ரொம்ப நாட்களாகவே பாண்டவ சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, ‘நம்முடைய அண்ணன் தர்மர் தர்மதேவனின் புதல்வர். தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும், தானத்தில் சிறந்தவன் என்ற பெயர் கர்ணனுக்குப் போனதெப்படி? என்பதுதான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார். தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார்.
பாண்டவர்களை நோக்கி, இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று இனி உலகம் சொல்லும்!” என்று கூறினார். தங்கள் நெடுநாள் பிரச்னைக்கான தீர்வாகவே இதனைப் பார்த்தார்கள் பாண்டவர்கள்.
உடல் வலுவில் சிறந்த பீமனும், வில்வித்தையில் வீரனாகிய அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும். வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர, தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஐவரின் கூட்டு முயற்சி ஆயிற்றே. மக்கள்
அனைவரும் மகிழ்ச்சி கடலில் மூழ்கும் அளவுக்குத் தானம் நடைபெற்றது. தர்மப் பிரபுவே என்று ஆளாளுக்கு வாழ்த்தினார்கள். அங்கேதான் விளையாடினார் கிருஷ்ணன். அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன. இதனால், அவற்றைத் தானம் வழங்கி முடிக்க முடியவில்லை. கிருஷ்ணரின் செயல் புரியாத தருமரும். அவரது சகோதரர்களும், எவ்வளவு வழங்கியும் எங்களால் தானத்தை முடிக்க முடியவில்லை. இன்னும் அரை நாழிகை மட்டுமே மீதமிருக்கிறது. அதற்குள் இம்மலைகளை வெட்டி முடித்து தானம் வழங்க முடியும் என்று தோன்றவில்லை” என்று தோல்வியை ஒப்புக் கொண்டனர்.
புன்முறுவலுடன் அதனை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.
அதே உத்தரவு. ஆனால், அரை நாழிகைதான் நேரம்.
கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்கமலை மற்றொன்று வெள்ளி மலை: இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் அரை பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,” என்று கூறினார். உடனே கர்ணன், “இதில் யோசிக்க என்ன இருக்கிறது… தர்மம் எனக்குப் பழகிய ஒன்றுதானே! இப்போதே செய்து காட்டுகிறேன்,” என்று கூறி அவ்வழியே சென்ற இருவரை அழைத்தான். “உங்களுக்கு தானம் கிடைத்ததா?” என்று கேட்டான் “இப்போதுதான் தகவல் கிடைத்து தாமதமாக வந்தோம்.” என்று அவர்கள்
இழுத்தனர். அவர்களது தோளில் தட்டிய கர்ணன். “இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.
கிருஷ்ணர் சிரித்தார். பாண்டவர்கள் தைக்குனிந்தனர்.
இதைத்தான் திருவள்ளுவர், ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!” என்று பெரிதாக சிந்திக்கச் சொன்னார். அளிப்பது என்று முடிவெடுத்துவிட்ட பிறகு என்ன கிள்ளிக் கொடுப்பது… அள்ளிக் கொடுக்க வேண்டியது தானே!
ஒரு வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்து வந்த பன்றிக்கும் பசுவுக்கும் நடந்த உரையாடல் இது.
பசுவிடம் கேட்டது பன்றி! “உன்னை மதிப்பதுபோல் யாரும் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள். உருவத்தில் பெரிதாக இருப்பது காரணமா..? அப்படிப் பார்த்தால், நீ நம் எழுமானனுக்கு பால் மட்டும் தான் தருகிறாய். நான் மாமிசமாக என்னையே முழுதாக அர்ப்பணிக்க போகிறவன். இருந்தும் ஏன் என்னை ஒருவரும் மதிப்பதில்லை…? பசு கறியது, “நண்பா! நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். அனால், நான் உயிருடன் இருக்கும்போதே தினம் தினம் மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். நீ உயிருடன் இருக்கும்போது அப்படி எந்த உதவியும் செய்வதில்லையே!” என்றது.
உயிருள்ளபோதே உலகுக்கு உதவியானவராக இருங்கள். உறவினர்களிடம் கர்ணனாக இருங்கள்… வியாபாரத்தில் உங்களுக்குப் பொருட்கள் அளித்தவர்களுக்கும், பணியாளர்களுக்கும் சேர வேண்டிய தொகையை முன்கூட்டியே அளித்து மகிழுங்கள்.. மனைவி, குழந்தைகள் எதிர்பார்ப்பை அறிந்து கேட்கும் முன் அவற்றை நிறைவேற்றும் பசுவாகிப் பாருங்கள்…
உலகம் உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். வெற்றிக்கான மகிழ்ச்சி மந்திரம் இது!
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker