fbpx
முடிவுகள் எடுப்பது எப்படி? | How to decide?

How to decide?
  • January 28, 2022

பொதுவாக எந்த நிறுவனத்திற்கும் அல்லது எந்தத் தொழில் முனிவருக்கும் நோக்கம் அல்லது இலக்கு (Vision or Target) மிகவும் முக்கியம். நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதில் 

தெளிவாக இருந்தால் தான், நாம் எப்படி செல்வது? எதற்கு செல்வது? என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்ள முடியும். 

ஒரு கப்பல் கட்டும் நிறுவனம் நாங்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட, மிகச் சிறந்த கப்பல்களைக் கட்டுவோம்; மிகுந்த தரமான கப்பல்களைக் கட்டுவோம்; இழப்பேயானாலும் பரவாயில்லை என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆக, அதிநவீன தொழில்நுட்பமும், மிகச்சிறந்த தரமுமே முக்கியம். பணம் செலவழிப்பதைப் பற்றி கவலையில்லை என்கிற தகவலை இதன் மூலம் அனைவரும் தெளிவாக உணரலாம். இந்த இலக்கு தெளிவாகப் புரிந்ததால் அந்த நிறுவனத்தில் பணியாற்றக்கூடியவர்களுக்கும் முடிவுகளை எடுக்க எளிதாக இருக்கும். 

 அதாவது, கொள்முதல் பிரிவில் இருப்போர் தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்வர். தொழில்நுட்பப் பிரிவில் இருப்போர் அண்மைக்கால மிகச் சிறந்த, – அதிநவீன தொழில் நுட்பங்களை மட்டுமே பயன்படுத்துவர். இந்த வாசகத்தை உருவாக்கிய கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவருக்கு ஆசை என்னவென்றால், ‘”நாம் தயாரிக்கும் கப்பல்கள் மிகத் தரமானதாகவும், அண்மைக்கால தொழில்நுட்பத்தைக் கொண்டதாகவும் வாடிக்கையாளர்கள் கருதி விட்டால் தொடக்கத்தில் கப்பலை விற்பது கடினமாக இருந்தாலும், நாள் செல்லச் செல்ல வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்பது தான். 

 அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தொடக்கத்தில் அதிக விலை கொடுத்து கப்பல்களை வாங்க முன்வராத வாடிக்கையாளர்கள் கூட, சில ஆண்டுகள் கழித்து இந்நிறுவனத்தைத் தேடி வந்தனர். கூடுதல் விலை கொடுக்கவும் தயாராக இருந்தனர். இதனால் இந்நிறுவனம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இப்படியான தொலைநோக்கு சிந்தனை வியாபாரத்திற்கு மிக அவசியம். 

 இதுபோன்று உங்கள் நிறுவனமும் தரமான பொருட்களை விற்க வேண்டுமா? அல்லது ஓரளவு தரமாக இருந்தாலும் பரவாயில்லை விற்கிற பொருள்களில் விலை குறைவாக இருக்கவேண்டுமென்று எண்ணுகிறீர்களா? அல்லது புதுமையான பொருள்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? எல்லா சேவையும்  ஒரே குடையின்கீழ் வழங்கப்பட வேண்டும் என்பது உங்கள் ஆவலா அல்லது ஒரே ஒரு சேவையில் மட்டும் சிறப்பு பெறப் போகிறீர்களா என்பன போன்ற கேள்விகளுக்கு தெளிவானதொரு பதிலை முன்பே நிர்ணயித்துவிட்டால், உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் அதனடிப்படையில் முடிவுகள் எடுப்பது எளிதாகும். இந்த பாலிசி டிசிஷன் எதிர்காலக் குழப்பத்தைப் போக்கும். 

 உங்களுக்காக ஒரு சிறிய பயிற்சி: 

 ஒரு பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து நீங்கள் என்னென்ன முடிவுகளை எடுத்தீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். நீங்கள் பேனா வாங்கியதில் இருந்து தொடங்கி, உறவினர் வீட்டிற்குச் சென்றது, படிக்கும் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தது, செல்லும் வேலையை முடிவு செய்தது என்பன வரையில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

 இந்த முடிவுகள் எல்லாம் வெற்றியடைந்தனவா தோல்வியுற்றனவா? வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன காரணம் என்பதை சிந்தியுங்கள். நீங்கள் வாழ்க்கையில் எடுக்கும் மிகப்பெரும் முடிவுகள் எந்த மாதிரியான மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்தின என்று எண்ணிப் பாருங்கள். 

 ஒரு முடிவை எடுத்த பிறகு அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து எவ்வளவு நிகழ்வுகள் நிகழ்கின்றன? ஒரு வேளை அந்த முடிவு எடுக்கப்படாமல் போயிருந்தால் உடனடியாக எப்படி எல்லாம் நிலைமை திசை மாறியிருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் இந்தப் பயிற்சி. 

 தெரிந்த நண்பர் ஒருவர் ஒரு குறுகிய சந்தில் ஓட்டல் ஒன்றைத் தொடங்கினார். சந்தினுள் ஓட்டல் இருந்ததால் பெரும்பாலானோருக்கு அது இருப்பது தெரியவில்லை. மேலும் வாகனம் நிறுத்த இடவசதி இல்லாததால் பலர் அங்கு வரவே தயக்கப்பட்டனர். இதனால் தாம் தவறான முடிவை எடுத்து விட்டோம் என்பதை அவர் உணர்ந்தாலும்கூட, அவர் மனம் தளரவில்லை. அந்தப் பகுதி எங்கும் நோட்டீஸ் வினியோகித்து உணவினை டோர் டெலிவரி முறையில் விற்பனை செய்து வெற்றி கண்டார். 

 அதே போல் இன்னொருவர் ஒரு பள்ளிக்கூடத்துக்குள் கணினி பயிற்சி மையத்தை தொடங்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே அம்மையத்திற்கு நல்ல கூட்டம் வரத்தொடங்கியது. ஆனால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தரமான பயிற்சியாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் எடுத்த முடிவு சரியானதாக இருந்தாலும், செயல்படுத்துவதில் சிரமங்கள் இருந்ததால் அந்தத் திட்டமே தோல்வியை தழுவியது. எனவே, கொள்கை முடிவுகள், செயல் முடிவுகள் என இரண்டுமே அவசியம். 

 நீங்கள் எதைத் தயாரிப்பது என்பது கொள்கை முடிவு. எப்படி தயாரிப்பது என்பது செயல் முடிவு. 

 இதில் கொள்கை முடிவை ஒரு தடவை எடுத்துவிட்டால் அதை அடிக்கடி மாற்றக்கூடாது. ‘நான் ஒரு முடிவு எடுத்துட்டா, அப்புறம் நான் சொல்றதையே கூட நான் கேட்க மாட்டேன் என்று பஞ்ச் டயலாக் விட்டபடியே தொழிலைத் தொடங்கலாம். 

ஆனால், செயல் முடிவை உங்கள் செயலுக்கு தகுந்தாற் போல் அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். சில நேரம் தயாரிப்பு முறைகளை மாற்றலாம்; சில நேரம் கச்சாப் பொருள்களை மாற்றலாம்; சில நேரங்களில் பேக்கிங்கை மாற்றலாம்; சில நேரம் சந்தைப்படுத்தும் முறையை மாற்றலாம்; ஆனால் தயாரிக்கும் பொருளையோ, பொருளின் பெயரையோ அடிக்கடி மாற்றக்கூடாது. 

 எனவே, கொள்கை முடிவுகள் எடுக்கின்ற போது தொழில்முனைவோர் பலமுறை யோசித்து எடுக்க வேண்டும். ஆனால், செயல் முடிவுகளைப் பொறுத்தவரையில் தொழில் முனைவோருக்குக் கீழ் பணிபுரிவோர் கூட சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம். 

 கொள்கை முடிவு எடுக்காமல் செயல் முடிவுகளை சிந்திப்பது அத்தனை சரியல்ல, நீங்கள் எந்தெந்த பொருட்களைத் தயாரிப்பது என்று முடிவெடுக்காமல் அதை எப்படித் தயாரிப்பது? என்ன இயந்திரம் வாங்குவது? அதற்கான கச்சாப் பொருள்கள் குறைவான விலையில் எங்கு கிடைக்கும்? என்றெல்லாம் சிந்திப்பது நேர விரயத்தையே உண்டாக்கும். 

 நீங்கள் எடுக்கின்ற கொள்கை முடிவானது, உங்கள் மனதிற்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். நீங்கள் மிகவும் ரசித்துச் செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் ஈடுபாடு இருக்கும் போது, வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக ரீடெயில் துறையில் நுழைவது உகந்ததல்ல. 

 அதுபோல் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறை முடிவு எடுத்த பிறகு மீண்டும் அதை மறுபரிசீலனை செய்யக் கூடாது. அது தான் வாழ்க்கை என்று கருதி முழு மூச்சாக இறங்கி விட வேண்டும். 

 அதேசமயம், தொழில் முனைவர் தாமே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த நிறுவனம் வளர்ச்சி அடையாது. எப்போது அவர் தமக்குக் கீழ் வேலை பார்ப்போருக்கும் முடிவுகள் எடுக்கும் உரிமையைப் பகிர்ந்தளிக்கிறாரோ, அப்போதுதான் அந்நிறுவனம் வேகமாக வளர்ச்சி பெறும். 

 நீங்களே முடிவு எடுக்க வேண்டும் என்று விரும்பினால் உங்களின் நேரப் பற்றாக்குறையால் எல்லா வேலைகளும் தள்ளிப்போகும். ஆனால் ஊழியர்கள் முடிவு எடுக்கின்ற போது தவறுகள் நிகழக்கூடும் என்று நீங்கள் கேட்பது நியாயம்தான். முடிவு எடுக்கும் முறையை நீங்கள் உங்கள் ஊழியர்களுக்குக் கற்றுக் கொடுத்து விட்டால், இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும். அதனை எப்படி கற்றுக் கொடுப்பது? இதோ சில ஆலோசனைகள். 

  • முதலில் நாள்தோறும்/ வாரந்தோறும்/ மாதந்தோறும் ஏற்படும் ஒரே மாதிரியான நிகழ்வுகளுக்கு முடிவுகள எடுக்க அவர்களை அனுமதிக்கலாம். சில முடிவுகளை எடுக்கவிட்டு அதில் நீங்கள் எப்படி முடிவெடுத்திருப்பீர்கள் என்று புரிய வையுங்கள். பொருள்களைக் கொள்முதல் செய்யும்போது பணத்தின் அடிப்படையில் ஒரு குறித்த தொகை வரை முடிவெடுக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம். 
  • முடிவுகள் எடுக்க பல வழிகள் இருக்கும்போது, அவற்றில் எதை, எந்த அடிப்படையில் நிராகரிப்பது? எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது? என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். 
  • சிற்சில முடிவுகள் தவறாகப் போனாலும், அவை ஏன் தவறாகப் போனது என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். முடிவுகளை அவர்கள் தவறாக எடுத்து விடுவார்களோ என்று பயந்து முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்காமல் இருப்பதும் தவறான முடிவே. 
  • சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படவேண்டும். முடிவுகள் எடுக்கின்ற போது, ஒருவேளை, அதனால் பண இழப்பு ஏற்படுமானால், அதன் அதிகபட்ச இழப்பு எவ்வளவு என்பதை முதலில் கணிக்க வேண்டும். இழப்புகளுக்கு நாம் தயாராகிவிட்டால் அல்லது நாம் இழப்புகளைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டால், அப்படி ஒரு இழப்பு ஏற்படும்போது நாம் மனம் ஒடிந்து போய் விடமாட்டோம். 
  • எந்த முடிவுக்கும் அடிப்படையை அதன் எதிர்மறை மற்றும் நேர்மறை நிகழ்வுகளைக் கணித்துவிட்டு, அவை இரண்டிற்கும் நம்மை தயார்படுத்திக் கொள்வது தான். அப்படிச் செய்தால் முடிவுகள் எடுப்பது எளிது 
  • ஒவ்வொரு முறையும் முடிவுகள் மேற்கொண்ட பிறகு அதன் விளைவுகளை வைத்து நாம் எடுத்த முடிவு சரியானதுதானா அல்லது தவறானதா என்று ஆராய வேண்டும். அதை நிறுவனத்தில் பிறரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு அனுபவமுமே நமது முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். 

எம்.பி.ஏ மாணவர்களுக்கு, ஒரு நிறுவனத்தில் நிகழ்ந்த உண்மையான சிக்கலைச் சான்றாகக் கொடுத்து அந்தச் சூழலில் நீங்கள் இருந்திருந்தால் என்ன முடிவை எடுத்து இருப்பீர்கள் என்று கேட்பது வழக்கம். அதை ஒரு குழு விவாதமாகவும் வைத்து ஆராய்வார்கள். எவ்வளவு அதிகமான சிக்கல்களை நீங்கள் கையாளுகிறீர்களோ அந்த அளவு உங்களது அனுபவ அறிவு மேம்படும். 

 உங்கள் முன் இருக்கிற எல்லா செயல்பாட்டுக்கும் நீங்கள் உடனுக்குடன் முடிவெடுத்துப் பழக வேண்டும். ‘எந்த நிர்வாகியின் மேசையில் கோப்புகளே இல்லையோ அவரே சிறந்த நிர்வாகி என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. 

 ஒரு நிர்வாகியின் வேலை முடிவெடுப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். செயல்படுத்தும் பொறுப்பை பிறருக்குப் பகிர்ந்தளித்து விடவேண்டும். 

 உடனுக்குடன் முடிவெடுப்பதற்கு நிர்வாக தகவல் அமைப்பின் (Managing Information System) அறிக்கைகள் அவசியம். அதாவது வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஒவ்வொரு துறையும் நமது செயல்பாடுகள் குறித்து நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். 

என்ன கொள்முதல் செய்யப்பட்டது? எவ்வளவு கச்சாப் பொருள் இருப்பில் உள்ளது? எவ்வளவு பொருட்கள் விற்பனையாகி இருக்கின்றன? என்பது போன்ற தகவல்கள் முதலாளிக்கு எழுத்துப்பூர்வமாக வரவேண்டும். அவற்றை மட்டும் நிர்வாகத்தினர் தொடர்ந்து கவனித்து வந்தால் அதன் அடிப்படையில் அவர்களால் உடனுக்குடன் முடிவுகளை மேற்கொள்ள முடியும். 

 சில நேரங்களில் சில சிக்கல்களுக்கு முடிவுகள் எடுக்காமல் இருப்பதும் ஒருவகை முடிவாகவே அமைந்துவிடும். நீங்கள் பயன்படுத்தும் கச்சா பொருளின் விலை திடீரென்று உயர்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அப்போது கச்சாப் பொருளை கூடுதல் விலைக்கு வாங்கலாமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறீகள். சரி கொஞ்ச நாள் பார்ப்போம் என்று முடிவை தள்ளிப் போடுவதும் கூட, ஒரு வகையில் சிறந்த முடிவே. 

இரண்டு நாட்கள் கழித்து கச்சாப் பொருட்களின் விலை குறைந்தால் உங்களுக்கு லாபம் தானே? ஒருவேளை இரண்டு நாட்கள் கழித்தும் விலை குறையாதிருந்தால் அப்போதைய தேவைக்கு மட்டும் கச்சா பொருளை கொள்முதல் செய்வது என்று முடிவு எடுக்கலாம். 

 முடிவெடுக்காமல் இருப்பது என்பது சில நேரங்களில் நன்மையைத் தரலாம். சில நேரங்களில் அவை எதிர்மறை விளைவையும் தரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

 முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் அதிகம் படிக்காதவர். ஆனாலும் அவர் ஐ..எஸ் அதிகாரிகளோடு அமர்ந்து முடிவுகளை எடுக்கின்ற போது, ‘அவர் என்ன கேட்கிறார்?, இவர் என்ன சொல்கிறார்?, நாம் என்ன செய்யணும்?’ என்று மூன்று வகையான கேள்விகளைக் கேட்டு முடிவெடுப்பது வழக்கம். 

 அதாவது பொதுமக்கள் என்ன கேட்கிறார்கள்? அதற்கு அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? இரண்டையும் அடிப்படையாக வைத்து நாம் என்ன முடிவெடுத்தால் சரியாக இருக்கும்? என்று ஐ..எஸ் அதிகாரிகளிடம் அவர் கேட்பாராம். அவர்கள் தருகிற பதிலை வைத்து சரி! அப்படியே பண்ணுங்க…” என்பாராம். 

 இந்த ரீதியில் நீங்களும் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டு அதற்கான தகவல்களைப் பெற்று முடிவுகளை மேற்கொள்ளலாம். காமராஜர் வெற்றி பெற்ற மனிதர் என்பதை மறந்துவிடாதீர்கள். 

இராம்குமார் சிங்காரம், Motivational Speaker in Tamil

Comments are closed.