நம் பலரிடையே உள்ள ஒரு முக்கிய பழக்கம் என்னவென்றால், நல்ல நேரத்திற்காக காத்திருந்து உள்ள நேரத்தையும் வீணாக்குவது. பொதுவாக பணக்காரர்கள் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை. நல்ல வேலை செய்வது என்று தீர்மானித்துவிட்டால், அதற்கு நல்ல நேரம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை. இதுதான் அவர்கள் பாலிசி.
அதாவது, நல்ல நேரம் பார்க்க வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. அதேசமயம், நல்ல நேரத்திற்காகக் காத்திருந்து வாய்ப்பைத் தவற விட்டுவிடக் கூடாது என்பதை நீங்களே புரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் இரவு உறங்கும் முன், அன்றைக்கு காலையிலிருந்து இரவு வரை எப்படி உங்கள் நேரத்தைச் செலவழித்தீர்கள் என்று பட்டியலிடுங்கள். இதற்கு ‘டைம் ஆடிட்‘ (Time Audit) என்று பெயர்.
ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் போன்ற வி.ஐ.பி.களெல்லாம் பொது நகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறபோது அவர்களை ஒவ்வொரு நிமிடமும் எப்படி செலவழிக்கப்படும் என்று திட்டமிடும் வகையில் ‘மினிட் டு மினிட்‘ (Minute to Minute) புரோகிராம் உருவாக்கப்படும். இதன் அர்த்தம் என்னவென்றால், அவர்களது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது என்பதாகும்.
நாம் அந்த அளவிற்கு நிமிடவாரியாக நம்முடைய நேரத்தை திட்டமிடாவிட்டாலும்கூட, மணிவாரியாகவாவது திட்டமிட வேண்டும்.
தூங்குவதற்கு எட்டு மணி நேரம்; அலுவலக வேளைக்கு எட்டு மணி நேரம்; அலுவலகம் சென்று வர இரண்டு மணி நேரம்; குளித்தல், சாப்பிடுதல் போன்ற தினசரி கடமைகளுக்கு இரண்டு மணி நேரம் என ஒதுக்கிக் கொண்டால்கூட, உங்களுக்கு எப்படியும் நான்கு மணி நேரம் நாள்தோறும் மிச்சம் இருக்கும்.
மனிதருக்கு மனிதர் இந்தக் கணக்கு வேறுபடும் என்றாலும், நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், திட்டமிடப்படாத காரணத்தால் நாள்தோறும் சில மணி நேரங்கள் ஃபேஸ் புக், டுவிட்டர், வாட்ஸஅப், இன்டர்நெட், டி.வி. டெலிபோன் அரட்டை, தேவையற்ற விவாதம் என வீணாகக் கழிகின்றன என்பதுதான்.
இவற்றுக்கெல்லாம் நீங்கள் நேரமே செலவழிக்கக்கூடாது என்று நாம் சொல்லவில்லை, நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டும் செலவழித்துவிட்டு, மீதமுள்ள நேரத்தை உங்கள் இலக்கு நோக்கி பயணிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
சனி, ஞாயிறு போன்ற வேலையில்லா விடுமுறை நாட்களில் உங்களது நேரத்தை எப்படி வீணாகக் கழிக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த நேரத்தையும் எப்படி பயனுள்ள வகையில் கழிக்கலாம் என்றும் திட்டமிடலாம்.