fbpx
அவமானம், அது வருமானம்! | Motivational stories in tamil

motivational stories in tamil
  • August 21, 2021

தெரியாத தொழிலில் ஈடுபடலாமா…? இது பலருக்கும் எழும் கேள்வி! 

பிறர் செய்து வரும் தொழில்களைப் பற்றிக் கவலைப்படாமல் உங்களுக்கு என்ன தெரியுமோ அதில் இருந்து தொடங்குவது தான் நல்லது. எதிர் வீட்டுக்கார லாபம் சம்பாதிக்கிறார் என்பதற்காகவோ, மச்சானுக்கு பணம் கொழிக்கிறது என்பதற்காகவோ அவர்கள் செய்யும் தொழிலில் நீங்கள் இறங்காதீர்கள். அடுத்தவர் செய்வதை அரைகுறையாக தெரிந்து கொண்டு களத்தில் இறங்கினால் பல சிக்கல்கள் வரலாம். 

இளம் வயது அம்மா அவர். ஒரு நாள் மீன் வாங்கி சமையல் செய்ய ஆரம்பித்தார். எடுத்தவுடன் தலையையும் வாலையும் நறுக்கி சிறிய துண்டுகளாக்கி வாணலியில் போட்டார். இதைப் பார்த்து மகள் கேட்டாள். ‘’இதை ஏம்மா நறுக்கின…? முழு மீனா போடலாமே!’’ என்று ஒரு நிமிடம் முழித்த அம்மா, “அது தெரியாது. எங்க அம்மா கற்றுக் கொடுத்தபடி சமைக்கிறேன்’’ என்றாள். மகளுக்கும் பதில் திருப்தி இல்லை. பாட்டியிடம் போய் இதே கேள்வியைக் கேட்டாள். உதடு பிதுக்கிய பாட்டி,எனக்கு என் அம்மா, அதாவது உன் கொள்ளுப்பாட்டி சொல்லிக் கொடுத்ததை தான்  பண்ணினேன் என்றாள். 

சிறுமியின் கொள்ளுப் பாட்டி உயிருடன் இருந்ததால் கேள்விக்கு விடை தேடிக் கிளம்பினாள் பேத்தி. சிறிது நேரம் யோசித்த கொள்ளுப்பாட்டிஅதுவா அப்போ என்கிட்ட இருந்த வாணலி சின்னது. முழு மீனைப் போட்டா இடம் பத்தாது என்றாள் ஒரே போடாக. 

அதனால் எந்தச் செயலை செய்தாலும் உங்கள் டச்சோடு செய்வதுதான் நிலைத்த லாபம் தரும். மேலும், தெரிந்த தொழில்களைத் தொடங்கும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் ஒருபடி அதிகமாகும் என்பதை உணருங்கள். இன்றைக்கு மாபெரும் பஸ் சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் கே.பி.என் நிறுவன அதிபர், ஒரு  டிரைவராகத்தான் தன் தொழிலைத் தொடங்கினார். 2 நாள், 3 நாள், சுற்றுலாக்களில் ஆரம்பித்து, படிப்படியாக வளர்ந்து இன்று சுமார் 200 பஸ்களுக்கும் மேல் இயக்கிக் கொண்டிருக்கிறார். என்பதை கவனிக்க வேண்டும். இன்னொரு விஷயம் தெரிந்த தொழிலை தொடங்குவதில் சில சாதகங்கள் உண்டு. 

குறைவான முதலீட்டில் கூட தொடங்கலாம். ஏனெனில், பொருள்களை கொள்முதல் செய்யும்போது சரி; பொருள்களை விற்கும் போதும் சரி; அந்தத் துறை நண்பர்களின் அறிமுகமும் நெருக்கமும் இருக்குமாதலால் கடனில் பொருள்களை வாங்கி ரொக் கத்திலோ அல்லது குறுகிய காலக் கடனிலோ பெற்று பணத்தைத்  திரும்ப செலுத்தலாம் . 

மதன்மோகன் மாளவியா என்ற அறிஞர் அந்நாட்டு அரசனிடம் சென்று தான் தொடங்க இருக்கும் தொழிலுக்கு கடன் கேட்டார். அன்றைக்கு ஏதோ கோபத்தில் இருந்த அரசன் இவரைப் பார்த்தவுடன் சற்று எரிந்து விழுந்தான். அந்த இடத்தை விட்டு நகராமல் அவர் நின்று கொண்டே இருந்ததால், தன் கால் செருப்பை கழற்றி கோபத்துடன் அவர் மீது எறிந்தான் அரசன். அப்போதும் நகராமல் சிரித்த முகத்துடன் மாளவியா அங்கேயே நின்று கொண்டே இருந்ததால் மன்னனுக்கு கோபம் அதிகமானது. மற்றொரு  செருப்பையும் வீசி எறிந்தான். 

 “மிக்க நன்றி மன்னா!” என்று கூறி விட்டு அந்த இரண்டு செருப்புகளையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்த மதன் மோகன் மாளவியா, அந்த ஊரில் உள்ள சந்தைக்கு சென்றார். அரசனின் செருப்புகளை ஏலம் விடுவதாக அறிவித்து அனைவரையும் அழைத்தார். தகவலை கேள்விப்பட்ட அரசு ஒற்றர்கள் விரைந்து சென்று மன்னனிடம் விவரத்தைக் கூறினர். தன் செருப்பை யார் வாங்கி அணிந்து கொண்டாலும் அது தனக்கு அவமரியாதை  என்று கருதி, உடனடியாக செருப்பை என்ன விலை கொடுத்தேனும் ஏலத்தில் எடுத்து வர வீரர்களுக்கு ஆணையிட்டான் மன்னன் . 

