உங்கள் தொழிலின் லாபம் அதிகரிக்க வேண்டுமா…? அதைச் செய்ய வழி தெரியாமல் தான் இங்கே இருக்கிற அத்தனை பேரும் பாடாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்க
ள். இதை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்கிறேன், அருகே வாருங்கள்.
ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க இரண்டு வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது, விற்பனையை அதிகரித்து, அதன் மூலம் நிகர லாபத்தைப் பெருக்குவது. இது தரமான பொருட்களைத் தருவது, பரவலாக விளம்பரம் செய்வது, வாடிக்கையாளர் திருப்தி என்று பலதுறைகள் சம்பந்தப்பட்டது. இது வெளி லாபம் ஆகும் .
உள் லாபம் ஒன்று உண்டு. இப்படிச் சொன்ன உடனே, 2-ம் நம்பர் கணக்கு, உடனிருக்கும் பார்ட்னரை ஏய்ப்பது… இப்படியெல்லாம் தப்பாக யோசிக்க வேண்டாம்.
ஓகே. அது என்ன உள் லாபம்..? இதோ, இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னதைக் கேளுங்கள்.
“இந்தியாவின் துணை நிதியமைச்சராக இருந்தபோது அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றிருந்தேன். அங்கிருந்த மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. உலகம் முழுக்க பிரசித்திபெற்ற கார்களைத் தயாரிக்கும் அந்தத் தொழிற்சாலையின் நிறுவனர் 90 வயது கொண்ட முதியவர். அவர் ஓய்வு ஏதும் எடுக்க விரும்பவில்லை. தான் விரும்பி வளர்த்த நிறுவனத்தை அந்த வயதிலும் தானே நிர்வகிக்க விரும்பி, தினமும் அரை நாள் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
பரந்து விரிந்த நிறுவனம் அது. ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணியாற்றும் அந்த நிறுவனத்தில் இந்தப் பெரியவர் நாள்தோறும் எந்தத் துறையில் கவனம் செலுத்துவார்…? அனேகமாக விற்பனைப் பிரிவாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. காரணம், ஒரு நிறுவனம் மாபெரும் வெற்றியைப் பெற்று உலக அளவில் முன்னணியில் இருக்கும் போது, அந்த நிறுவனத்தின் நிறுவனர், தினமும் தொழிற்சாலைக்கு வந்து போகிறார் என்றால், மிக முக்கியமான துறையைத் தானே தனக்கென தேர்ந்தெடுப்பார்.
அப்படி அவர் அந்த அரை நாளில் எந்தத் துறையில் இன்னமும் கவனம் செலுத்துகிறாரோ, அந்தத் துறைதான் மொத்த தொழிற்சாலையின் வெற்றிக்கே காரணமாக இருக்க முடியும். இதனைத் தெரிந்து கொண்டே தீர வேண்டும் என்ற ஆவலில் அந்தப் பெரியவரைச் சந்தித்து என் சந்தேகத்தை கேட்டேன்.
“ஐயா ! இந்த வயதிலும் நீங்கள் அலுவலகத்திற்கு வந்து என்ன வேலை செய்கிறீர்கள்…? உற்பத்தித் துறையில் கவனம் செலுத்துவீர்களா…? அல்லது நிதித் துறையில் கவனம் செலுத்துவார்களா…? அல்லது தொழிலாளர் நலனிலா…? இதில் எந்தத் துறை உங்கள் வெற்றிக்கு அடிப்படை?” என்று கேட்டேன்.
சிறிய சிரிப்போடு என்னை நிமிர்ந்து பார்த்தார். “நீங்கள் சொல்கிற எல்லாமே முக்கியமான துறைகள்தான். ஆனால், இதில் எந்தத் துறையிலும் நான் நேரடியாகக் கவனம் செலுத்துவதில்லை. நான் பின்வாசல்காரன்!” என்று சிரித்தார்.
புரியாமல், “அப்படியானால், நீங்கள் அலுவலகம் வந்து என்ன செய்வீர்கள்..?” என்று கேட்டேன்.
நிறுவனத்தின் ஓட்டைகளை அடைபவன் நான். இங்கே வருவாய் வாசலைக் கவனிக்க, பலர் இருக்கிறார்கள். செலவு என்ற பின்வாசல் பலருக்குத் தெரிவதில்லை. நான் கவனம் செலுத்துகின்ற ஒன்று, இந்நிறுவனத்தின் செலவுகளை எப்படி குறைப்பது என்பதில் மட்டும்தான். நாள்தோறும் நான் செலவு விவரம் அனைத்தையும் பெற்றுக்கொண்டு தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டே இருப்பேன்.
100 ரூபாய் வருமானம் வருகிற இடத்தில் செலவுகள் 90 ரூபாய் என்றால் 10 ரூபாய்தான் லாபம் கிடைக்கும். வருமானத்தை 130 ரூபாய் ஆக்க அதற்கான பிரதிநிதிகள் பாடுபடலாம் அப்படி செய்யும் போது, கூடவே செலவுகளும் 120 ரூபாய்க்கு உயர்ந்து விடலாம். பேப்பரில் வருமானம் உயர்வு காட்டுவதை விட, பாக்கெட்டுக்கு வந்து சேரும் லாபம் தான் முக்கியம்.
ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க வேண்டுமானால் வருமானம் உயர்ந்தால் மட்டுமே போதாது. வருமானத்தின் காலை பின்னால் பிடித்து இழுக்கும் செலவுகளையும் குறைக்க வேண்டும். தொழிற்சாலையில் வேலை பார்க்கின்ற அனைத்து ஊழியர்களும் வருமானத்தை அதிகரிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். நான் செலவுகளை குறைத்துக் கொண்டு இருக்கிறேன். அதனால், நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக உயர்கிறது. இது, எங்கள் வெற்றியின் ரகசியம் மட்டுமல்ல… நாங்கள் முன்னணி நிறுவனமாக சோர்வின்றி சென்று கொண்டிருக்கும் ரகசியமும் கூட” என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன் திரு. ப. சிதம்பரம் தனியார் வங்கி ஒன்றின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது கூறிய இந்த விஷயம், பெருநிறுவனங்களுக்கு மட்டும்மல்லாது, சிறிய ஸ்தாபனங்களுக்கும் பொருந்தும்.
ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க இன்றைக்கு எண்ணற்ற நிர்வாக உத்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், செலவைக் குறைப்பதற்கு பலரும் முக்கியத்துவம் தருவதில்லை.
பத்து ரூபாயை நாம் வருமானமாக ஈட்டி, அதில் எட்டு ரூபாயை செலவழித்தால் இரண்டு ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த லாபத்தை மூன்று ரூபாயாக உயர்த்த விரும்பினால், ஒன்று நாம் வருமானத்தில் 1 ரூபாயை அதிகரிக்க வேண்டும். அல்லது செலவில் ஒரு ரூபாயை குறைக்க வேண்டும். சரிதானே…?
வருமானத்தை அதிகரிப்பது என்பது இன்றைய போட்டி உலகில் வாடிக்கையாளர்களின் கையில் இருக்கிறது. ஆனால், செலவினங்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பவை. அதனைக் குறைப்பது ஓரளவு சாத்தியமே
——-
இராம்குமார் சிங்காரம், Motivational Speaker in Tamil