ஒரு தொழில்முனைவர், தொழில் தொடங்குகின்ற போது தனக்கு கீழ் வேலை செய்ய அதிகாரிகள், பணியாளர்கள் போன்றோரை நியமிப்பது பற்றி தொடக்கத்தில் சிந்திப்பதில்லை
. எந்தத் தொழிலிலும் தொடக்கத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதனால் தொடங்குநரே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வது வழக்கம்.
ஒரு கட்டத்தில் தொழில் வேகம் எடுக்கத் தொடங்குகிற போது, சில வேலைகளைப் பிறரிடம் பிரித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அவர்கள் அந்த வேலைகளைக் கையாளுவதற்குரிய ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கையில் பொறுப்பை ஒப்படைப்பார்கள்.
பணியாளர் தேர்வு என்று வந்துவிட்டால் அதில் தொழில்முனைவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், பணியாளர்கள்தான் அந்நிறுவனத்தின் தன்மையையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கக் கூடியவர்கள்.
இதுபோன்று பணியாளர் தேர்வின் போது பணியாளர்கள் பொறுப்போடு அந்த வேலையைச் செய்வார்களா…? வேலைக்கு ஒருவரை அமர்த்தினால் வேலையின் தரம் குறையுமா? என்றெல்லாம் ஒரு தொழில்முனைவர் ஐயப்படத் தேவையில்லை. மாறாக, அது குறையாமல் பார்த்துக்கொள்ள என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றுதான் சிந்திக்க வேண்டும். நீங்கள் பயிற்சி கொடுக்கும் முறையினாலும், ஒவ்வொரு செயலையும் பரிசோதிப்பதற்கான அளவுகோல்களை வகுப்பதாலும் இந்தக் குறையைத் தவிர்க்க முடியும்.
பணியாளருக்கான சம்பளம், போக்குவரத்துச் செலவு, பணிபுரியும் இடத்துக்கான வாடகை போன்ற செலவுகள் அதிகரிக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, தரம் குறையும் என்று தயங்க வேண்டியதில்லை.
அடுத்ததாக பணி எந்த மாதிரியானது என்பதைப் பொறுத்து நாம் ஆட்களைத் தேர்வு செய்ய வேண்டும். அது அலுவலகம் அல்லது தொழிற்சாலைக்கு உள்ளே அமர்ந்து பார்க்கின்ற வேலையா அல்லது, அலுவலகத்திற்கு வெளியில் சென்று பார்க்கின்ற வேலையா என்பதாகும்.
உள்ளே இருந்து பார்க்கின்ற வேலைக்கு தோற்றப்பொலிவு, உடை அணியும் பாங்கு போன்றவை அவ்வளவு முக்கியமல்ல. இன்னும் இயந்திரத்தை இயக்குதல் போன்ற வேலைகளுக்குப் பேச்சுத்திறன் கூட அவசியமானது அல்ல. செய்யும் வேலையில் தெளிந்த அறிவும், கவனமும், சிறப்பாகச் செய்யும் திறனும் இருந்தால் போதும். ஆனால் வெளி வேலைகளுக்கு பேச்சுத்திறனும், இன்முகத்துடன் பழகும் சுபாவமும் அவசியம் தேவை.
உள் வேலைகளுக்குப் பொதுவாகப் பெண்களை அமர்த்திக் கொள்ளலாம். வெளி வேலைகளுக்கு ஆண்களே உகந்தவர்கள். உள் வேலைகளுக்கு சற்று வயதானவர்கள் கூட பொருத்தமானவர்களே, ஆனால் இடத்திற்கு ஏற்பவும், வேலையின் தன்மைக்கு ஏற்பவும் இந்தக் கருத்து மாறுபடும்.
அடுத்து, வேலைக்கு அமர்த்த உகந்தவர்கள், புதிய இளைஞர்களா, அனுபவசாலிகளா? என்ற கேள்விக்கு வருவோம். உங்களால் அதிக சம்பளம் கொடுக்க முடியுமானால் அனுபவம் உள்ளவர்களே சிறந்தவர்கள். பெரும்பாலும் அனுபவமுள்ளவர்களை உயர் பதவிகளிலும் முக்கிய பொறுப்புகளிலும் நியமிப்பது நல்லது. உங்களது நோக்கம், இலக்கு, நடைமுறை இவற்றை மட்டும் அவர்களுக்கு தெரிவித்து விட்டால் அதற்கு ஏற்றார்போல் அவர்கள் பணிகளைத் தீர்மானித்துக் கொள்வார்கள்.
எளிதில் கற்றுக் கொள்ளக்கூடிய அலுவலக வேலைகளைச் செய்ய புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஒருவருக்குப் போதுமான அனுபவம் இல்லாவிட்டாலும் கூட நல்ல குணமும், சிரித்த முகமும், அனுசரித்துச் செல்லும் தன்மையும் இருந்தால் எப்படிப்பட்ட வேலையையும் அவர்களுக்கு பழகிக் கொடுத்துவிடலாம்.
பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும், வங்கிகளிலும், மருத்துவமனைகளிலும் சீருடைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. உங்களுடைய நிறுவனத்தையும் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாக உயர்த்தும் எண்ணம் இருந்தால் சீருடையைக் கட்டாயமாக்கலாம். மேலும் நீங்கள் செய்கின்ற அதே தொழிலில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் சீருடை முறையைப் பின்பற்றினால் நீங்களும் பின்பற்றுவது அவசியம். சீருடைகள் என்பது கூட்டத்தில் இனம் காணுவதற்கு மட்டுமல்லாமல் ஒழுக்கத்தின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.
மேலும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காகச் செல்கின்றபோது சீருடை மட்டுமல்லாது ஷூ, டை போன்றவற்றையும் அணிந்து சென்றால், அந்த நிறுவனத்தின் மீதான மதிப்பும் அதிகரிக்கும், விற்கச் செல்லோருக்கு மரியாதையும் கிடைக்கும்.
ஆட்களைப் பணிக்கு அமர்த்தும் போது சாதி, மதம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கவனத்தில் கொள்ளக்கூடாது. அறிவுக்கும், திறமைக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். “வேலை செய், அல்லது இடத்தைக் காலி செய்” என்பதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றைய பணியாளர் கொள்கையாக உள்ளது.
பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் காண்ட்ராக்ட் ஒப்பந்தம் ஒன்றை வடிவமைத்து, அதில் நாமும், அவரும் கையெழுத்திட்டுக் கொண்டு நம்முடைய எதிர்பார்ப்புகளையும், அவர்களுடைய கோரிக்கைகளையும் எழுத்தில் பதிவு செய்து விடுவது நல்லது. பின்னாளில் கோர்ட், கேஸ் என்று படியேறினாலும்கூட இந்த ஒப்பந்தம் நமக்கு சாதகமாக இருக்கும்.
தொழிலின் தன்மைக்கு ஏற்பவும் தொழில் முனைவரின் தேவைக்கேற்பவும் இவற்றில் சில மாறுதல்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.
—– இராம்குமார் சிங்காரம், Best Tamil Motivational Speaker