“ஒரு காலத்தில் நாங்கள் இந்த ஊரில் ஜமீன்தாரராக வாழ்ந்தோம்” என்று பழம்பெருமை பேசிக்கொண்டு இருப்பவர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
ஜமீன்தார்கள் என்றில்லை… நம்மைப் போன்ற சராசரி மனிதர்களும் கூட, “3 வருஷம் முன்னாடி வரை பிசினஸ் சூப்பரா இருந்தது” என்று கடந்து போன்றவற்றையே பெருமை பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஆனால், பழங்கதைகள் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்று நம்மில் பலருக்கும் ஏனோ தெரிவதில்லை.
குறித்துக் கொள்ளுங்கள்… கிரிக்கெட்டில் சென்ற முறை உலகக் கோப்பையை வென்ற அணியாக இருந்தாலும்கூட, இந்த முறை உலகக் கோப்பை போட்டியில், மீண்டும் முதல் சுற்றில் இருந்தான் தொடங்க வேண்டும். சதங்களைக் குவித்த விராட் கோலி கூட ஒவ்வொரு போட்டியிலும் மீண்டும் முதல் ரன்னில் இருந்துதான் பேட் செய்யத் தொடங்க வேண்டும்.
எனவே, பழைய சாதனைகள் பெருமையைத் தரலாமே தவிர, இன்றைய சாப்பாட்டுக்கு உதவாது.
அதனை அடித்தளமாக வைத்துக்கொண்டு மேலே உயர்வதுதான் புத்திசாலித்தனம், அதை விடுத்து, பழம்பெருமையை உயர்வாக பேசிக் கொண்டே போனால் நாம் தாழ்ந்து போய்க் கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம்.
ஒவ்வொரு நாளும் தொழிநுட்பம் வளர்கிறது; தொழில் உத்திகளும் மாறுகின்றன; வணிகச் சூழலும், அரசின் விதிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, நாம் வெற்றி பெற வேண்டுமானால், புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், உங்கள் நேரத்தை கடந்த ஒரு ஆண்டில் நீங்கள் என்னென்ன விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்வதில் செலவழித்தீர்கள்?
· உங்கள் துறை சார்ந்த கருத்தரங்குகளுக்கு சென்றீர்களா?
· புதிய தொழில்நுட்பம் எதையாவது கற்றுக் கொண்டீர்களா?
· கண்காட்சிகளைப் பார்வையிட்டு அறிவை வளர்த்துக் கொண்டீர்களா?
· உங்களது துறையில் சாதித்த தொழிலதிபர்கள் அல்லது வல்லுநர்களை சந்தித்து உங்கள் அறிவை விரிவாக்கினீர்களா?
இப்படி எதையுமே கடந்த ஓராண்டில் நீங்கள் செய்யவில்லை என்றால், குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
கடந்து போன வருடத்தை விடுங்கள். இனி அடுத்த 12 மாதங்களிலாவது எதை கற்க வேண்டும் என்பதை திட்டமிடுங்கள்.
நீங்கள் புதியனவற்றை கற்றால்தான், புதிய சிந்தனைகள் தோன்றும். புதிய சிந்தனைகளே உலகை ஆளுகின்றன
ஏ. டி. எம். மொபைல் போன், ஸ்மார்ட் போன், இன்டர்நெட், இ-மெயில்… போன்ற அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளில் பரபரப்பை ஏற்படுத்தியவைதான். புதியவற்றை உருவாக்கிய பலரும் கோடீஸ்வரராகி இருக்கிறார்கள்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker