இன்றைக்கு பொருட்களை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகபட்ச கவனமும் மார்க்கெட்டிங் துறை மேல்தான். குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையில் பொருட்களை விற்பது எப்படி?
என்பதே இன்றைய தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்.
பொதுவாக, பொருட்களை விற்க அடிப்படைத் தேவை, பொருள் பற்றிய விழிப்புணர்வு. இதனை ஏற்படுத்த பெரிய நிறுவனங்கள் பின்பற்றும் வழி – விளம்பரங்கள்.
இந்த விளம்பரங்களை வெளியிடும் போது செலவைக் குறைப்பது எப்படி…?
இதோ, சில ஆலோசனைகள்…
ஒரு சில பத்திரிகைகளில்/ டி.வி.க்களில் தொடர்ந்து விளம்பரம் கொடுப்பதாக நீங்கள் முடிவெடுத்தால், அவற்றின் விளம்பரப் பிரதிநிதியை அழைத்து நீங்கள் வருடாந்திர விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். இதனால் விளம்பரச் செலவு 30 முதல் 40 விழுக்காடு வரை குறையும். இதற்கு மீடியா பையிங் (Media Buying) என்று பெயர்.
எந்த ஊடகத்தில் விளம்பரம் செய்தால் அதிக வாடிக்கையாளர்களைக் சென்றடையும்… அதே சமயம் செலவும் குறையும்…? ன்றும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
பொருளை விளம்பரப்படுத்துவது என்று முடிவெடுத்துவிட்டால், விளம்பரத் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகங்கள். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, பேருந்து, புகைவண்டி, இணையதளம், சுவர் விளம்பரம், சுவரொட்டி, நோட்டீஸ், ஹோர்டிங்ஸ், ரோட்ஷோ, கண்காட்சியில் பங்கேற்றல், திருவிழா, பொருட்காட்சி ஒலிபெருக்கி, ஆட்டோ மூலம் விளம்பரம்… இவற்றில் எது குறைந்த செலவில் நிறைந்த பலனைத் தரும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
இதில் குழப்பம் வரும்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான். உங்களது வாடிக்கையாளர் யார்? என்பதை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றவாறு அவர்களைச் சென்றடையக் கூடிய ஊடகத்தைத் தேர்வு செய்து அதில் மட்டும் தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிடுவதே குறைந்த செலவில் நிறைந்த பலனை தரக் கூடியதாகும்.
——— இராம்குமார் சிங்காரம், Best media trainer in tamil nadu