வங்கியின் சேவைகளும், சேவைக் கட்டணங்களும் ஒரு காலத்தில் மிகமிகக் குறைவாகவே இருந்தன. ஆனால், இப்போதெல்லாம் எண்ணற்ற அயல்நாட்டு
வங்கிகள் இங்கே காலூன்றி விட்டதால் அவற்றின் சேவைகளும், கட்டணங்களும் முற்றிலும் மாறிவிட்டன.
எனவே, ஒவ்வொரு மாதமும் வங்கியின் ஸ்டேட்மெண்ட் வந்தவுடன் அதனை நன்றாக ஆராய்ந்து பாருங்கள். ஒரு சாதாரண கூட்டுறவு வங்கியிலோ… ஒரு பன்னாட்டு வங்கியிலோ… எந்த வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தாலும் கீழ்க்கண்ட சேவைக்கான கட்டணங்களை நன்கு அறிந்து கொள்ளவும்.
வங்கிக் கணக்கினுடைய குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதத் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்?
புதிய காசோலை புத்தகத்தைப் பெற சேவைக் கட்டணம் எவ்வளவு?
வங்கி வரைவோலைக்கான உள்ளூர் சேவை கட்டணம் மற்றும் வெளியூர் சேவைக் கட்டணங்கள் எவ்வளவு ?
காசோலை பணமின்றி திரும்பி வந்தால், அதற்கான கட்டணம் எவ்வளவு?
ஒவ்வொரு பணப் பரிவரித்தனைக்கும் சேவைக் கட்டணம் எவ்வளவு?
நடைமுறை மூலதனத்திற்கான வட்டி விகிதம் என்ன?
பில் டிஸ்கவுண்டிங் செய்தால் எவ்வளவு சதவீதம் வட்டி கட்ட வேண்டும்?
என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும்.
முன்பெல்லாம் வங்கிகளில் காசோலை பணமின்றி திரும்பி வந்தால் ரூ.100 வரை சேவைக் கட்டணமாகப் பிடித்துக் கொள்ளப்படும். ஆனால், தற்போதோ காசோலை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை பிடித்தம் செய்யப்படுகிறது.
எனவே, பணமின்றி செக் தரும் நிறுவனங்களிடம் அந்தத் தொகையையும் சேர்த்து திரும்ப வாங்கி விடுவதை நீங்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
வங்கிகளில் 15 நாட்களுக்குக் கூட பணத்தை ‘குறுகிய கால வைப்புத் தொகையாக’ (Short Term Fixed Deposit) போட முடியும். எனவே, உங்கள் கணக்கில் 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் சேர்ந்தவுடன், அடுத்த சில நாட்களுக்கு அந்தப் பணம் தேவைப்படாத பட்சத்தில் அதனை குறுகிய கால வைப்புத் தொகையில் போட்டு வைத்து அதற்கு நான்கு அல்லது ஐந்து சதவீத வட்டியைப் பெற முயற்சியுங்கள்.
இந்த வசதியுடன் கூடிய பிரத்யேக வங்கிக் கணக்குகளும் தற்போது நடைமுறையில் உள்ளன.
முடிந்தால் ஒரு முறை வங்கி மேலாளரை நேரில் சென்று பார்த்து அவற்றின் சேவைகள் முழுவதையும் அறிந்து கொண்டு வாருங்கள்.
———-
இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker