லேத் (Lathe) தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்த ஒரு தொழில் முனைவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். பணம் புரட்டுவதில் சிக்கல்…
இயந்திரங்கள் சரி வர வேலை செய்யாததால் சிக்கல்… ஊழியர் ஒருவர் பணத்தை கையாடல் செய்ததால் சிக்கல்… இன்னொரு ஊழியர் வண்டியை மற்றவர் மீது மோதி விட்டதால் சிக்கல்… ஒரு வாடிக்கையாளர் உரிய நேரத்தில் பணம் தராததால் சிக்கல்… சப்ளையர் தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கிய தால் சிக்கல்… இப்படி ஏகப்பட்ட சிக்கல்களால் நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனார்.
பொதுவாக இப்படி அடுக்கடுக்கான சிக்கல்கள் வரும்போது வாஸ்து நிபுணரையோ, கைரேகை, எண்கணித ஜோதிடர்களையோ சந்திக்கச் செல்லாமல், புத்திசாலித்தனமாக ஒரு சிறந்த நிர்வாக ஆலோசகரை தேடிச் செல்வதே நல்லது.
நண்பருக்கு இந்த ஆலோசனையைச் சொன்னதும் கிளம்பிப் போனார். அவரது சிக்கல்களைகளையெல்லாம் அந்த நிர்வாக ஆலோசகர் முதலில் பொறுமையாக கேட்டார். இவை அனைத்தும் எல்லாத் தொழில் முனைவோருக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் ஏற்படக் கூடியவையே என்பது அவருக்குத் தெரியும். இவற்றை மன உறுதியோடு எதிர்கொண்டு, அவற்றிலிருந்து மீண்டு புது வடிவம் பெறுபவர் மட்டுமே சிறந்த தொழில் அதிபராக முடியும். இவற்றுக்கு ‘சர்வசிக்கல் நிவாரணி’ என்று எதுவும் கிடையாது.
சிக்கல்களை எதிர்கொள்வதற்கு அந்தத் தொழில்முனைவருக்கு எது தேவை என்று அவருக்குப் புரிந்துவிட்டது. ஆலோசகர், அவரை சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மூன்று கொள்கலன்களை எடுத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தார். ஒன்றுமே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் நண்பர். தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் வரை காத்திருந்தார்.
பிறகு, ஒரு கொள்கலனில் கேரட்டையும், மற்றொன்றில் முட்டையையும், மூன்றாவது கொள்கலனில் காபி கொட்டையையும் போட்டு திரும்பவும் மைக்ரோ ஓவனில் வைத்து ஒரே அளவில் கொதிக்க விட்டார். சில மணித்துளிகள் கழித்து அவை மூன்றையும் எடுத்து மேசையில் வைத்தார். இப்போது அந்த தொழில்முனைவரை மூன்றையும் சுவைத்துப் பார்க்கச் சொன்னார்.
“திடமாகவும், கடினமாக இருந்த கேரட் தற்போது மென்மையாகவும், உண்பதற்கு எளிதாகவும் மாறிவிட்டது. முட்டையின் ஓட்டுக்குள் திரவமாக இருந்த வெள்ளைக் கருவும், மஞ்சள் கருவும் நன்றாக கொதித்தபின் திடப்பொருளாக ஆகிவிட்டது. காப்பிக்கொட்டை கொதிநீரில் வேக வைத்த பின்னர் காப்பியாக உருமாறி அருந்துவதற்கு சுவையாக இருக்கிறது” என்று வியப்போடு சொன்னார் அவர். அவருக்கு ஏதோ புரிவது மாதிரி இருந்தது.
“மூன்று பொருள்களும் ஒரே மாதிரியான வெப்பத்தைத் தான் எதிர்கொண்டன. ஆனால் ஒவ்வொன்றும் தங்கள் இயல்புக்கு ஏற்ற சுவையாக மாறிவிட்டன. வெப்பத்தைப் போன்று சிக்கல்களும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவையே. நீங்கள் கேரட்டா… முட்டையா… காபிக் கொட்டையா… ? என்பதை முடிவு செய்யுங்கள்” என்றார்.
“புரியவில்லையே… கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் என்று கேட்டார் தொழில் முனைவர்.
“அதாவது கேரட்டைப் போன்று முதலில் திடகாத்திரத்தோடும், மன உறுதியோடும் இருந்து, பின் சிக்கல்கள் வந்த பிறகு உங்கள் உறுதியை இழந்து மென்மையாக மாறப் போகிறீர்களா? அல்லது முட்டையைப் போன்று உங்களுக்குள் மென்மையாக இருந்து, நீங்கள் சிக்கல்களை எதிர் கொண்டு பிறகு உறுதியான தோற்றத்தோடு மேலே ஏழப் போகிறீர்களா? அல்லது காப்பி கொட்டையைப் போன்று சிக்கல்களுக்கு பழகிக் கொண்டு அதன் மூலம் புது மெருகு பெற்று மிகுந்த சுவையான மனிதராக மாறப் போகிறீர்களா?” என்ற ஆலோசகர்,
“கேரட் மனிதர்கள் விரைவில் தோற்றுப் போவார்கள், முட்டை மனிதர்கள் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்கள், நீண்ட காலம் தாக்குப் பிடித்து நிற்பார்கள். ஆனால் காப்பிக் கொட்டை மனிதர்கள் தான் இறுதியில் வெற்றி பெறுவார்கள். எனவே நீங்கள் உங்கள் சிக்கல்களை நேரடியாக எதிர்கொண்டு, அதனோடு கலந்து, அதில் மூழ்கித் திளைத்து, அதிலிருந்து பெறுகிற படிப்பினைகளால் புதிய மனிதராக உருமாறி வாருங்கள்” என்றார்.
எல்லாத் தொழில் முனைவோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இது போன்ற சிக்கல்கள் நிச்சயம் வந்திருக்கும். ஆனால், இதற்கெல்லாம் அவர்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது.
பணத்தைத் திருடுவது, தவறாகக் கணக்கு எழுதி பணத்தைக் கையாடல் செய்வது, சப்ளையர்களிடம் லஞ்சம் வாங்குவது போன்ற சில அடிப்படைத் தவறுகள் எல்லா இடங்களிலும் சகஜம். இது போன்ற நிகழ்வுகள் உங்கள் அலுவலகத்திலும் நடக்காமல் பார்த்துக்கொள்ள இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகபட்சமாக ரூ. 10,000 அல்லது ரூ. 20,00 த்துக்கும் மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து பணத்தை எடுக்க வேண்டாம்.
செலவுகளைப் பொறுத்தவரையில் ரூபாய் 5 ஆயிரத்துக்கு மேல் எந்தச் செலவை மேற்கொண்டாலும் வங்கிப் பரிவர்த்தனை மூலமே பணம் செலுத்த வேண்டும்.
தேநீர், உணவு, பெட்ரோல், குடிநீர், ஜெராக்ஸ், கூரியர் போன்று தொடர்ந்து அன்றாடம் மேற்கொள்ளப்படும் ரொக்கச் செலவுகளை, மாதத்திற்கு ஒரு முறை வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்று நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினசரி பணவரவு அதிகம் நிகழக்கூடிய மருந்துக் கடை, பலசரக்குக் கடை, பல்பொருள் அங்காடி, துணிக் கடை, தேநீர் கடை போன்ற ரீடெயில் கடைகளில் தினந்தோறும் இருமுறை வங்கிக்குச் சென்று, பணத்தை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதக் கடைசியிலும் தணிக்கையாளரைக் கொண்டு உடனுக்குடன் கணக்குகளை ‘டேலி’ செய்துவிட வேண்டும். ஆண்டுக் கடைசியில் தணிக்கை செய்யும் போது நாம் செய்த செலவுகளுக்கான காரணங்களில் பெரும்பாலனவை நமக்கே மறந்து போகும். மேலும் கணக்கியல் பிரிவில் பணியாற்றியவர் வேலையை விட்டுப் போய் விடக்கூடும். எனவே மாதாந்திர கணக்கு தணிக்கை அவசியம். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்தணிக்கையாளர்களைக் (Internal Auditors) கொண்டு ஒரு முறையும், அடுத்து வெளி தணிக்கையாளர்களைக் (External Auditors) கொண்டு மறு முறையும் கணக்குகளைத் தணிக்கை செய்தல் வேண்டும். இதனால் பணத்தை களவாடி இருந்தாலோ, தவறான கணக்கு எழுதி இருந்தாலோ நிச்சயம் தெரிந்துவிடும்.
லஞ்சம்/ஊழல் பெறுவதைத் தடுக்க என்ன செய்யலாம்…?
நமக்கு மிகவும் வேண்டிய சப்ளையர்களுக்கு ஆர்டர்களைக் கொடுத்து அவர்களிடம் கையூட்டு பெறுதல், சப்ளையர்களுக்கு குறித்த காலத்திற்கு முன்னதாகவே பணம் வழங்க லஞ்சம் கோருதல், இல்லாத நிறுவனத்தின் பெயரில் தவறான பில்களை உருவாக்கி பணத்தினை பெறுதல் போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு ஒரே வழி, கணக்கு பிரிவில் ஓரே ஊழியரை நீண்ட காலம் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது. அதேசமயம், அவ்வப்போது ஊழியர்களை இடமாற்றம் செய்யும்போது சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். சான்றிற்கு சப்ளையர்களோடு நடைபெற்று வரும் பணம் கொடுக்கல் வாங்கல் முறை, வங்கி நடைமுறை போன்றவற்றில் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும்.
இதைத் தவிர்க்க சில நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
கணக்கியல் துறையில் ஒரு ஊழியர் வேலையை விட்டு விடுகிறார் என்றால் அவர் விலகுவதற்கு முன் கையாண்டு வந்த பணப் போக்குவரத்து அனைத்தையும் டேலி செய்யச் சொல்லிவிட்டு அவரை வேலையை விட்டு போகச் சொல்வது நல்லது. அவர் சென்ற பிறகு, ‘இந்த அக்கவுன்டில் இவ்வளவு குறைகிறது’, ‘அந்த அக்கவுண்டில் இன்னின்ன குறைபாடு என்றெல்லாம் புலம்புவது வீண்.
—- இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker