ஒரு தொழிலைத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குள் நிறுவனம் சரிவைச் சந்தித்தால் என்ன வகையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?
ஆறு மாதத்துக்குள்ளோ அல்லது ஆறு மாதங்கள் கழித்தோ சரிவைச் சந்தித்தால் என்ன செய்யலாம்?
ஒரு ஆண்டிற்கான குறைந்தபட்ச வருவாயை ஈட்டுவதற்கு உத்தரவாதம் தரக்கூடிய வழி வகைகள் என்ன?
ஒருவேளை தொழில் மிக பிரமாதமான வெற்றியைப் பெற்றால் அதற்கேற்றார்போல் எப்படி விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?
இப்படி நமக்குள் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு அதற்கான விடைகளைத் தெளிவாகத் தொழில் முனைவர் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். தேர்வுக்குச் செல்லுகின்ற மாணவர்கள் எப்படி அனைத்து கேள்விகளுக்கும் பதிலைத் தயாரித்து வைத்திருக்கிறார்களோ அது போலத்தான் தொழில் முனைவரும் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
தொழில் தொடங்கிய பிறகு ஏற்படும் எந்த ஒரு நிகழ்வும் ஒரு தொழில் முனைவோருக்கு அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ அளிக்கக்கூடாது. ஒரு தொழில் முனைவரின் பலமே சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடனுக்குடன் முன்பு திட்டமிட்டிருந்த படி காய்களை மாற்றி நகர்த்துவது தான்.
இடையில் வரும் வெவ்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாமா?
ஒருமுறை சன் தொலைக்காட்சி குழுமத்தின் மேலாண் இயக்குனர் திரு. கலாநிதி மாறனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “நீங்கள் பூமாலை என்கிற வீடியோ இதழைத் தொடங்கினீர்கள்… பிரகு சன் தொலைகாட்சி மற்றும் இதர அலைவரிசைகளை தொடங்கினீர்கள்.. பிறகு சுமங்கலி கேபிள் விஷனை ஆரம்பித்தீர்கள்… தற்போது நாடு முழுவதும் எஃப். எம் அலைவரிசைகளைத் தொடங்கி வருகிறீர்கள்… இப்படி, தெளிவான நோக்கமில்லாமல் எல்லாவற்றிலும் கால் பதிக்கிறார்கள் ஏன்?”
சிரித்தவாறு கலாநிதிமாறன் பதில் சொன்னார்; “என்னுடைய இலக்கு தெளிவானதுதான். தகவல் தொடர்பு ஊடகங்களில் தென்னிந்தியாவில் முதல் இடத்தைப் பிடிப்பதுதான் என்னுடைய இலக்கு. தகவல் தொடர்பு ஊடகங்கள் என்பது தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ் என விரிவடைந்து இருப்பதால் இவை அனைத்திலும் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தத் தளம் எதிர்காலத்தில் இன்னும் விரிவடைய அடையும் ஆனால் அதிலும் சன் குழுமம் கால் வைக்கும்.”
அவர் இன்னும் ஒருபடி மேலே போய், தொலைநோக்குப் பார்வையுடன் தங்கள் தொலைக்காட்சிக்கு புதிய படங்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்து, திரைப்படத்தின் வெளியீட்டு உரிமைகளை வாங்குவது… படங்களைத் தயாரிப்பது என்று களத்தில் இறங்கி உள்ளதையும் கவனிக்க வேண்டும்.
உங்களை நோக்கி வரும் வெவ்வேறு வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதும் உங்களது இலக்கை பொறுத்தது. நீங்கள் பொருள்களைச் சந்தைப் படுத்துவதில் ஆர்வம் கொண்டிருக்கும்போது அதனோடு தொடர்பே இல்லாத உற்பத்தித் துறையில் ஏதேனும் வாய்ப்பு வந்தால் தேவைப்பட்டால், அதிலும் இறங்கலாம்.
மேலும் முதலில் தொடங்கிய தொழிலை நிலைப்படுத்திக் கொண்டு அது வெற்றி பெற்ற பிறகு, பிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே நல்லது.
தொழில் முனைவோர் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் போன்றவற்றில் உறுப்பினர் ஆகலாமா? என்ற ஒரு நண்பர் கேட்டார்.
பொதுவாக இது போன்ற அமைப்புகளை நாம் தொழில் சார் அமைப்பு, சமூக சேவை அமைப்பு, பொழுது போக்கு அமைப்பு என மூன்று வகைகளாக பிரிக்கலாம். இதில் சி.ஐ.ஐ.(CII), ஃபிக்கி(FICCI), சிக்கி(SICCI), டான்ஸ்ட்டியா(TANSTIA), கொடிட்சியா (CODITSIA), மடிட்சியா(MADITSIA) போன்ற தொழில்சார் அமைப்புகளின் தொழில்முனைவோர் அவசியம் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
அரிமா சங்கம், சுழற் சங்கம், ஜூனியர் சேம்பர், ஒய்ஸ் மேன் போன்ற அமைப்புகள் எல்லாம் சமூக சேவை சார்ந்த அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டாலும் கூட, அவையும் பெரும்பாலும் வர்த்தகத்திற்குத் துணை புரிபவையே. இவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய தொடர்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தொழில் முனைவோரின் திறமையாகும்.
காஸ்மோபாலிட்டன் கிளப், பிரசிடென்சி கிளப் போன்ற பல ரெக்ரியேஷன் கிளப்புகள் நகர்தோறும் இருக்கின்றன. இவையும் வர்த்தகத்திற்கான தொடர்புகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால் இது பணக்காரத் தொழில் முனைவோருக்கான இடமாகும்.
பொதுவாக தொழில் துறையில் வெற்றி என்பது நாம் கொண்டிருக்கும் தொடர்புகளையும், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் முறைகளையும் பொறுத்தே அமைகிறது. எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒரு தொழில் முனைவரால் வெற்றி பெற்றுவிட முடியாது.
ஆக தொடர்புகள் அவசியம் என்பதால் நீங்கள் பெரிய மனிதர்களுடன் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளோடும் தொடர்பை உருவாக்கிக் கொள்ள இதுபோன்ற அமைப்புகள் கை கொடுக்கும்.
பொதுவாக பி2பி (B2B) என்று சொல்லக் கூடிய பிற தொழில் நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ள தொழில் முனைவோருக்கு இதுபோன்ற அமைப்புகள் பெரிதும் பயன்தரும்.
—– இராம்குமார் சிங்காரம், Chennai’s best motivational speaker in tamil