நீங்கள் வெற்றியாளராவதற்கான ஒரு முக்கியமான ரகசியத்தை பார்க்கப் போகிறோம். ‘உங்கள் டேபிளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்‘ என்பதுதான் அது. நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்கலாம்… “இது எப்படி என்னை வெற்றியாளனாக்கும்?” என்று.
டேபிளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் என்பது தூசியைத் துடைத்து, சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல… எந்த ஃபைலையும், எந்தப் பேப்பரையும் தங்க விடாமல் பார்த்துக் கொள்வதுதான். அதாவது, நீங்கள் உடனுக்குடன் முடிவெடுக்கப் பழக வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.
“தேங்கும் நீர் சாக்கடையாகிவிடும்” என்பதுபோல, எந்த விஷயத்தையும் முடிவெடுக்காமல் ஆறப்போட்டுவிட்டால், அது பயன் தராது. எவ்வளவு வேகமாக நீங்கள் முடிவெடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கு வாழ்க்கையில் வேகமாக முன்னேற முடியும்.
உடனுக்குடன் முடிவெடுக்கும்போது தவறுகள் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. முடிவெடுக்காமல் இருப்பதைவிட, தவறான முடிவுகளிருந்து கற்றுக் கொண்டு பிறகு லாபம் ஈட்டலாம்.
நடிகர் ஷாம் நடித்த 12-பி படம் பார்த்திருப்பீர்கள். ஒரு பேருந்தில் ஏறாமல் போனதனால், ஒருவருடைய வாழ்க்கை எவ்வளவு மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பதை அந்தப் படம் விளக்கியிருக்கும்.
எல்லா நேரங்களிலும் முடிவுகளை உடனே எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சில தருணங்களில் முடிவுகள் எடுக்கப்படாமல் இருப்பதும், முடிவுகளை தள்ளிப் போடுவதும் கூட நல்ல முடிவாக இருக்கலாம். அத்தகைய தருணங்களில் முடிவு எடுத்தலை வேறு எந்தத் தேதிக்கு தள்ளிப் போடலாம் என்று குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
முடிவு எடுப்பது எப்படி என்பதை ஒரு நீதிபதியிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். தன்னுடைய டேபிள் மீது இருக்கிற தகவல்களை வைத்துக் கொண்டு, அந்தத் தகவல்கள் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குவதைப் போல, நாமும் கையில் இருக்கிற தகவல்களையும், அடைய வேண்டிய இலக்குகளையும் நினைவில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
டேபிளைச் சுத்தமாக வைத்துக் கொள்வதன் அடுத்த நிலை, எதையுமே முறையாக எடுத்த இடத்தில் திரும்ப வைக்கிற பழக்கமாகும். இதற்கு ஆங்கிலத்தில் ‘கீப் திங்ஸ் இன் ஆர்டர்‘ என்று சொல்வர்.
நீங்கள் உங்கள் ஊரில் உள்ள நுலகங்களுக்குச் சென்று பார்த்தால் தெரியும்… புத்தகங்களையெல்லாம் பல பிரிவுகளாகப் பிரித்து, அவற்றிற்கு வரிசை எண்ணிட்டு, அந்த வரிசை எண்களை அட்டவணைப்படுத்தி அழகாக அடுக்கி வைத்து இருப்பார்கள்.
நாள்தோறும் பலர் வந்து புத்தகங்களை எடுத்துச் சென்றாலும், புத்தங்களைக் கொண்டு வந்தாலும் அதனைப் பொறுமையாக அதனதன் இடத்தில் அடுக்கி வைக்கிற பழக்கத்தை நூலகர்கள் கொண்டிருப்பார்கள். அந்த ஒழுக்கம் நமக்கும் தேவை. வீட்டில் நாம் பயன்படுத்துகிற பொருள்களை அதனதன் இடத்தில் அடுக்கி வைப்பதும், அலுவலகத்தில் காகிதங்களையெல்லாம் முறைப்படி கோப்புகளில் வைப்பதும் மிகவும் முக்கியம்.
முடிவெடுக்கவே முடியாத சில கோப்புகள் உங்கள் டேபிளில் இருக்குமானால், அவற்றை தனி இடத்தில் வைத்துவிட்டு வாரந்தோறும் திங்கட்கிழமை அந்தக் கோப்புகளைப் பார்க்கலாம். உங்கள் டேபிள் சுத்தமாக இருந்தால், நீங்கள் குழப்பமின்றி தெளிவாகச் சிந்திக்க முடியும்; வேகமாக முடிவெடுக்க முடியும். உங்கள் எதிரில் வந்து அமருபவர் தேவையில்லாமல் டேபிளில் கண்களை ஓட விட மாட்டார். ‘என் டேபிள் மீது இருந்த பொருள் தொலைந்து விட்டது‘ என்றும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமும் இருக்காது.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்… வெற்றியாளர்கள் சரியாக முடிவு எடுப்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், உடனுக்குடன் முடிவு எடுப்பவர்கள் என்று உறுதியாகக் கூறலாம்.