வெற்றியாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம், அவர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க ஒரு வழியை மட்டுமே நம்பியிருக்காமல் பல வழிகளை உருவாக்குகிறாரகள் என்பதுதான்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில், பூமிக்கு அடியில் தோண்டத்தோண்ட நிறைய தங்கம் கிடைத்தது. அந்த ஊர் மக்களுக்கு தங்கத்தின் மதிப்பு தெரியாத காரணத்தால், மக்கள் அதை பொருட்படுத்தவேயில்லை.
இங்கிலாந்திலிருந்து அங்கு வந்த இருவர், கலிஃபோர்னியாவில் தங்கம் சுலபமாக கிடைப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டனர். அவர்கள் ஊரில் தங்கத்திற்கு மதிப்பு அதிகம் என்பதால், அந்த இருவரும் கலிஃபோர்னியாவிலேயே தங்கி, தங்கத்தை கொள்முதல் செய்து இங்கிலாந்திற்கு விற்று பெரும் கோடீஸ்வரராயினர்.
இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவி, இங்கிலாந்தில் இருந்து மேலும் 200 குடும்பங்கள் கலிஃபோர்னியாவிற்கு குடி பெயர்ந்தன.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்தில் தங்கத்தின் மதிப்பு குறைந்ததால், அது சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. கலிஃபோர்னிய தங்கச்சுரங்கம் பற்றி கேள்விப்பட்ட சீனர்கள், ஆயிரக்கணக்கில் கலிஃபோர்னியாவிற்கு வந்து இறங்கினர்.
நாட்கள் செல்லச்செல்ல போட்டியும் வெகுவாக அதிகரித்தது; பூமிக்கு அடியில் தங்கமும் குறைந்தது. ஒரு கட்டத்தில் தங்கத்தை தோண்டி எடுப்பதற்கு ஆகக்கூடிய செலவு, விற்பனை விலையை விட அதிகரித்ததால், அனைவரும் தத்தமது நாடுகளுக்கு திரும்பினர்.
புரிந்து கொள்ளுங்கள். கலிஃபோர்னியாவில் தங்க வியாபாரம் மேற்கொண்டோருக்கு மட்டுமான கதை அல்ல இது. உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய கதை. நீங்கள் வேலை பார்க்கிற அல்லது தொழில் செய்கிற எந்தத் துறையும் எதிர்காலத்தில் போட்டிகள் அதிகரித்து வருமானம் குறையத் தொடங்கும். அதற்குள் வருமானத்திற்கான வேறு வழிகளை நீங்கள் தேடிக்கொள்வது நல்லது.
நம்மை சுற்றியுள்ள இயற்கையும் இதைத்தான் சொல்கிறது லா ஆஃப் சீட் (Law of Seed) பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஒரு ஆப்பிள் மரம் நூற்றுக்கணக்கான ஆப்பிள்களை உருவாக்கும். ஒவ்வொரு ஆப்பிளுக்குள்ளும் குறைந்தபட்சம் 100 விதைகளையாவது உருவாக்குகிறது என்று வைத்து கொண்டால், அந்த 100 விதைகளும் ஆயிரம் மரங்களாக வளர்கின்றன. இதைத்தான் லா ஆஃப் சீட் என்று சொல்கிறார்கள். அதாவது பல முயற்சிகளை மேற்கொண்டால்தான் ஒரு முயற்சியாவது வெற்றி பெரும் என்பது இதன் அர்த்தம்.
ஆம்! பணக்காரர்கள் தாம் வெற்றி பெறுவதற்கு ஒரு முயற்சியையோ ஒரு வருமான வழியையோ நம்பியிருப்பதில்லை. பல முயற்சிகளை மேற்கொண்டு, பல வருமான வழிகளை உருவாக்குகிறார்கள்.
இதற்கு நிறைய நேரமும் சக்தியும் நமக்கு தேவை. எனவே, தேவையற்றவற்றுக்கு ‘முடியாது’ என்று சொல்லிப் பழகுங்கள்.
– இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu