ஒர் அரசன் தம் நாட்டில் புதிய நெடுஞ்சாலை ஒன்றை அமைத்தான். அந்த நெடுஞ்சாலையை பொதுமக்களுக்கு திறந்து விடுவதற்கு முன்பாக அந்நாட்டின் முக்கியமானவர்கள் பலரையும் வரவழைத்து அச்சாலையில் பயணம் செய்ய சிறப்பு அழைப்பு விடுத்தான்.
அவர்கள் உற்சாகமாக அச்சாலையில் பயணித்தனர். பயணத்தை முடித்தபின்பு மன்னரிடம் வந்தவர்கள் கதை கதையாக அச்சாலையின் பெருமைகளைப் புகழ்ந்து கூறினர். ஆனால் இறுதியில் எல்லோரும் தயங்கித் தயங்கி மன்னரிடம் சொன்ன செய்தி, “சாலையைப் பாதி தூரம் கடந்த நிலையில் சில பெரிய பாறாங்கற்கள் சாலையில் கிடந்தன. அவற்றைக் கடக்கும்போது மட்டும் சிறிது சிரமம் ஏற்பட்டது. அதைத் தவிர சாலை அமைப்பு மிகப் பிரமாதம்… அந்தச் சாலையில் பயணித்தது ஒரு அற்புதமான அனுபவம்” என்றனர். மன்னன் சிரித்துக்கொண்டே ஆமோதித்தான்.
இறுதியாக மன்னரைப் பார்க்க வந்தான் ஒரு பயணி. வியர்வையும் தூசி படிந்த ஆடைகளுமாக இருந்த அவன் கையில் ஒரு பரிசுப் பொருள். அந்தப் பயணி மன்னருக்கு பரிசு தர வந்திருப்பதாக அனைவருக்கும் பட்டது. அவன் “மன்னா! இந்தப் பயணம் அற்புதமாக இருந்தது. வழியில் சில பாறாங்கற்கள் தென்பட்டன. அவற்றை ஓரமாக நகர்த்தி வைத்தேன். அப்போது பாறாங்கற்களுக்கு கீழே இந்தப் பொற்காசுகள் இருந்தன” என்று பரிசு மூட்டையை மன்னரிடம் கொடுத்தான்.
மகிழ்வடைந்த மன்னர், மற்ற பயணிகள் அனைவரையும் அழைத்து “கவனித்தீர்களா? யாரொருவர் தமக்குப் பின்னால் வருபவருக்கு வசதியாக சாலையைச் சீரமைத்துச் செல்கிறாரோ அவரே சிறந்த பயணி. இதோ அதற்கு எடுத்துக் காட்டு இவர்தான்” என்று கூறி, பொற்குவியலை பயணியிடமே வழங்கினார்.
தொழில்துறையும் இப்படித்தான். லட்சக்கணக்கானோர் தொழில் புரிந்து பலவிதமான இடர்களை எதிர்கொண்டு அப்பயணி சாலையைச் சீரமைத்தது போல, அரசு விதிமுறைகள், வங்கி நடைமுறைகள், வரி விதிப்புகள், பணப் பரிவர்த்தனைகள் எனப் பலவற்றையும் ஒரு வரையறைக்குள் அமைத்துக் கொடுத்துள்ளனர். அதனால் இன்றைக்கு நம்மைப் போன்றவர்களால் தொழில் தொடங்குவது எளிதில் சாத்தியமாகிறது.
ஒரு தொழிலைத் தொடங்குவது நண்பனைத் தேர்ந்தெடுப்பது போன்றதுதான். எனவே, உங்கள் குணத்துக்கும், தன்மைக்கும் ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் உங்களுடைய தன்மை என்ன என்பதை நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
அதாவது, உங்களால் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்க முடியும்… ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு நேரம் உழைக்க முடியும்… வெளியில் சுற்றுவது உங்களுக்குப் பிடிக்குமா… அல்லது உட்கார்ந்து வேலை பார்க்க, தொழில் செய்யப் பிடிக்குமா… நீங்கள் தனிமை விரும்பியா… பேசிக்கொண்டே இருப்பவரா, அல்லது அமைதியாக பணியாற்றுபவரா… நீங்கள் முடிவு எடுப்பதில் கில்லாடியா, அல்லது அதிக நேரம் எடுத்துக் கொள்பவரா… தனித்து இயங்கும் தன்மை கொண்டவரா… குழுவாக இணைந்து இயங்குபவரா… திட்டமிடுதலில் சிறந்தவரா… திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்தவரா… என உங்களது தன்மைகளை முதலில் பட்டியலிடுங்கள். ஏனெனில் இதுபோன்று விதவிதமான தன்மைகள் ஒவ்வொரு தொழிலுக்கும் உண்டு.
பத்திரிகைகள் விநியோகம், பால் வினியோகம், பூ வியாபாரம், காய்கறி விற்பனை போன்ற சில தொழில்கள் நேரம் சம்பந்தப்பட்டவை. ஆண்டில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் விடுமுறையே கிடைக்கும். மழை, வெள்ளம், வெயில், குளிர் என எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனும் உடல்வாகும் இருப்பது அவசியம்.