ஏலம் சூடு பிடித்தது. மன்னரின் செருப்பை வாங்க மக்களிடையே பலத்த போட்டி நிலவியது இறுதியில் பல லட்சம் பொன்னைக் கொடுத்த மன்னரின் ஆட்களே அச்செருப்பை வாங்கி சென்றனர். மன்னரே நல்ல மனநிலையில் இருந்து இருந்தாலும் இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக தந்து இருப்பாரா என்பது சந்தேகமே. 

 மாளவியாவுக்கு ஏற்பட்ட அவமானம் தொழில் தொடங்க விரும்பும் நம்மில் பலருக்கும் ஏற்படலாம். தம்மீது வீசப்பட்ட கருங்கற்களை எப்படி படிக்கற்களாக்கி மாளவியா வெற்றிநடைபோட்டாரோ அதேபோல் நாமும் எவ்வித கணைகளையும்  எதிர்கொண்டு அதை பூக்களாக மாற்றி பிறருக்கு தரும் பக்குவத்தைப் பெற வேண்டும். இதற்கு ஒரே வழி இலக்கின் மீது மட்டும் கவனம் செலுத்துவது தான். 

  நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழிலில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை யூகிக்க முடியும். அவற்றை தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்து வைத்திருப்பீர்கள். எடுத்துக்காட்டாக அச்சகம் தொடங்கும்போது ஒருவருக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்படின் அதனை பழுது பார்க்கக் கூடிய சரியான மெக்கானிக் யார் என்று விவரம் தெரிந்து இருக்கும். அல்லது வாகனங்களில் சரக்கு ஏற்றிச்செல்லும் தொழில் புரிபவர்களுக்கு பந்த் நாளில் கூட எப்படி சரக்கை  உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு கொண்டு சேர்ப்பது என்ற மாற்றுவழி தெரிந்திருக்கும். 

 தெரிந்த தொழிலில் வேலைக்கு ஆட்களைத் திரட்டுவது  எளிது. யார் வாடிக்கையாளர் எப்போது சீசன் களைகட்டும் என்பதெல்லாம் முன்கூட்டியே தெரிந்திருக்கும். 

 இவையெல்லாம் தெரிந்த தொழிலில் உள்ள நன்மைகள் என்றால் சில பாதக அம்சங்களும் இருக்கக்கூடும். இதே தொழிலில் முன்பு பணியாற்றும் போது உங்களது சிந்தனைகளுக்கெல்லாம் செயல் வடிவம் கொடுத்து விட்டிருப்பீர்கள் என்பதால் புதிய சிந்தனைகளுக்கான பஞ்சம் ஏற்படக்கூடும். அதுபோன்ற சமயங்களில் மாற்றி யோசிப்பதும், எல்லோரும் செல்லும் வழியில் செல்லாமல் உங்களுக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்வதும் அவசியம். 

 அர்ஜுனனின் அம்புக்கு குறி பார்க்கும் பழம் மட்டுமே இலக்கு என்பது போல, உங்களின்  நோக்கம் எது என்பதில் தெளிவாக இருந்துவிட்டால் நீங்கள் இமயமலை உயரத்தைக் கூட எட்ட முடியும். 

 தொழிலைத் தொடங்கும் போது, நாம் போடும் சில கணக்குகள் பிராக்டிகலாக சரி வருமா  சாத்தியமாகுமா…? என்பதையும் பார்க்க வேண்டும். புள்ளிவிபரப் புலிகளாக மாறிவிட்டு பின்னர் வருத்தப்படக்கூடாது. 

 மூன்று புள்ளி விபரப் புலிகளுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார் ஒரு மாஸ்டர். மரப்புறாவை காட்டி சுடச் சொன்னார். மரக்கிளையில் இருந்த அந்தப் புறாவை முதலாமவன் சுட்டான். இரண்டடி இடதுபுறமாக பாய்ந்தது குண்டு.  

 அடுத்தவன் சுட்டான்.  இடது புறம் பாய்ந்து விடக்கூடாதே என்று அக்கறை எடுத்ததில் வலதுபுறம் இரண்டடி தள்ளிப் பாய்ந்தது குண்டு. மூன்றாமவனாவது  சரியாகச் சுடுவான என்று மாஸ்டர் எதிர்பார்த்த நேரத்தில் அவன் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு மாஸ்டரை பார்த்துசக்ஸஸ் என்று கத்தினான். 

 “ஆமாம் முதலிரண்டு பேர் சுட்ட சராசரியை கணக்கிட்டால் இலக்கு எட்டப்பட்டு விட்டதே!” என்று விளக்கமும் கொடுத்தான். இப்படி கணக்குக்கு சரியாக வந்தாலும், நடைமுறை சாத்தியமற்ற தொழில்களை விட்டு விடுவது நல்லது.தொழிலை முடிவு செய்தபின் சில கேள்விகளை உங்களுக்குள் கேட்டு பார்த்துக் கொள்வது முக்கியம்.  

  • தொழிலுக்கான நிதியை திரட்ட யார், யார் எந்தெந்த வழிகளில் உதவுவார்கள்? 
  •  வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் எப்படி உள்ளன? எவ்வளவு காலம் பொறுமை காக்க வேண்டும்..? 
  •  பணியாளர்கள் எத்தனை பேர் தேவை..? 
  •  தொழிலில் ரிஸ்க் எந்த ரூபத்தில் வரும்..? 
  • பேப்பர் கணக்கு பிராக்டிகலாக ஒத்து வருமா..?  
  • விற்பனை அல்லது லாபத்துக்கான உத்திரவாதம் இருக்கிறதா? 

 இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களில் உங்களுக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில் நீங்கள் தாராளமாக தொழிலில் குதிக்கலாம் 

Comments are closed.