அதிகம் பேசாதவனை, உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பின்னடைவைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்ள வெற்றி வாய்ப்பினைப் பார்க்கிறான். எதற்கு இப்படி இரண்டு பஞ்ச் டயலாக் என்று பார்க்கிறீர்களா… வெற்றியாளர்களுக்குத் தேவையான அடிப்படை இது. மார்க்கெட்டிங் துறை இதற்கு நல்ல உதாரணம். புதிதாக புரோட்டா மெஷின் ஒன்றை தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். மைதா மாவு நமது இயல்பான உணவு அல்ல. ஆனால், மாதமொருமுறையாவது அனைவரும் புரோட்டா சாப்பிடுகிறார்கள். அதை மென்மையாக வடிவமைக்கப் பலருக்கும் கைவரவில்லை என்பதால், இந்த மெஷினை மக்கள் விரும்புவார்கள் என்பது நிறுவனத்தின் நோக்கம்.
இதை மக்கள் தேடி வந்து வாங்க மாட்டார்கள் என்பதால், மக்களைத் தேடிச் சென்று விற்பதே சிறந்தது என்று நிறுவனம் முடிவெடுத்தது. பலரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, சிறப்புப் பயிற்சி கொடுத்து அதிகமாக விற்பவருக்கு சூப்பர் பரிசு அறிவிப்பும் செய்து சந்தைக்கு அனுப்பியது நிர்வாகம். வீடு, வீடாகச் சென்று சென்னை முழுவதும் விற்றனர் விற்பனைப் பிரதிநிதிகள் வடக்கத்தியர்கள் வாழும் பகுதியைக் குறிவைத்துக் கேட்டுப் பெற்றனர் சில விற்பனைப் பிரதிநிதிகள். குறிப்பிட்ட 30 எண்ட் நாட்கள் கடந்தன.
அனைவரது விற்பனை நிலவரமும் கிடைத்தபோது நிர்வாகம் அதிர்ந்தது. காரணம், அநேகமாக எல்லோருமே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மெஷின்கள் விற்றிருந்தனர். ஒருவர் மட்டும் நூறைத் தாண்டி விற்றிருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விற்ற மெஷின்களின் எண்ணிக்கை பதினைந்து எனவே, அவர் ஒருவரே அமோக வெற்றி பெற்றிருந்தார் ‘துடிப்பான அந்த இளைஞரை மேடைக்கு அழைக்கிறோம்’ என்று அறிவிப்புச் செய்தபோது, மேடையேறியவர், நாற்பது வயதைக் கடந்த ஒருவர் பாராட்டுக்கு நன்றி! என்ற ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு தளர்ந்த நடையோடு தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார். அவரை வற்புறுத்தி மேடையேற்றி, ‘என்ன ரகசியம் அது. எப்படி சாதித்தீர்கள்? என்று கேட்டனர்.
அவர் மென்மையாகச் சொன்னார். “அது உழைப்பின் ரகசியம். திட்டமிட்ட உழைப்பு அது பலரைப் போலவேதான் நானும் வீடு வீடாகக் கதவைத் தட்டினேன் பத்துக்கு ஒன்பது பேர் வாங்கவில்லை. அவர்களில் சிலர் கதவையே திறக்கவில்லை. சிலர் கதவைத் திறந்தும் காது கொடுக்கவில்லை. சிலர் காது கொடுத்தும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பத்தில் ஒருவர் வாங்குவதை தினமும் உணர்ந்தேன். எனவே, ஒன்பது பேர் நிராகரிக்கிறார்களே என்று சோர்ந்து விடாமல், பத்துக்கு ஒன்று உறுதி. இன்னும் ஒன்பது சுதவுகள் எட்டு கதவுகள் என்று நிராகரித்தவர்களையும் உத்தாமாகவே ஏற்றுக் கொண்டேன். எனது கணக்குத் தப்பவில்லை. பத்தில் அந்த ஒருவர் யார் என்பது மட்டுமே எனது தேடலாக இருந்தது.
தினமும் 50 வீடுகள் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதால், நாள் ஒன்றுக்கு சராசரியகா 4 முதல் 5 விற்பனையை நிகழ்த்த முடிந்தது. திட்டமிட்ட பணி… சோர்வடையா முயற்சி அதிக சந்திப்புகள்… தொடர்ந்த செயல்பாடு! இதுவே எனது வெற்றி ஃபார்முலா?” என்றார் அவர். அவருடன் பணியாற்றிய பலரும், “ஒருநாளைக்கு பத்து வீடுகள் என்று இலக்கு நிர்ணயித்தோம். பலர் ஐந்தாவது வீடு அல்லது எட்டாவது வீட்டோடு தங்கள் கதவு தட்டுதலை நிறுத்திக் கொண்டதால், நாங்கள் சோர்ந்து போனோம். ‘இன்று நாள் சரியில்லை… நாளை முயற்சிப்போம்!’ என்று அதிர்ஷ்டத்தை நம்பினோம்!” என்பதை ஒப்புக் கொண்டனர்.
அதிகம் செயல்பட்ட அவரை அந்த நிறுவனமும், ஊழியர்களும் கைகூப்பி வணங்கிப் பாராட்டினர். தன் செயலால் மதிப்பைக் கூட்டிக் கொண்டு, கூட்டத்தைக் கவர்ந்திழுப்பவராக மாறினார். திட்டமிடலுடன் பணியாற்றிய அந்த ஊழியர்.
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது என்பது புரிகிறதா?
– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational speaker