இதுபோன்றுதான் உணவகம் மற்றும் பலசரக்கு கடை வணிகமும். நீங்கள் காலையில் 4 மணிக்கே எழுந்து சந்தைக்குச் சென்று காய்கறிகளைக் கொள்முதல் செய்யவேண்டும். பிரகு இரவு 11 மணிவரை கடை கல்லாவில் அமர வேண்டும். பிற்பகலில் மட்டும் சிறிது நேரம் ஓய்வு கிடைக்கலாம். கடையை விட்டு நகர முடியுமா என்பது எந்த இடத்தில், யாரை நம்பி கடை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
மருந்துக்கடை, துணிக்கடை, ஹார்டுவேர்ஸ், சிமெண்ட் கடை உள்ளிட்ட அனைத்து நேரடி சில்லரை வணிகத் தொழில்களுக்கும் காலை 10 மணிக்கு கடையை திறந்தே ஆகவேண்டும். காலை பத்து மணிக்கு கடை திறக்கும் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர் மனதில் விதைக்க வேண்டியது அவசியம். அதுபோல, இந்தத் தொழில்கள் இரவு 10 மணி வரை உங்களது உழைப்பை எதிர்பார்க்கும்.
பண்டிகை காலங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைவருக்கும் விடுமுறை என்றால் அன்று நீங்களும் பண்டிகை உற்சாகத்தில் திளைக்க முடியாது. நீங்கள் பரபரவென்று பணியாற்றும் நேரமாக அது அமையும். துணிக் கடை, வெடிக் கடை போன்ற பெரும்பாலான ரீடெய்ல் தொழில் நடத்துபவர்களுக்கு அப்போதுதான் கூட்டம் அதிகமாகி, வணிகம் சூடுபிடிக்கும். சுக வாசிகளுக்கு இத்தொழில் ஆகாது.
உறவுமுறைகளின் விசேஷங்களில் அதிக ஈடுபாடு காட்டுவோருக்கு சரிப்பட்டு வராது.
உற்பத்தித் தொழில்களின் கதை வேறு. உற்பத்தித் தொழிற்சாலைகள் ஷிப்ட் முறையில் இயங்கக் கூடியவை. அவ்வப்போது தொழிற்சாலைகளுக்கு சென்று ஒரு தொழில்முனைவர் தொடர்ந்து மேற்பார்வை இடவேண்டும். மனிதர்களைக் கையாலத் தெரிந்தவர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
தங்கும் விடுதிகள், திரையரங்குகள், விமானம், பேருந்து, வேன், கார் உள்ளிட்ட டிராவல்ஸ் தொழில்களின் இயல்பு வித்தியாசமானது. நீங்கள் இவற்றில் விற்பனையை முன்கூட்டியே முடித்தாக வேண்டும். தங்கும் விடுதியின் அறைகள் அன்றைக்கு விற்கப்பட வில்லை என்றால் அது வீண் தான்.
நேற்று காலியாக இருந்த அறைகளை நாளைக்கு விற்க முடியாது. எந்த அளவிற்கு முன்கூட்டியே விற்பனையை முடித்து விடுகிறோமோ அந்த அளவிற்கு லாபம் உறுதியாகும். அதனால் தான் அனைத்து விமான நிறுவனங்களும் முன்கூட்டியே பதிவு செய்யப்படும் பயணச்சீட்டு களுக்கு அதிக தள்ளுபடி கட்டணங்களை வழங்குகின்றன. தெளிவாகத் திட்டமிடுகிறவர்கள் இதுபோன்ற தொழிலில் இறங்கலாம்.
இந்தத் தொழிலுக்கு நேர் எதிரானது தங்கம், வெள்ளி மனை (Real Estate) போன்றவை. இவற்றை எந்தளவிற்கு நாள் தள்ளி விற்கிறோமோ அந்த அளவிற்கு லாபம் அதிகம். ஆனால் லாபம் அதிகம் என்பதால் தங்கம், வெள்ளி போன்றவற்றை இருப்பிலேயே வைத்திருக்கவும் முடியாது.
எனவே, குறைந்த விலையில் கிடைக்கின்ற போது கூடுதலாகக் கொள்முதல் செய்து, விலை ஏறும்போது விற்று அதற்கேற்றாற்போல் இருப்பை சமன் செய்து கொண்டே இருக்க வேண்டும். சமயோஜித புத்தி உள்ளவர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
பங்கு வணிகம், பண்டக வணிகம், அன்னியச் செலாவணி போன்றவற்றின் இயல்பு இன்னும் வித்தியாசமானது. இவற்றின் விலை எப்போது ஏறும்… எப்போது இறங்கும்? என்று கணிப்பது கடினமானது. அனுபவத்தின் மூலம் மட்டுமே இதனை உணர முடியும்.
இதோ இந்த மாதத்தில் இந்த லாபம் ஈட்டி விடலாம் என்பதுபோலத்தான் தோன்றும். ஆனால், தள்ளிக்கொண்டே போய் பொறுமையைச் சோதிக்கும். எனவே, பொறுமை, ஆழமான அறிவு, அனுபவம், ரிஸ்க் எடுக்கும் குணம் போன்ற தன்மை கொண்டோருக்கே இத்தொழில் பொருந்தும்.
கடன் அட்டை, ஆயுள் காப்பீடு, ரிசார்ட் விற்பனை போன்ற தொழில்களின் தன்மை இன்னும் மாறுபட்டது. இவற்றை விற்பனை செய்வதற்கு அதிக பேச்சுத் திறமை வேண்டும்.
ஒவ்வொரு தொழிலுக்கும் இப்படி சில தன்மைகள் இருப்பதால் உங்களுக்கு எந்த தன்மை ஒத்துப்போகுமோ அத்தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்.