ஒரு பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ஜென் மதத் துறவி ஒருவர் வந்திருந்தார். அந்த விழாவில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் பல போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் பரிசுக்கு உரியவரைத் தேர்வு செய்யும் நேரம் வந்தது. அப்போது அந்த ஜென் துறவி ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொண்ட அனைவரையுமே வெற்றியாளர்களாக அறிவித்தார்.
இதைக் கேட்டவுடன் ‘தான் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெறுவோம்’ என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு மாணவன் பெருத்த ஏமாற்றம் அடைந்தான். அத்துறவியைப் பார்த்து கேட்டான். ‘ஐயா… யாரும் தோல்வி அடைந்து சோர்ந்து விடக்கூடாது என்று தாங்கள் எண்ணுவது சரிதான். ஆனால், என்னைப் போல கடினமாக உழைத்த சிலருக்கு மரியாதை தரும் சிறப்புப் பரிசுகள் கிடைக்காதது மன வருத்தம் தருகிறதே… இதை ஏன் தாங்கள் உணரவில்லை?’ என்றான்.
அதற்கு அத்துறவி சொன்னார்; ‘ஒவ்வொரு மாணவனது படைப்பும் ஒரு விதத்தில் மாறுதலானதுதான். ஒரு மாணவனின் படைப்பாற்றல் திறனை, இன்னொரு மாணவனது படைப்பாற்றல் திறனோடு ஒப்பிடுவது தான் சரியாகாது. சென்ற ஆண்டைக் காட்டிலும் நீ இந்த ஆண்டு சிறப்பாகச் செய்திருந்தால் அதுதான் உண்மையான வெற்றி’ என்றார்.
ஆம் நண்பர்களே! இது வெறும் கதையல்ல… செலவுகளைக் குறைக்க விரும்புவோருக்கு இந்தப் பாடம் நிச்சயம் பொருந்தும். உங்கள் நிறுவனத்தின் செலவுகளை பிற நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட, உங்கள் நிறுவனத்தின் சென்ற ஆண்டு செலவுகளோடு ஒப்பிடுவதே மேல். சென்ற ஆண்டைக் காட்டிலும் செலவுகள் குறைந்து இருந்தால் அது பாராட்டுக்குரியதே.
செலவுகளை அலசி ஆராய்ந்தால் பணம் மிச்சமாகும்.
செலவுகளை அலசி ஆராய்தல் மூன்று மாதத்துக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவாக வாடகை, சம்பளம், வட்டி, சப்ளையர் பில்கள் போன்ற பெரும்பாலான செலவுகள் மாதத்திற்கு ஒரு முறைதான் கொடுக்கப்படும் என்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஆய்வினை மேற்கொண்டால் போதும்!
செலவுக் கணக்குகளை ஆராயும்போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்…?
செலவுகளை நன்கு ஆராய்ந்த பிறகு ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே அதற்கு அடுத்த மாதம் ஏற்படவிருக்கும் செலவு குறித்து ஒரு பட்ஜெட்டை உருவாக்கி, துறை பொறுப்பாளர்கள் வசம் கொடுத்து விட வேண்டும். அந்த செலவைவிட அவர்கள் குறைவாகச் செலவழித்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம்.
ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் செலவுகளான இதழ்களுக்கு சந்தா செலுத்துதல், ரிசார்ட்களுக்கு பராமரிப்பு செலவுகளை செலுத்துதல், வாடகை ஒப்பந்தத்தை புதுப்பித்தல், ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துதல் போன்ற முடிவுகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இவை தேவையின் அடிப்படையில் மட்டுமே இருக்கலாம்.
பெரும்பாலும் தொழில் முனைவோர் பொருள் மற்றும் சேவை வரி (GST), டி.டி.எஸ் (Tax Deducatd at Source) எனப்படும் வரி பிடிப்பிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அவசரத்தின் காரணமாக இவற்றில் தவறுகள் நேர்ந்துவிடும். பல நேரங்களில் வாடிக்கையாளர்கள் இவற்றை தள்ளுபடியாக வழங்கச் சொல்வார்கள். இதனால் இறுதியில் நிறுவனத்தின் லாபம் தான் பாதிக்கப்படும். எனவே வரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
மேலும் கால தாமதத்தினால் அபராதத் தொகை வசூலிக்கப்படும். செலவுகளான மின் கட்டணம், வரி, வட்டி, காப்பீட்டுத் தொகை உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் செலுத்தி தேவையற்ற அபதாரத்தைத் தவிர்ப்பது மிக முக்கியம்.
——– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker