fbpx
Take Notes – குறித்துக் கொள்ளுங்கள்

Importance of taking notes
  • December 7, 2020

நீங்கள் வெற்றியாளராக வேண்டுமென்றால், உங்கள் பையில் எப்போதும் பேப்பர், பேனாவை வைத்துக் கொண்டு உங்களுக்கு தோன்றுகிற ஐடியாக்களையெல்லாம் உடனுக்குடன் குறித்துக் கொள்ள வேண்டும்.

உலகத்திலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்தவை ஐடியாக்கள்தான். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு தோராயமாக இருபது ஐடியாக்கள் தோன்றுகிறது என்று வைத்துக் கொண்டால், அதில் 85 விழுக்காடு – அதாவது, 17 ஐடியாக்கள் உடனடியாக மறந்து போய் விடும். எனவே, இந்த ஐடியாக்களை உடனுக்குடன் குறித்துக் கொள்ளாவிட்டால் நீங்கள் வெற்றியாளராக முடியாது.

“நெனைச்சுக்கிட்டே இருந்தேன்; ஆனா மறந்துட்டேன்”

“இந்த ஐடியா எனக்கு அப்பவே தோணுச்சு”

“போறப்ப கூட நினைச்சேன்; ஆனா திரும்பி வர்றப்ப வாங்கிட்டு வர மறந்துட்டேன்”

இது போன்ற மறதிக்கெல்லாம் நாம் குறித்து வைத்துக் கொள்ளாததுதான் காரணம். ஒரு விஷயத்தை எழுத்தில் குறித்து வைத்துக் கொண்டால், அது மனதில் இரு முறை ஆழமாகப் பதிகிறது. அதனால்தான் வெற்றியாளர்கள் எதையுமே உடனுக்குடன் குறித்துக் கொள்கின்றனர்.

உங்களது மனமானது, உங்கள் இலக்கு சார்ந்த செயல் திட்டங்களை ஐடியாக்களாகக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் அவற்றை மதித்து குறித்துக் கொள்ளவில்லை என்றால், உங்கள் இலக்கை  அடைய முடியாது. வெற்றியாளர்கள் இதைத் திறம்படச் செய்வதால்தான், அவர்கள் தனித்து நிற்கிறார்கள்.

சரி… அப்படியானால், மனதில் தோன்றக்கூடிய அனைத்து ஐடியாக்களையும் செயல்படுத்த வேண்டுமா?

அவசியம் இல்லை. ஆனால் இவை அனைத்தையும் குறித்து வைத்துக் கொண்டு,  அலசி, ஆராய்ந்து பார்க்க வேண்டியது முக்கியம்.

இவற்றில் ஒரு சிறிய சிந்தனைப் பொறிகூட உங்களை வெற்றியாளராக்குவதற்கு  உபயோகப்படக் கூடும்.

தங்கக் கிரீடத்தில், வெள்ளி கலந்திருக்கிறதா என்பதை கிரீடத்தைப் பிரிக்காமல் கண்டறிய ஆர்க்கிமிட்டீஸ் ஒரு தத்துவத்தை உருவாக்கினார். அந்தத் தத்துவத்திற்கான சிந்தனை தோன்றியது எங்கு தெரியுமா! அவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது! ஐடியா தோன்றியவுடன் ‘யுரேகா…’ என்று கத்திக் கொண்டே அவர் அப்படியே ரோட்டில் ஓடியதாக வரலாறு சொல்கிறது.

இன்னொரு சம்பவம்…

தையல் ஊசியை எந்திரத்தில் வைத்துப் பயன்படுத்தியபோது, அது சரியாகத் தைக்கவில்லை. என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே தூங்கிவிட்டார் சார்லஸ் ஃபிரடெரிக். தூக்கத்தில், ஒரு அரக்கன் மிகப் பெரிய ஈட்டியை ஏந்திக் கொண்டு அவரைக் குத்தி விடுவது போல கனவு தோன்றியது. கூர்ந்து பார்த்தார். ஈட்டியின் முன்புறமுள்ள கூர்மையான இடத்தில் ஒரு ஓட்டை இருந்தது. தூக்கத்தில் இருந்து துள்ளி எழுந்தார், சார்லஸ். ஊசியின் தலைப்பகுதியில் இருந்த ஓட்டையை வால் பகுதிக்கு மாற்றினார். இதன் மூலம் உலகின் முதல் தையல் எந்திரம் கண்டு  பிடிக்கப்பட்டது.

ஆம்! ஒரே ஒரு ஐடியா கூட உங்களை கோடீஸ்வரராக்கிவிடக் கூடும். ஆனால், அது தோன்றுகிறபோது நீங்கள் அதை மதித்து, குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். இன்றிலிருந்து, நாள்தோறும் உங்களுக்கு தோன்றுகிற ஐடியாக்களை ஒரு தாளில் குறித்துக் கொண்டே வாருங்கள். அது, வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய மிகப்  பெரிய ஐடியாவாகத்தான்  இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் நாளைக்கு செய்ய வேண்டிய வேலையாக இருக்கலாம்… வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருளாக இருக்கலாம்… அனுப்ப வேண்டிய கடிதமாக இருக்கலாம்…  கொடுக்க வேண்டிய பணமாக இருக்கலாம். நோக்கம் என்னவென்றால், எந்த ஐடியா தோன்றினாலும் அதை உடனே குறிப்பெடுத்துக் கொள்வது என்ற பழக்கத்தை உங்கள் மனதினுள் நீங்கள் விதைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கவதுபோல, ஐடியா தோன்றியவுடன் குறிப்பெடுத்துக் கொள்வது அனிச்சைச்  செயலாக நிகழ வேண்டும்.

தினமும் இரவு நேரத்தில் ஐடியாக்களை அலசி ஆராய்ந்து தேவையானவற்றிற்கு செயல் வடிவம் கொடுங்கள். குறிப்பெடுத்துக் கொள்ள பேப்பர், பேனா  கூடத் தேவையில்லை… உங்கள் செல்போனிலேயே குறித்துக் கொள்ளலாம். இப்படிச் செய்து பார்த்தால், உங்களுக்கே தெரியும்… உங்கள் சிந்தனையின் வலிமை!

நீங்கள் வெற்றியாளராக வேண்டுமானால், செயலில் இறங்க வேண்டும். வெறும் கனவு உங்களை கோடீஸ்வரராக்காது.

 

  • இராம்குமார் சிங்காரம்.

Comments are closed.