fbpx
கடன்களில் கவனம் தேவை! | keep tabs on your debts

business tips - keep tabs on your debts
  • May 13, 2022

வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளைப் (Credit Card) பொறுத்தவரை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்

வங்கி வட்டி இன்றி கடன் தரும் ஒரு மாத கால அவகாசத்திற்குள் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதே புத்திசாலித்தனமாகும். 

கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். மேலும் எளிதில் கிடைக்கிறதே என்பதற்காக கடன் அட்டைகளின் மூலம் கடன் வாங்கி அதைத் தவணை முறையில் கட்ட முடிவு எடுத்த பிறகு மாட்டிக்கொண்டு முழிப்பதை விட கடன் வாங்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. 

முன்பெல்லாம் வங்கிகளில் கடன் கேட்டுப் போனால் கடன் தருவதற்கு முன் ஆயிரம் முறை யோசிப்பார்கள். வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை, முன்பு பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதமே எல்லா வங்கிகளுக்கும் பொதுவானதாக இருந்து வந்தது.  

ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.கடன் வேண்டுமா கடன் வேண்டாமா?’ என்று கூவிக் கூவி அழைத்து, கிட்டத்தட்ட தொல்லை செய்து கடனைத் தந்து விட்டுத்தான் செல்கிறார்கள். வட்டி விகிதத்தையும் அந்தந்த வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துவிட்டது. 

எனவே, நீங்கள் கடனை வாங்குகின்றபோது அதற்கான வட்டித் தொகையை முடிந்தளவு பேரம் பேசிக் குறைக்கலாம். மேலும் கடன் தரும்போது கூடுதலாக பிராசஸிங் கட்டணம், டாக்குமெண்டேஷன் கட்டணம் என சில வங்கிகள் வசூலிக்கின்றன. அவற்றை எல்லாம்கூட நீங்கள் குறைக்கச் சொல்லலாம். 

குறைவான வட்டியில் பெற்ற கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தலாமா? 

 வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளும் மிகக் குறைந்த வட்டி வீதத்தில் வாரி வாரி வழங்கி வருகின்றன. இந்தக் கடனை வாங்கி முறையாக வட்டியையும், அசலையும் திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கும் தொழில் முனைவோர், தமக்கு அவ்வப்போது கிடைக்கும் கூடுதல்  பணத்தைக் கொண்டு, இந்தக் கடனை விரைவில் அடைத்துவிட முயற்சிப்பர்.  

ஆனால் அப்படி செய்யத் தேவையில்லை. மாறாக, அதை சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்து, அவசரமாக பணம் தேவைப்படும் போது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், அவ்வளவு குறைந்த வட்டிக்கு திரும்பவும் வேறெங்கும் கடன் கிடைக்காது. 

தொழிலுக்கு அதிகபட்சமாக எவ்வளவு வட்டி விகிதத்தில் கடன் வாங்கலாம்?  

வங்கியிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ எந்தத் தொழிலுக்காகக் கடன் வாங்கினாலும் வட்டி விகிதம் அதிகபட்சம் 15 சதவீதத்தைத் தாண்டாமல் வாங்குவது நல்லது. இன்றைக்கு தொழில் துறையில் போட்டிகள் அதிகரித்து வருவதால் லாபம் குறைந்து கொண்டே போகிறது.  

எந்தத் தொழிலிலும் அதிகபட்சமாக 24 விழுக்காட்டிற்கு மேல் லாபம் ஈட்ட முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சில தொழில்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ரிஸ்க் அதிகமுள்ள தொழில்களில் லாபமோ, இழப்போ அதிகமாகவே இருக்கும். 

கடன் வாங்கி வட்டி கட்டலாமா? 

  கடன் வாங்கி வட்டி கட்டுவதைப் போன்ற கொடிய வியாதி வேறு எதுவுமில்லை. எப்போது கடன் வாங்கினாலும் வட்டியை மட்டும் செலுத்தாமல் அசலையும் சேர்த்தே செலுத்துங்கள். 

 நல்ல சிட்ஃபண்டில் சீட்டு கட்டினால் பணத்தேவையின் போது வட்டி இன்றி பணத்தை எடுத்துக்கொள்ளலாம். சீட்டு ஏலத்தில் கிடைக்கும் கழிவை கணக்கிட்டால் தோராயமாக 10 முதல் 11 விழுக்காடு வரை மிச்சமாகும். இதில் அசலை மாதந்தோறும் திருப்பிச்  செலுத்தி விடுவதால் சீட்டு முடிந்ததும் அந்தக் கடனும் முடிந்துவிடும். அவசரத் தேவைக்கு குறைந்த செலவில் பணம் புரட்ட இது ஒரு சிறந்த வழியாகும். 

பல வங்கிகளில் கணக்கு வைக்கலாமா? 

 ஏனோ தெரியவில்லை நம்மூர் தொழில் முனைவோருக்கு பல வங்கிகளில்  கணக்கு வைத்திருப்பதில் அதிக ஆர்வம் இருக்கிறது. பல வங்கிகளில் கணக்கு திறப்பதால் குழப்பம் தான் மிஞ்சுமே தவிர அதனால் எந்தப் பயனும் கிடையாது.  

வருமான வரியை தவிர்ப்பதற்காக என்றால், அது இனிமேல் சாத்தியமில்லை. ஏனெனில் தற்போதுபான்’ (PAN) நம்பர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நீங்கள் எத்தனை வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தாலும் உங்கள் வருமானத்தை தெளிவாகக் காட்டி விடும். 

மேலும் தினந்தோறும் வங்கிகளுக்கிடையே  அலைவது, இந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்து அந்த வங்கியில் போடுவது, எந்த வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் திணறுவது என்பன போன்ற தேவையற்ற வேலைகள் எல்லாம் நம் நேரத்தை வீணடிக்கக் கூடும் அதோடு செலவையும் அதிகரிக்கும். 

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட வேண்டுமா? 

 ஒரு தொழில்முனைவர் தமக்கு வருகிற இலாபத்தில் அதிகபட்சமாக 2 விழுக்காட்டை சமூக சேவைக்கு ஒதுக்கலாம். சமூகத்தில் நமக்கு பரிட்சயமில்லாத ஒருவருக்கு உதவுவது, கிளப்புகளுக்கு என்று செலவழிப்பது –   இதற்குப் பதிலாக, நம்முடனேயே இருந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைக்காரர், சமையல்காரர், காவல்காரர்கள் என அறிந்தோருக்கு உதவுவது  சாலச்சிறந்தது.  

அந்தப் பணம் உண்மையிலேயே ஒரு ஏழைக் குடும்பத்திற்கு செல்கிற நிறைவும் நமக்கு இருக்கும் மேலும் அவர்களும் என்றைக்கும் நம் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். 

                                                             —————இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil

Comments are closed.