ஒரு ஊரில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. மக்களெல்லாம் பொங்கி எழுந்து இறைவனிடம் சென்று முறையிட்டனர்.
இவர்களின் நிலை கண்டு பரிதாபப்பட்ட இறைவன், சற்று மனமிரங்கி, பணக்காரர்களிடம் இருந்த பணத்தை எடுத்து ஏழைகள் எல்லோருக்கும் பகிர்ந்தளித்தான்.
பத்து ஆண்டுகள் கழிந்தன. அவர்களின் நிலையை அறிய ஆவலுடன் இறைவன் அந்த ஊருக்குச் சென்றான். முன்பு யாரெல்லாம் ஏழைகளாகவும், எவரெல்லாம் பணக்காரர்களாகவும் இருந்தார்களோ அவர்களே திரும்பவும் ஏழைகளாகவும், பணக்காரர்களாகவும் மாறி இருந்ததைக் கண்டு, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
இந்தச் சிரிப்புக்குக் காரணம் என்ன தெரியுமா? அவரவரது ‘எண்ணங்கள்’ தான்!
‘இதெல்லாம் கதை’ என்று நீங்கள் நினைத்தால், ஒரு உண்மைச் சம்பவத்தையும் நாம் பார்ப்போம்.
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றின் உளவியல் துறையினர் வித்தியாசமான ஆய்வினை மேற்கொண்டனர்.
அங்கு படித்துக் கொண்டிருந்த சுமார் 600 மாணவர்களிடம் அவர்களுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றி குறிப்பெடுத்தனர்.
25 ஆண்டுகள் கழித்து திரும்பவும் அதே மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களின் நிலை என்ன என்பதைக் கேட்டறிந்தபோது, மிகப் பெரிய ஆச்சரியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
அதாவது, 600 பேரில் இருபது விழுக்காட்டினர் வாழ்வின் உச்சத்தில் இருந்தனர். முப்பது விழுக்காட்டினர் வாழ்வின் தாழ்வு நிலையில் வாழ்ந்து வந்தனர். மீதமுள்ள ஐம்பது விழுக்காட்டினர் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் நடுத்தர நிலையில் இருந்தனர்.
இதில் ஆச்சிரியம் என்னவென்றால், வெற்றி பெற்ற இருபது விழுக்காட்டினர்தான் 25 ஆண்டுகளுக்கு முன்பே தாம் என்னவாக வேண்டும் என்கிற தெளிவைக் கொண்டிருந்தனர்.
வாழ்க்கையின் தாழ்வு நிலையில் இருந்த முப்பது விழுக்காட்டினர் 25 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்மறைச் சிந்தனைகளோடுதான் இருந்தனர். மீதமுள்ள பெரும்பாலானோர் பெரிய எண்ணங்களோ திட்டங்களோ இல்லாமல், அதே நேரம் போகிற போக்கில் வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையோடு இருந்தனர்.
‘எண்ணங்கள்’ தான் மனிதனை உருவாக்குகின்றன என்ற சிந்தனையை, உலகம் உணர்ந்தது இந்த ஆய்விற்குப் பிறகுதான்.
ஆம்… நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆவீர்கள்.
நாம் நிர்ணயித்து வைத்திருக்கிற இலக்குகளை ‘நம்மால் முடியும்’ என்று நாமே முதலில் எண்ண வேண்டும். பிறகு அதைப்பற்றி திரும்பத் திரும்பத் திரும்பப் பேசி சுற்றத்தாரையும் நம்ப வைக்க வேண்டும்.
அது அவர்கள் மூலமாக பிறருக்கும் பரவி, நம் இலக்கு சார்ந்த ஆர்வமுள்ள மனிதர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
உதாரணத்திற்கு உங்களுக்குத் தெரிந்த ஒரு மாணவர், ‘நான் ஐ.ஐ.டி.யில் சேர விரும்புகிறேன்’ என்று உங்களிடம் சொன்னால், நீங்கள் உடனே ஒரு ஐ.ஐ.டி. பேராசிரியரையோ அல்லது ஐ.ஐ.டி. மாணவரையோ அல்லது பயிற்சி மையத்தையோ பரிந்துதரைத்து, அவருக்கு உதவுவீர்கள். அதன் மூலம் அம்மாணவர் தன் இலக்கை அடைவதற்கான அடுத்த நிலைக்குச் செல்வார்.
ஒருவேளை அவர் தன்னுடைய இலக்கை நம்பாமல் இருந்து, அதை உங்களிடம் சொல்லாமல் இருந்திருந்தால், இந்த உதவி அவருக்கு கிடைத்திருக்காது அல்லவா?
உலகமே உங்களுக்கு உதவக் காத்திருந்தாலும், உங்கள் தேவை என்னவென்று உங்களுக்கே தெரியாவிட்டால் அல்லது வெளியே சொல்லாவிட்டால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் ஏழையாகக்கத்தான் இருப்பீர்கள்.
சரி, இலக்கு அவசியம்; அதை நம்ப வேண்டியதும், வெளியில் சொல்ல வேண்டியதும் மிக முக்கியம். அடுத்து என்ன?
இலக்கை அடைவதற்கான ‘செயல் திட்டம்’! இதற்கு பூதக்கண்ணாடி உத்தி மிகவும் பயன்படும்.
அதாவது, உங்கள் இலக்குகளை பூதக்கண்ணாடி கொண்டு அருகில் வைத்து கூர்ந்து பார்க்க வேண்டும். ஐந்தாண்டு கனவை ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆண்டுதோறும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, பின்னர் ஓராண்டு திட்டத்தை 12 பகுதிகளாகப் பிரித்து மாதத் திட்டத்தை வகுத்து, பிறகு வாரந்திர திட்டத்தையும் உருவாக்கலாம்.
‘இதெல்லாம் சாத்தியப்படுமா?’ என்று கேட்டால், ‘படும்’ ! உங்களை நீங்கள் நம்பினால்; உங்கள் எண்ணத்தை நீங்கள் மதித்தால்,
நினைவில் கொள்ளுங்கள்… பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறபோது, உங்கள் தவறுகளும், இயலாமைகளும்கூட பெரிதாகத் தோன்றலாம். அவை உங்களை ஆளுமை செய்ய அனுமதிக்காமல், அவற்றிற்கு தீர்வினை உருவாக்க வேண்டியதும் அவசியம் !
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் உங்கள் முன் இரண்டு கேள்விகள் வைக்கப்படும்.
‘என்னால் முடியாது’ என்ற நெகட்டிவ் சிந்தனையோடு புலம்பிக் கொண்டே இந்த உலகை எதிர்கொள்ளப் போகிறீர்களா? அல்லது ‘என்னால் நிச்சயம் முடியும்’ என்ற பாசிட்டிவ் சிந்தனையோடு, உற்சாகமாக, இந்த உலகை எதிர்கொள்ளப் போகிறீர்களா?
இந்த இரண்டில் எதை நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்களோ, அதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கை அமையும் !