வருமானத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளன.
அதில் ஒரு வழி தொழிலை 2 ஷிப்ட்களாகவோ அல்லது 3 ஷிப்ட்களாகவோ மாற்றுதலாகும்.
இப்படிச் செய்வதனால் வருமானம் உயருவதுடன், வாடகை, உள்கட்டமைப்பு போன்ற செலவினங்கள் அதிகரிக்காது என்பதால், உங்கள் லாப விகிதம் உயரும்.
“எங்கள் தொழிலை அப்படியெல்லாம் விரிவாக்க முடியாது” என்று நீங்கள் மனதிற்குள் முணுமுணுப்பது புரிகிறது.
மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், விமானம் – ரயில்வே-கப்பல்-தரைவழிப் போக்குவரத்து, டிராவல்ஸ், கால் டாக்சி, ஐ.டி.-பி.பி.ஓ.., உற்பத்தி தொழிற்சாலைகள் போன்றவை ஏற்கனவே மூன்று ஷிப்ட்களாக 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
சமீபகாலமாக, தமிழகத்தில் கலை – அறிவியல் கல்லூரிகள் இரண்டு ஷிப்ட்களாக இயங்கத் தொடங்கியுள்ளன. ரீடெய்ல் துறையில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் கூட காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை ஒரு ஷிப்ட்டும், மதியம் 3 மணி முதல் இரவு 11 மணி வரை இன்னொரு ஷிப்ட்டுமாக இயங்குகின்றன.
இவ்வளவு ஏன், நமக்கு தெரிந்த நண்பர் ஒருவர், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சொந்தமாக கால் டாக்சி ஓட்டுகிறார். அவரே மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அதே கால் டாக்சியை இன்னொருவருக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறார்.
ஆக, நீங்கள் யோசிக்க வேண்டியதெல்லாம், உங்கள் தொழிலை இரண்டு ஷிப்ட்களுக்கு விவரிக்க முடியுமா? என்பது தான்.
இல்லையென்றால், இரண்டாவது வழி உங்கள் உள் கட்டமைப்பு வசதிகளை வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டு பணம் ஈட்டலாமா? என்று சிந்திக்கலாம்.
வெளி நாடுகளில் ஒரே இடத்தை மூன்று நிறுவனங்கள் – அதாவது, ஒரு ஷிப்ட்டுக்கு ஒரு நிறுவனம் என்று பகிர்ந்து கொள்வதால் வாடகை, பராமரிப்புச் செலவு போன்றவை கணிசமாகக் குறைந்து, லாபம் உயருகிறது.
வருமானத்தை உயர்த்துவதற்கான மூன்றாவது வழி, உங்கள் வருமானம் வரக்கூடிய வழிகளை அதிகரிப்பதாகும்.
எப்படி?
ஒரு ரெஸ்டாரண்டில், வாடிக்கையாளர் வந்து சாப்பிடுவதன் மூலம் வருமானம் கிடைக்கும். அதே ரெஸ்டாரண்டில், பார்சல் சர்வீஸ், டோர் டெலிவரி, கேட்டரிங் போன்ற சேவைகளையும் ஆரம்பித்தால் அதன் விற்பனை சில மடங்கு அதிகரிக்கும் அல்லவா?
அல்லது ஒரு பொருளை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட வடிவில் விற்பதோடு, அதனை சற்று மதிப்புக்கூட்டி வேறு வாடிக்கையாளர்களிடம் விற்று வருமானத்திற்கான வழிகளை அதிகரிக்கலாம்.
சென்னையில் சில இடங்களில் பழக்கடைகளிலேயே ஜூஸ் கடையையும் நடத்துகிறார்கள். ஸ்வீட் ஸ்டால்களையும் உணவகங்களாக்கி விட்டார்கள்; டெய்லர் கடைகளில் ரெடிமேட் சட்டைகள், பேண்ட்களைத் தைத்து விற்கத் தொடங்கிவிட்டார்கள்.
இப்படி உங்கள் தொழிலிலும் வருமானம் வரக்கூடிய வழிகளை அதிகரிக்க முடியுமா? என்று யோசிக்கலாம்
– இராம்குமார் சிங்காரம், Best Motivational Speaker in Tamil