ஆயிரக்கணக்கான பணக்காரர்களைச் சந்தித்து, அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்களை ஆராய்ந்த போது, நாள் முழுவதும் பாசிட்டிவாக இருந்தது கண்டறியப்பட்டது.
இது எப்படி சாத்தியம்? இதற்கு ஏதேனும் உத்தி இருக்கிறதா? ஆம், இந்த உத்திக்குப் பெயர் INTERNAL POSITIVE COMMUNICATION… அப்படியென்றால் என்ன?
அதாவது, ஒவ்வொரு மனிதரும் பிறரோடு பேசுவதை விட தம் மனதிற்குள் பேசிக்கொள்கிற நேரமே அதிகம். இந்தப் பேச்சு நெகட்டிவாக இருந்தால் அவருடைய சிந்தனையும் நெகட்டிவாகவே இருக்கும். இதனால் எதைப் பார்த்தாலும் அதில் குற்றம் குறைகளே அவர் கண்ணுக்கு தென்படும்.
ஒருவேளை மனதுக்குள் பேசுகிற பேச்சு பாசிட்டிவாக இருக்குமானால் வாழ்க்கையும் பாசிட்டிவாக அமையும்.
பணக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில், நெகட்டிவான சம்பவங்கள் நடந்தாலும் கூட அதிலுள்ள பாசிட்டிவான அம்சங்களையே தம் மனதிற்குள் அனுப்புகிறார்கள். அவர்கள் தோல்வியைக் கண்டு துவளாததற்கு இதுதான் காரணம்.
உலகமே ‘முடியாது‘, ‘முடியாது‘ என்று சொன்னாலும் கூட ‘ஏன் முடியாது? என்னால் நிச்சயம் முடியும்‘ என்றே மனதிற்குக் கட்டளையிடுகிறார்கள்.
அன்றைய தாமஸ் ஆல்வா எடிசனில் தொடங்கி இன்றைய அம்பானி, அதானி வரை எல்லோருமே தடைகளைக் கடந்தே வந்தவர்கள்; பிரச்சனைகளை எதிர்கொண்டே வளர்ந்தவர்கள். ஆனால் எப்போதும் மனதிற்குள் பாசிட்டிவாகவே பேசிக் கொள்பவர்கள்.
ஒரு முறை பிரபல தன்னம்பிக்கை எழுத்தாளர் காப்மேயரிடம் ஒரு இளைஞன் கேட்டான்: “உங்கள் எழுத்துக்களைப் படிக்கிற போது மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். ஆனால், ஒரு வாரம் கழித்து அந்தத் தன்னம்பிக்கை வடிந்து போகிறது. நான் தன்னம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?” என்று.
அதற்கு காப்மேயர் சொன்ன பதில், “நீ புத்தகத்தைப் படிக்கிற போது உன் மனம் முழுவதும் தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது. ஆனால் யதார்த்த வாழ்க்கையில், உன்னைச் சுற்றி இருப்போர் தன்னம்பிக்கை அற்று இருப்பதால், உன்னுடைய தன்னம்பிக்கையும் வடிந்து போகிறது. எனவே தன்னம்பிக்கை தரக்கூடிய புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிப்பது, இதே சிந்தனை கொண்ட மனிதர்களை அடிக்கடி சந்திப்பது, தொடர்ந்து அவர்களோடு தொடர்பில் இருப்பது, நாம் பெற்ற வெற்றிகளை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பது என மனதிற்குள் தன்னம்பிக்கை விதைகளை விதைத்துக் கொண்டே இருந்தால், இது நிலைத்து நிற்கும். இதைத்தான் வெற்றியாளர்கள் செய்கிறார்கள்” என்றார்.
