வாழ்க்கையில் சோர்வு என்பது கூடவே கூடாது. இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த், ‘ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலமும் அது ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும். எண்ணெய் தீர்ந்தவுடன், திரியையும் எரித்துவிட்டு விளக்கு தானாகவே அணைந்துவிடும்..!” அதுபோல ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், எங்கேயும், எப்போதும் செய்ய முடியும். இந்தக் கதையைப் படியுங்கள். ஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் நன்றாக மண்ணைத் தோண்டி பல ஆண்டுகளாக உருளைப் பயிரிட்டு வந்தார். இந்த வருடம் அது தடைப்பட்டுப் போனது. காரணம், அவருக்கு உதவியாக இருந்த அவரது ஒரே மகன் சிறைச்சாலையில் இருந்தான். அந்த வயதான மனிதர் தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அன்புள்ள மகனுக்கு,
நான் இந்த வருடம் உருளைக் கிழங்குத் தோட்டம் போட முடியாமல் போனதில், மிகவும் வருத்தமாக இருக்கிறது. வயதான காரணத்தினால் தோட்டத்தைப் பயிரிடவோ, உழவு வேலை செய்யவோ முடியவில்லை.
நீ இங்கு இருந்திருந்தால் என்னுடைய எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்திருக்கும். சரி, இது காலத்தின் கட்டாயம் போலும், அன்புடன், அப்பா.
சிறிது நாட்களில் அந்த வயதான மனிதருக்கு ஒரு தந்தி வந்திருந்தது.’கடவுளே! நல்லவேளையாக நீங்கள் தோட்டத்தை உழவு செய்யவில்லை. ஏனென்றால், அங்குதான் எல்லா துப்பாக்கிகளையும் நான் புதைத்து வைத்துள்ளேன். வெளியாட்கள் யாரையும் வைத்துத் தோட்டத்தைத் தோண்டிவிட வேண்டாம்.” அரசு இயந்திரத்தின் மூலம் வந்த தகவல் ஆயிற்றே! அடுத்த நாள் விடிகாலை 4 மணிக்கு ஒரு டஜன் காவலர்கள் ரகசியமாக அந்த வீட்டை முற்றுகை இட்டனர். அந்தத் தோட்டத்தின் எல்லா இடங்களிலும் தோண்டிப் பார்த்தனர். ஆனால் எந்தத் துப்பாக்கியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்து கிளம்பிவிட்டனர். காலையில் வெளியே வந்து பார்த்த பெரியவர், தோட்டம் கிளறிப் போடப்பட்டிருக்கும் தகவலை பதற்றத்துடன் மகனுக்குக் கடிதமாக எழுதினார். துப்பாக்கிகள் ஏதும் தென்படவில்லை என்றும் குறிப்பிட்டார். அவரது மகன் அடுத்த கடிதத்தில் சொன்னது..”நீங்கள் சென்று உருளைக்கிழங்குத் தோட்டத்தை அங்கே பயிருடுங்கள் அப்பா, இதுதான் நான் இங்கே இருந்து கொண்டு உங்களுக்குச் செய்ய முடிந்த பெரிய உபகாரம்”.
நீங்கள் உலகில் எங்கே இருக்கிறீர்கள் என்பது பெரிதல்ல, ஒன்று செய்ய வேண்டுமென்று உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் நீங்கள் முடிவு செய்து கொண்டால் உங்களால் அதனைச் செய்ய முடியும். எண்ணங்கள்தான் மிகவும் முக்கியம். ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இப்படிச் சொல்வார்கள். “நீங்கள் ஒரு சொத்தை வாங்கவேண்டும் என்று மனதார விரும்பினால், அதற்கான பணம் தன்னாலே வந்து நிற்கும்! எல்லாமே அப்படித்தான். ஒரு செயலைச் செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால், அதற்கான வழிகளும் கதவுகளும் நம் முன்னே விரியும் என்பதில் சந்தேகமில்லை.
– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu