த கணீர் குரலில் பேசுவது, கண்களை நேருக்கு நேராகப் பார்ப்பது, சிரித்த முகத்தோடு இருப்பது,
உற்சாகம் பொங்கப் பழகுவது போன்று சின்னச் சின்ன உத்திகளைப் பின்பற்றி, பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் மனதில் நீங்கள் இடம் பெறலாம்.
முதல் அறிமுகம் மட்டுமே உங்களுக்கு அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி விடாது, தொடர்ந்து அவர்களோடு இ – மெயில், எஸ்.எம்.எஸ், டெலிபோன், வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், டுவிட்டர் வாயிலாக தொடர்பில் இருப்பது, அவர்களைப் பாராட்டி பல இடங்களில் பேசுவது, அவர்களுக்கு தேவையான சிறு சிறு உதவிகளைச் செய்வது. போன்றவை பெரிய மனிதர்களிடம் உங்கள் மீதான அன்பை வளர்க்கும்.
உங்கள் ஊரில் இருக்கக்கூடிய 50 ஆளுமை நிறைந்தவர்களையாவது இப்படி தெரிந்தவர்களாக்கிக் கொண்டால் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
வாய்ப்புகளைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் இதுபோன்ற பழக்கங்கள் கை கொடுக்கும்.
பிறரோடு பழகுவது எந்தளவு முக்கியமோ அந்தளவிற்குப் பழகியவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் முக்கியம்.
வெற்றியாளர்கள் எப்போதும் தாம் மட்டுமே வெற்றி பெறாமல், தம்மோடு பழகுகிற பிறரும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதற்கு WIN – WIN FORMULA என்று பெயர்.
யாராவது ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியுமானால் அந்த உறவு தொடர்ந்து நீடிக்காது. அடுத்தவரும் பலன் பெறச் செய்வதன் மூலமே நாம் வெற்றி பெற முடியும், இன்னும் ஆழமாகப் பார்த்தால், இந்த உத்தியைப் பின்பற்றித் தான் இன்சூரன்ஸ் நிறுவனங்களும், நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனங்களும், பிரான்சைஸ் தொழில்முறையைக் கையாளும் ரீடெய்ல் நிறுவனங்களும் வெற்றி கண்டுள்ளன.
எனவே நீங்கள் வளர வேண்டுமானால், உங்களுக்கு கீழே நூறு பேரையாவது வளர்ந்து விட்டு அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
– இராம்குமார் சிங்காரம், Best Motivational Speaker in Tamil