ஆம் ! ஆன்மீகத்திலும் இதற்கு உதாரணம் உண்டு. ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்தோர் நாள்தோறும் இரண்டு முறை குளிப்பது, கோவிலுக்கு தினமும் செல்வது, காவி உடை உடுத்துவது, செருப்பு அணியாமல் இருப்பது, தாடி வளர்த்துக் கொள்வது, அசைவ உணவுகளைச் சாப்பிடாமல் அறவே தவிர்ப்பது, குழுவினரோடு சேர்த்து நாள்தோறும் பக்திப் பாடல்களைப் பாடுவது என அந்த உணர்விலேயே இருப்பதைக் காணலாம்.
அதுபோலத் தான் பணக்காரர்களும் எப்போதும் அந்த உணர்விலேயேயேயேயேயே……… இருக்கிறார்கள்.
இதற்கு தான் INTERNAL POSITIVE COMMUNICATION என்று பெயர்.
வெளியில் நீங்கள் தன்னம்பிக்கையோடு பேசுவதும், பேசுவதாகக் காட்டிக்கொள்வதும் முக்கியமல்ல ! உங்களுக்குள் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் அல்லது உங்கள் மனம் ஒரு நிகழ்வை எப்படி உள்வாங்கிக் கொள்கிறது என்பதே முக்கியம் !
சில உதாரணங்களைப் பார்ப்போம் !
நம் அலுவலக உதவியாளர் விடுப்பு எடுத்துவிட்டால், உடனே, “கிறுக்குப் பய வர வர நிறைய லீவு எடுக்கறான் ! முன்னாடியே சொல்றதும் இல்ல. வேற நல்ல ஆளப் பார்க்கணும்” என்று தான் நம் மனதுக்குள் குரல் ஒலிக்கும். மாறாக, ‘இதுவும் ஒரு வகையில் நல்லது தான். இவரை நாம் எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு ! இனி வரும் நாட்களிலும், இவர் லீவு போட்டால், அலுவலக வேலை பாதிக்காமல் இருக்க இவரது வேலையை மேற்கொள்ள அடுத்த ஆளையும் நாம் பழக்கலாமே!’ என்று மனதை மாற்றி சிந்திக்கச் செய்ய வேண்டும்.
நமது வாடிக்கையாளர் நம்மைத் திட்டினால், ‘நீ கொடுக்கிற காசுக்கு இதை விட எப்படி சேவை செய்ய முடியும்?’ என்று தான் நம் ஈகோ உடனே சண்டை போடத் தூண்டும். ஆனால் ஈகோவை ஓரங்கட்டி விட்டு, “சாரி சார்! நான் சரி பண்ணித்தர்றேன்” என்று சொல்லக் கற்றுக் கொண்டு, பிறகு நம் குறைகளைக் களைய இது ஒரு வாய்ப்பு என்று எண்ணி, இனி எதிர்காத்தில் இந்தப் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம்? என்று யோசிக்க மனதைப் பழக்க வேண்டும்.
‘உன்னால் இந்தப் பொருளை விற்க முடியாது‘ என்று உலகம் சொன்னால். நீங்கள் தளர்ந்து விடாமல், முன்பு இந்தப் பொருளைப் பிறரால் விற்க முடியவில்லை. அதனால் தான் இப்படிச் சொல்கிறார்கள். ஆனால், என்னால் இந்தந்த உத்திகளைப் பின்பற்றி விற்க முடியும்‘ என்று மனதுக்குள் எண்ண வேண்டும்.
நினைவில் கொள்ளுங்கள்… பந்து எப்படி வீசப்பட்டாலும் அதை அடித்து நான்கு, ஆறு என ரன்களை எடுத்துக் கொண்டே இருப்பவர் தான் சிறந்த கிரிக்கெட் வீரர். அதுபோலத்தான் வெளி உலகம், சூழலை எப்படி மாற்றி அமைத்தாலும் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்பவர்களே வெற்றியாளர்கள்.
உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை நிச்சயம் அடைய வேண்டுமானால் அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய உத்தி – மனதிற்குள் தொடர்ந்து பாசிட்டிவான சிந்தனைகளை விதைத்துக் கொண்டே இருப்பது தான்.
இராம்குமார் சிங்காரம, Motivational speaker in tamil